பரப்புரை; சேலம், திருப்பூர் மாவட்டங்கள் தீவிரம்!

சேலம்: 06.07.2026 திங்கள் மாலை 4.00 மணிக்கு கருப்பூரில் சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் இல்லத்தில், மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி தலைமையில், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார் முன்னிலையில் நடைபெற்றது.

கலந்துரையாடல் கூட்டத்தில் கடந்த 28.06.2026 அன்று திருப்பூரில் நடைபெற்ற தலைமைக்குழு தீர்மானங்களின் அடிப்படையில் விவாதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டக் கழகத்தின் சார்பில் தென்மாவட்டங்களுக்கு பரப்புரை பயணம் மேற்கொள்வது குறித்தும், பயணக் குழுவின் தொடக்க நிகழ்வாக 05.08.2026 அன்று மாலை 4.00 மணிக்கு சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பரப்புரையை சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியில் தொடங்குவது எனவும், அதன்பிறகு பரப்புரைக் குழு நாகர்கோவில் சென்றடைந்து காரைக்குடி நிறைவு விழா மாநாட்டு திடலை 12.08.2026 அன்று வந்தடையும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

அதிகாரத்தில் கால் பதிக்காத குரலற்றசமூகங்களின் உரிமைக்கு கருத்தரங்குகள் நடத்துவது, தந்தை பெரியார் பிறந்தநாளை குடும்ப விழாவாக நடத்துவது, பிரச்சார அணுகுமுறை, நன்கொடை திரட்டுதல், பயணப் பெயர் பட்டியல் தயாரிப்பு ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர்கள் பிரபாகரன், தங்கதுரை, வெற்றிமுருகன், தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளர்கள் நாகராஜ், கவியரசு, கோகுல், கொளத்தூர் நகரச் செயலாளர் அறிவுச்செல்வன், வனவாசி நகரச் செயலாளர் உமாசங்கர், சிந்தாமணியூர் பகுதி தலைவர் ரவிக்குமார், செயலாளர் ஜெயபிரகாஷ், அருண்பாண்டியன், பாலாஜி, தோழர் இளங்கோவன், சேலம் மாநகர பொறுப்பாளர்கள் தேவராஜ், பிரபு, ஆத்தூர் நகரச் செயலாளர் கணபதி, மேட்டூர் அம்ஜத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்: மாவட்டக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் 06.07.26 திங்கட்கிழமை மாலை 05.00 மணிக்கு வீரபாண்டி பிரிவு பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்கு கழகப் பொருளாளர் துரைசாமி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் முகில்ராசு முன்னிலை வகித்தார்.

கழக சமூக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராசன் தலைமைக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தோழர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். அடுத்ததாக தலைமைக் குழு தீர்மானங்களை செயல்படுத்துவது குறித்த வேலைத் திட்டங்களை கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு ஆகியோர் தோழர்கள் முன் வைத்தார்கள்.அதனை தொடர்ந்து கலந்து கொண்ட தோழர்கள் தங்களின் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். அதன் அடிப்படையில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1) எண்ணிக்கை, பொருளாதார பலமும் இல்லாமல் இருக்கிற உடைவெளுத்தல், சவரம் செய்தல், கல் உடைத்தல், கூடை முடைதல், குதிரை வண்ணார் போன்றோர் ஒவ்வொரு கிராமத்திலும் 50-க்கு மிகாமல் வாழ்ந்து கொண்டிருக்கிற ஜாதிகளாய், ஊராட்சி மன்றத்தில் உறுப்பினராகக் கூட வரமுடியாத நிலையில், தங்கள் கருத்துக்களை – கோரிக்கைகளை சமூகத்தின், அரசின் காதுகளுக்கு எட்டச் செய்யும் வலிமையும் அற்றவர்களாக – சீர் மரபினர் (DNC/DNT) என்று பட்டியலிடப்பட்டுள்ள ஜாதியினரும் – இன்று வரை அரசியல் அதிகாரமோ, அரசுப் பதவிகளையோ பெறும் வாய்ப்பே கிட்டாதவர்களாக அமிழ்த்தபட்டுக் கொண்டிருக்கும் மக்களின் பாடுகளைப் பொதுச் சமூகத்தின் பார்வைக்கு கொண்டு வந்து அவர்களுக்கான உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நோக்கத்துடன் “குரலற்ற மக்களின் குரலாக” ஒலிக்கும் வகையில் கழகத்தின் சார்பில் அம்மக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் கருத்தரங்குகள் நடத்தப்படும் என தலைமைக் குழு தீர்மானம் நிறைவேற்றி இருப்பதற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் பாராட்டுக்களும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

2) மாற்றத்தை நோக்கிய வாழ்வியல் பரப்புரை!”-சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு! எனும் தலைப்பில், தமிழ்நாட்டின் மூன்று முனைகளில் இருந்து புறப்படும் பரப்புரை பயணத்திற்கு திருப்பூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் பேராவூரணியிலிருந்து தொடங்கும் பரப்புரைப் பயணத்தில் பங்கேற்று சிறப்பாக நடத்துவது எனவும் அதில் பங்கேற்க வாய்ப்புள்ள தோழர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டனர். தொடக்க விழா மற்றும் நிறைவு விழா மாநாட்டிற்கு திருப்பூரில் இருந்து பெரும் திரளாக தோழர்கள் கலந்து கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

3) செப்டம்பர்-17 தந்தை பெரியாரின் பிறந்த நாளை குடும்ப விழாவாக முன்னெடுப்பது என்று தீர்மானித்துள்ள தலைமைக் குழுவின் முடிவின் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட கழகத்தின் சார்பில் கழகக் குடும்பத்தினரை ஒருங்கிணைத்து பெரியார் பிறந்த நாள் குடும்ப விழாவை மிகச் சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

மாவட்ட ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் மாநகரச் செயலாளர் மாதவன், மாநகரத் துணைத் தலைவர் மாரிமுத்து, தெற்கு பகுதி பொறுப்பாளர் இராமசாமி, மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர் கணக்கன், ஒன்றியச் செயலாளர் சிவானந்தம், வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன் குணா ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர். நிறைவாக ஆறுமுகம் நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் இதழ் 16072026

You may also like...