‘தாலி செண்டிமெண்ட்’தேவைதானா?

தாலி சென்டிமென்டை ஓவராகத் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் காட்டுவதால் சில பெண்களிடையே வேறுமாதிரியான பாதிப்பு உண்டாவதை நான் கவனித்திருக்கிறேன். தாலி என்பதைக் கணவனின் மறுபிம்பமாகக் கருதி கண்களில் ஒற்றிக்கொள்கிறோம், குங்குமம் வைக்கிறோம், கணவன் இறந்த பிறகு தாலி அணியக் கூடாது என்றும் சொல்கிறோம். இந்தக் கருத்தை வலியுறுத்திச் சொல்வதால் ஓர் எதிர்மறை சிந்தனை சிலரிடம் உண்டாகிறது. ‘ஒரு மலர் ஒரு முறைதான் பூக்கும், கணவன் கட்டிய தாலி என்னுடைய உடம்பில் ரத்த நாளங்களாக இருக்கிறது’ என்றெல்லாம் வசனங்களை அமைத்துவிடுவதால் கணவனை இழந்த அல்லது விவாகரத்து ஆன சில பெண்கள் மறுமணம் செய்துகொள்ளவே தயங்குவது எனக்குத் தெரியும்.

படங்களில் தாலி சென்டிமென்ட் வைத்து அதைப் பெண்களைப் பார்க்க வைப்பதன் மூலம் நன்றாக வியாபாரம் ஆகிறது எனப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், இதே தாலி சென்டிமென்ட் நான் ஏற்கெனவே குறிப்பிட்ட விதத்தில் எதிர்மறையாகப் பெண்களைப் பாதிப்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மறுமணங்கள் அதிகரித்துவிட்ட இந்தக் காலத்திலும் கணவனை இழந்த, விவாகரத்தான இளம்பெண்கள் மறுமணம் செய்துகொண்டால் தங்கள் புனிதத்தன்மை போய்விடுமோ என்கிற பயத்தில் மறுதாலி கட்டிக்கொள்ள மறுப்பதையும் நாம் ஆங்காங்கே பார்க்கிறோம்.
எனக்குத் தெரிந்த ஒரு பெண் கணவரை இழந்தவர். சரியான வருமானம் இல்லாமல் தவித்தவருக்கு எப்படியோ யார் மூலமாகவோ சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. படப்பிடிப்பு தளத்துக்கு வந்து காட்சிகளையும் வசனங்களையும் பார்த்தவர் நடிக்க மறுத்துவிட்டார். ஏனென்றால், அவருக்குத் திருமணம் நடைபெறுவது போல அன்றைய காட்சி உருவாக்கப்பட்டிருந்தது. “கணவர் மறைந்துவிட்டாலும் அவர் நினைவிலேயே வாழும் எனக்கு இந்த மாதிரி காட்சியில் நடிப்பது அவருக்குத் துரோகம் செய்வதைப் போன்றது. என்னால் முடியாது” என்று சொல்லி படப்பிடிப்புத் தளத்தை விட்டு வெளியேறி, தன் வருமானத்தை இழந்தார். கணவரே இல்லை. பிறகு எப்படி அவருக்குத் துரோகம் செய்ய முடியும்? அந்தப்பெண் ஏனோ இந்த விதமாகச் சிந்திக்கவே இல்லை.

கணவர் இறந்த பிறகும் அவரை நினைத்துக்கொண்டே வாழ்வதுதான், ஒரு பெண்ணின் விருப்பம் என்றால் தாராளமாக அப்படியே வாழட்டும். தவறே இல்லை. ஆணுக்குக் கிடைக்கிற எல்லாமே பெண்ணுக்கும் கிடைப்பதுதானே சமூகநீதி? அது கிடைக்கிற காலத்தில் அதற்கு எதிரான சிந்தனைகளை விதைப்பது தவறு.

ஆனால், இன்னொரு துணையோ வழிகாட்டியோ தேவை, நான் சாய்ந்துகொள்ள ஒரு தோள் அவசியம், என் குழந்தைகளை வளர்க்க ஒரு துணை வேண்டும் என்று ஓர் ஆணோ ஒரு பெண்ணோ நினைத்தால் அதற்கெல்லாம் தடைபோடுவது போலத் திரைப்படங்களிலும் சீரியல்களிலும் தாலி சென்டிமென்டை வலியுறுத்தக் கூடாது.

ஒரு பெண் விதவைக்கோலம் பூணுவதைக்கூட ஏன் இப்படி விலாவாரியாகக் காட்ட வேண்டும்? அந்தப் பழக்கமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகின்றன. அவை இன்னும் அடியோடு அழிய வேண்டும் என்று பெண்கள் அமைப்புகள் குரல்கொடுத்து வருகிற நிலையில் பொட்டை அழிப்பது, வளையலை உடைப்பது, வெள்ளைப்புடவை உடுத்துவதுமாக ஏன் உருக்கமாகக் காட்சி அமைக்க வேண்டும்? இப்போதெல்லாம் யாரும் வெள்ளைப்புடவை உடுத்துவதில்லையே. காலம் மாறிவிட்ட பிறகும் ஏன் இந்தப் பிற்போக்குச் சிந்தனைகளைப் பொழுதுபோக்கு ஊடகங்கள் வாயிலாக மக்களிடையே பரப்ப வேண்டும்? ஆணுக்குக் கிடைக்கிற எல்லாமே பெண்ணுக்கும் கிடைப்பதுதானே சமூகநீதி? அது கிடைக்கிற காலத்தில் அதற்கு எதிரான சிந்தனை களை விதைப்பது தவறு.

நம்மிடம் சொல்லப்படும் எதையும் பகுத்தறிந்து, சிந்தித்து, விளக்கம் கேட்டு ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, ‘சமுதாயம் என்ன சொல்லுமோ’ என்கிற பயத்தில், தயக்கத்தில் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கக்கூடிய மறுமணத்தை மறுத்த நபர்களை நான் அறிவேன். என் எழுத்தாள நண்பர் ஒருவர் திருமணமான மறுவாரத்தில் இருந்தே தாலி அணிவதில்லை. அதை அவர் வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார். பல ஆண்டுகள் குழந்தைகளோடு மகிழ்ச்சியோடுதான் அவர் வாழ்ந்தார். அவரது வெளிப்படைத்தன்மையை நான் பாராட்டுகிறேன். தாலியில் குங்குமம் வைப்பது உங்களுக்குப் பிடிக்கிறதா? கட்டாயம் செய்யுங்கள். அதேநேரம் யாராவது, ‘நான் தாலி அணிவதில்லை. அதில் எனக்கும் என் கணவருக்கும் நம்பிக்கை இல்லை’ என்று சொன்னால் அவரையும் நாம் மதிக்க வேண்டும்.தாலிக்குத் தினமும் குங்குமம் வைத்து வணங்கும் ஒரு பெண் வடநாட்டுக்கு மாற்றலாகிச் சென்ற பிறகு வீட்டை விட்டு வெளியே செல்லும்போதெல்லாம் தாலியைக் கழற்றி வைத்துவிட்டுச் செல்வார்.

ஏன் என்று கேட்டதற்கு, “இங்கே வெளியே செயின் பறிப்பு சம்பவங்கள் நிறைய நடப்பதால் நான் தாலிசெயினைக் கழற்றி வைத்துவிட்டுத்தான் வெளியே செல்வேன்” என்றார். எனக்குச் சிரிக்கத் தோன்றியது. மனதளவில் நிஜமாகவே நாம் தாலியை மதிக்கிறோமா அல்லது அது உருவாக்கப்பட்டிருக்கும் தங்கத்தை மதிக்கிறோமா?
(எழுத்தாளர் சிவசங்கரி ‘தமிழ் இந்து’ நாளேட்டில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி)
படங்களில் தாலி சென்டிமென்ட் வைத்து அதைப் பெண்களைப் பார்க்க வைப்பதன் மூலம் நன்றாக வியாபாரம் ஆகிறது. ஆனால் இதே தாலி சென்டிமென்ட் எதிர்மறையாகப் பெண்களைப் பாதிப்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள
வேண்டும்.

பெரியார் முழக்கம் இதழ் 16072026

You may also like...