பொன்னம்பலனார் நடத்திய கொள்கைப் போராட்டங்கள்
வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். உடையார்பாளையம் பொன்னம்பலனார் குறித்து எழுதிய கடந்த இதழில் வெளிவந்த கட்டுரையின் தொடர்ச்சி…
வேலூர் கந்தசாமி கண்டர் பள்ளியில், பொன்னம்பலனார் பணியாற்றிய காலத்திலேயே தனது சொந்த ஊரான செந்துறையில் இருந்து ஆண்டுக்கு, ஏழெட்டு மாணவர்களை அழைத்துச்சென்று, பரமத்தி வேலூரில் தன் வீட்டிலேயே தங்கவைத்து, அவர்களைப் படிக்கவைத்தார். பின்னர், அங்கிருந்து பணியில் நீக்கப்பட்டபோது, சேலத்தில் பணி வழங்கிட அவருக்குப் பரிந்துரைத்தவர் தந்தை பெரியார். கந்தசாமி கண்டர் பள்ளியில் இருந்து பொன்னம்பலனார் நீக்கப்பட்டபோது, அவரோடு ஏழு ஆசிரியர்கள் வேலையை விட்டுவிட்டனர். ஏறத்தாழ 6 ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பின்னர், முசிறிக்குப் பணி மாறுதல் அடைந்தார்.
அப்போது, திருச்சியில் பெரியாரின் கூட்டம் எங்கு நடைபெற்றாலும், பொன்னம்பலனார் சென்று விடுவார். இவர் பணியாற்றிய பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர் சுப்புசாமி அய்யர். அந்தக் காலத்தில் பள்ளியில் இறைவணக்கப் பாடலும் நாட்டுப்பண்ணும் தலைமை ஆசிரியர் விருப்பப்படியே பாடப்படும். 10.11.1952 அன்று காலை, பாரதியாரின் `வாழிய செந்தமிழ்’ பாடல் பாடப்பட்டது. அந்தப் பாடலில், `ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும் சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!’ என்ற வரிகளை மாணவர்கள் பாடியதைக் கேட்டதும் `நிறுத்துங்கள்’ எனக் குரல் கொடுத்தார் பொன்னம்பலனார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியர், `டேய் ஃபூல்’ எனத் திட்ட, `தமிழாசிரியரின் மானம் காக்க ஆரிய ஆசான் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என வலியுறுத்தினார்.
மாணவர்கள் பலர், தலைமை ஆசிரியரை விட தமிழாசிரியர்மீது பேரன்பு கொண்டிருந்ததால், `தமிழ் வாழ்க, தமிழாசிரியர் வாழ்க, ஆரிய ஆசிரியரே மேடைக்கு வா’ என முழக்கமிட்டனர். பின்பு மாணவர்களை அமைதிப்படுத்தி, வகுப்புகளுக்கு அனுப்பினார் பொன்னம்பலனார். ஆனால், மறுநாளே பணிநீக்க ஆணை கிடைத்தது. இதை அறிந்த மாணவர்கள், ஊர்வலம் நடத்தி பொன்னம்பலனாருக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கிட, இணையதளம் இல்லாத அந்தக் காலத்திலேயே தமிழ்நாடு முழுக்க செய்தி சென்று சேர்ந்தது. இது `இராவண – ஆரியப் போராட்டம்’ என `விடுதலை’ கட்டுரை தீட்ட, விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றது. பொன்னம்பலனாருக்கு ஆதரவாக இருந்த மூன்று ஆசிரியர்கள், வேறு ஊர்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
23 மாத சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, பொன்னம்பலனாரின் பணிநீக்கம் செல்லாது, 23 மாத ஊதியத்தைக் கொடுக்க வேண்டுமென்று தீர்ப்பு வந்தது. அப்போதுதான், முசிறியில் இருந்து தனது சொந்த ஊரான செந்துறைக்கு வந்து சேர்ந்தார் பொன்னம்பலனார். ஆனால், திருச்சி முழுவதும் பரவலாக அறியப்பட்ட முகமாக மாறியிருந்தார் பொன்னம்பலனார். இத்தனை இடையூறுகளுக்குப் பிறகு மீண்டும் பணியில் சேர்ந்திருந்தாலும், கருப்புச்சட்டையும் `விடுதலை’ நாளிதழும் இல்லாமல், அவர் பள்ளி வளாகத்தில் ஒருநாளும் கால்வைத்ததில்லை. பாவேந்தர் பாரதிதாசனின் சீடரும் `முல்லைச்சரம்’ இதழின் ஆசிரியருமான கவிஞர் பொன்னடியான், திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழியின் தந்தை அண்ணாமலை ஆகியோர் செந்துறை பள்ளியில், பொன்னம்பலனார் ஆசிரியராக இருந்த காலத்தில் படித்தவர்கள். பள்ளி ஆண்டு விழா, இலக்கிய மன்ற விழாக்களில் பெரியாரும் பாவேந்தரும் பாவாணரும்தான் சிறப்பு அழைப்பாளர்களாக இருப்பார்கள். அப்போது கல்வி அதிகாரியாக இருந்தவர் நெ.து.சுந்தரவடிவேலு என்பதால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் துணிந்து செயல்பட்டார்.
செந்துறை பள்ளியில், பொன்னம்பலனார் பணியாற்றிய 1954-1957-ஆம் ஆண்டு வரையிலும் அங்கு தலைமை ஆசிரியராக இருந்தவர் பார்ப்பனர். அவருக்கு தமிழும் பிடிக்காது, தமிழாசிரியரும் பிடிக்காது. தமிழ்ப்பண் பாடப்படுவதை நிறுத்தினார், அந்தத் தலைமை ஆசிரியர். அப்போது மாணவர் தலைவராக இருந்தவர் பொன்னடியான். அதனால், பள்ளியிலேயே ஒரு மொழிப்போர் மூண்டது. பொன்னடியான் பின்னால் மாணவர்கள் அணிவகுத்து எதிர்ப்புக் கரம் கோர்க்க, தலைமை ஆசிரியர் கொட்டம் அடங்கி, அனைத்தும் தனித்தமிழ்மயமானது. இந்த மொழிப்போராட்டத்தை `விடுதலை’ ஒவ்வொரு நாளும் செய்தியாக்கி, தமிழ்நாடு தழுவிய அளவில் கவனம் ஈர்க்கச் செய்தது.
வருகைப் பதிவின்போது, `பிரசன்ட் சார்’ என்று சொல்கிற வழக்கத்தை மாற்றி, `உள்ளேன் அய்யா’ என்று மாணவர்களைச் சொல்லவைத்தார். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தமிழாசிரியர்கள் வகுப்பில் `உள்ளேன் அய்யா’ என்று மாணவர்கள் சொல்வது நிரந்தர வழக்கமாகிவிட்டது. `நேர் நில்’, `பாடுக’, `செல்க’ என அனைத்தும் தமிழானது. பள்ளிக்கூடத்தில் மட்டுமல்ல, ஊரிலும் ஜாதிய முறைக்கு எதிரான துணிச்சலான செயல்களில் ஈடுபட்டார். சுயமரியாதைத் திருமணங்களைத் தலைமையேற்று நடத்தி வைத்தார். 1957-இல் சேலம் தமிழ்ப்பேரவை சார்பில், 500 வெண் பொற்காசுகளை பெரியார் வழங்கி, தமிழ் மறவர் பட்டத்தையும் அவருக்குச் சூட்டினார். இந்த நிகழ்ச்சியில்தான் தேவநேயப் பாவாணருக்கு `திராவிட மொழி நூல் ஞாயிறு’ பட்டமும் வழங்கப்பட்டது.
1959-ஆம் ஆண்டு, பள்ளியில் ஒரு நாள் அவர் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த கல்வி அலுவலர் ரத்தின சாஸ்திரி, உடனடியாக பொன்னம்பலனாரை அரவக்குறிச்சிக்கு இடம் மாற்றிவிட்டார். இதற்கு ஒரே காரணம், அவர் கருப்புச் சட்டையில் இருந்தார் என்பது மட்டும்தான். “உமது முடி கருப்பாக இருக்கிறதே? அதை நீக்கிவிட்டு நீர் வரலாமே!’’ என அந்தக் கணமே பதிலடி கொடுத்தார் பொன்னம்பலனார். அரவக்குறிச்சியிலும் தலைமை ஆசிரியருடன் இணைந்து காமராசர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்திற்காக மாலை வேளைகளில் அரிசி, நெல் வாங்கி வருவது எனச் செயல்பட்டுள்ளார் பொன்னம்பலனார். அரவக்குறிச்சி தலைமை ஆசிரியர் பொன்னம்பலனாருக்கு நண்பர் என்பதால், பொன்பரப்பிக்கு மாறுதலாகி வந்துவிட்டார். பணி ஓய்வுக்குப் பிறகு, செந்துறையில் அவரின் பெரியாரியப் பணி நீண்டது. இறுதியில் புற்றுநோய் காரணமாக, 2.12.1973 அன்று காலமானார் பொன்னம்பலனார். அந்த நாளில் அரியலூர் மாவட்டத்தில் உயர்நிலைப் பள்ளிகள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு, அவரிடம் பயின்ற ஆசிரியர்கள், ஆயிரக்கணக்கான மாணவர்கள் புடைசூழ, இறுதி ஊர்வலம் நடைபெற்றது. சென்னை, பொது மருத்துவமனையில் அவர் சிகிச்சையில் இருந்த காலகட்டத்தில் பெரியார் அவரைச் சந்தித்து உரையாடியுள்ளார்.
பொன்னம்பலனார் மறைந்த அதே மாதம் 24-ஆம் நாள், பெரியாரும் காலமானார். இருவருக்கும் சேர்த்து கீழமாளிகையில் ஒன்றாகச் சிலை வைத்திருக்கிறார்கள். பொன்னம்பலனார் வெறும் தமிழ் அறிஞராக மட்டும் இல்லாமல், பெரியாரின் பகுத்தறிவுப் போர்வாளாகவும் திகழ்ந்தார். ஆசிரியராக மட்டுமல்லாமல் சமூகத்தைச் சீர்திருத்தும் செயல்பாட்டாளராகவும் திகழ்ந்தார். அவரால் கருப்புச்சட்டை அணிந்த மாணவர்கள் அதை அடுத்தடுத்த தலைமுறைக்கும் கடத்தி, இன்றைக்கும் செந்துறையைத் திராவிட இயக்கக் கோட்டையாகவே வைத்திருக்கிறார்கள்.
பெரியார் முழக்கம் இதழ் 25062026
