கொளத்தூர் மணி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மயூரப்ரியன் உரை மாணவர்களுக்கு சமூக அரசியல் பயிற்சி
இளைய தலைமுறைக்கு சமூக அரசியல் வரலாறுகளைப் புரிய வைக்கும் தேவை உருவாகி இருக்கிறது. இட ஒதுக்கீட்டு உரிமையைப் பயன்படுத்தி கல்வி வேலைவாய்ப்புகளைப் பெறும் மாணவர்களுக்கு அந்த இட ஒதுக்கீட்டின் வரலாறு, நோக்கம் பற்றிய புரிதல் இருப்பது இல்லை! சமூகம் மற்றும் கல்வி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு ஜாதி ஒரு அடையாளமாக ஏன் ஏற்கப்பட்டது என்ற சமூகப் புரிதலை இளைஞர்களிடம் விளக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இட ஒதுக்கீட்டு கொள்கைகள் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பு மனுஸ்மிருதி அடிப்படையிலேயே சமூகத்தில் இட ஒதுக்கீடு இருந்தது. அதன்படி பிராமணர்களே கல்வி கற்கும் உரிமையை பெற்றிருந்தார்கள்; ‘சூத்திரர்கள்’ பிராமணர்களின் அடிமைகளாகவும், அவர்களுக்கு கல்வியே கிடைக்காமல் தடை செய்யப்பட வேண்டும் என்பதுமே எழுதப்படாத சமூக சட்டமாக இருந்தது. சமூகத்தை மனுஸ்மிருதி வழியாக பார்ப்பனர்கள் தங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருந்தார்கள். சேர, சோழ, பாண்டியர்கள் மன்னர்களாக இருந்தாலும் அவர்கள் பள்ளிகளைக் கட்டவில்லை; கோயில்களைக் கட்டி பார்ப்பனர்களை அதிகாரத்திற்கு கொண்டு வந்தார்கள். மன்னர்களை வழிநடத்துபவர்கள் பார்ப்பனர்களாகவே இருந்தார்கள்.
எந்த ஒரு தமிழ் மன்னரும் திருக்குறளைப் பரப்பவில்லை; சமஸ்கிருத, வேத பாடசாலைகளையே நடத்தினார்கள். பார்ப்பனர்களுக்கு கிராமங்களை தானமாக வழங்கினார்கள். அவர்கள் எந்த வரியையும் செலுத்த வேண்டியது இல்லை. இதை எதிர்த்துதான் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கங்கள் போராடி இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது என்ற வரலாறுகளை இப்போது இளைஞர்களுக்கு கொண்டு சேர்க்கும் ஒரு முக்கிய பணியை இந்திய சமூக ஆய்வு மையம் (CISS) முன்னெடுத்துள்ளது. போராசிரியர் கனகவிநாயகம் அவர்களின் முன்னெடுப்பில், CISS (Centre for Indian Social Studies) சமூக அறக்கட்டளை சார்பாக சமூக அரசியல் பயிலரங்கம் மே-16,2026 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செங்கல்பட்டு மறைமலை நகர் பகுதியில் உள்ள அய்யனார் மெஸ்சில் நடைபெற்றது.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், இன்றைய அரசியல் சூழலில் ஏன் திராவிடக் கொள்கை அவசியம் என்பதை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைத்தார். ஆரம்பகால இடஒதுக்கீட்டுப் போராட்டங்கள் முதல் இன்று வரை நடைபெற்று வரும் 10% இட ஒதுக்கீடு எதிர்ப்பு அரசியல் மற்றும் சமூக நீதி சார்ந்த போராட்டங்கள் வரையிலான பல முக்கிய வரலாற்றுப் பின்னணிகளை மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். மாணவர்களின் கேள்விகளுக்கு தெளிவான விளக்கங்களை அவர் வழங்கிய விதம் பயிலரங்கிற்கு மேலும் ஆழத்தை சேர்த்தது. “ஒருவருக்கு என்ன வேண்டும் எனத் தெரிந்து, அவர்கள் அதைப் பெறுவதற்கான உதவி செய்வதும்”, “யார் ஒருவர் உரிமை பெறுவதைத் தடுக்கும் தடைகளை உடைப்பதுமே அரசியல்” என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், “சரி எனத் தெரிந்தும் அதை நடைமுறைப்படுத்தாமல் இருக்கும் அறிவாளிகளுக்கும், எதுவுமே தெரியாமல் இருக்கும் முட்டாள்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை; எனவே சரி எனத் தெரிந்து அதை நடைமுறைப்படுத்தும் நபர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
அவரைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மயூரப்ரியன் பேசுகையில், இளமையூட்டும் உரைநடை மற்றும் மாணவர்களை ஈர்க்கும் செயல்முறை அணுகுமுறையால் வகுப்பை உயிர்ப்பூட்டினார். மாணவர்களுடன் பல சுவாரஸ்யமான விளையாட்டு மற்றும் கலந்துரையாடல்களை நடத்தி, அதன் வாயிலாக இடஒதுக்கீட்டின் தேவையையும் சமூக நீதியின் அடிப்படைகளையும் மிகவும் எளிமையாகவும், மாணவர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் புரிய வைத்தார். அவரின் உரை மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், பயிலரங்கத்தை மேலும் சிறப்புமிக்க ஒன்றாக மாற்றியது.
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் திராவிட சிந்தனையையும், சமூக நீதியின் அரசியல் அவசியத்தையும் குறித்து விழிப்புணர்வை உருவாக்கிய ஒரு பயனுள்ள, சிந்திக்க வைக்கும் பயிலரங்கமாக இந்நிகழ்வு அமைந்தது. இதில் 40 மாணவ, மாணவியர், இளைஞர்கள் மற்றும் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன், கவியரசு ஆகிய கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 21052026
