துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வா? தமிழ்நாடு ஏற்காது! எதிர்த்து வெல்லும்!

‘அலைடு ஹெல்த்’ எனப்படும் துணை மருத்துவப் படிப்புகளுக்கும் ‘நீட்’ தேர்வு கட்டாயம் என்று அறிவித்திருக்கிறது தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம் (என்.சி.ஏ.எச்.பி.).

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், மற்றும் படிப்புகள் அனைத்திற்கும் தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்பையும், கல்வி பொதுப்பட்டியலில் உள்ள அரசியலமைப்பு நியதிகளையும் மீறி நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கிராமப்புற ஏழை- எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து, மருத்துவக் கட்டமைப்பை பலவீனப்படுத்தும் நீட் தேர்வு கூடாது என்று தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு. இந்நிலையில் மருத்துவ துணைப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு என்பது மோசடியானது. நீட் தேர்வில் வெற்றி பெற முடியாதவர்களின் அடுத்த கட்ட மருத்துவக் கனவாக துணை மருத்துவப் படிப்புகள் உதவுகின்றன.

குறிப்பாக பி.எஸ்சி, பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, மருத்துவஆய்வகத் தொழில்நுட்பம், ரேடியாலஜி, ஆப்டோமெட்ரி, டயாலிசிஸ் உட்பட 56 வகை படிப்புகள் துணை மருத்துவப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இவற்றுக்கு நீட் தேர்வு கிடையாது. பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள், இதில் எதாவது ஒரு பாடத்தை எடுத்து படிக்கலாம்.

இந்நிலையில், 2023-இல் நர்சிங் படிப்பையும் நீட் தேர்வின் கீழ் கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டது. ஆனால் `இது மாநில திட்டத்திற்கானது’ என்று தமிழ்நாடு அரசு அப்போதே மறுப்பு தெரிவித்ததால் ஒன்றிய அரசு அம்முயற்சியைக் கைவிட்டது.

தற்போது 2026 – 27 கல்வியாண்டு முதல் பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி உட்பட பல்வேறு துணை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டதற்கு தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. துணை மருத்துவப் படிப்புகளை தேர்ந்தெடுப்போரில் 90% பேர் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். இதற்கும் தேசிய அளவில் நீட்தேர்வு தேவையென்றால் தனிப்பயிற்சிக்கு கட்டணம் செலுத்தி படிக்க வேண்டும். பணம் கட்டி பயிற்சி பெற முடியாத கிராமப்புற, ஏழை மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் இந்த படிப்பையும் படிக்க முடியாது என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
பெரியார் முழக்கம் இதழ் 29012026

You may also like...