அம்பேத்கரைத் திரிக்கும் பார்ப்பனியம்!
விஜில் என்ற பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பச்சையாக அம்பேத்கர் பார்வையில் சனாதனம் என்ற ஒரு கருத்தரங்கை நடத்தி அம்பேத்கரின் கருத்துக்களைத் திரிக்கும் புரட்டுகளை செய்திருக்கிறது. “பிராமணர்; சத்திரியர்; வைசியர்” என்ற பிரிவுகள் வர்ணம் அல்ல என்றும் அது குருகுலக் கல்வியில் தருகிற கல்வி பட்டம் என்றும் ஒரு ஆராய்ச்சியாளர் பேசியிருக்கிறார். இதில் கூட “சூத்திரர்” என்ற பிரிவை அவர் மிக சூழ்ச்சியாக ஒதுக்கி இருக்கிறார். அடிமை வேலை செய்வதற்காகவே சபிக்கப்பட்ட “சூத்திரர்களும்” குருகுலத்தில் படித்து பட்டம் பெற்று வந்தவர்களா? என்ற கேள்வி எழுமே என்ற காரணத்தினால் இதை தவிர்த்து இருக்கிறார்கள்.
குருகுலக் கல்வியில் குருவாக இருக்கும் தகுதியே “பிராமணருக்கு” மட்டும்தான் உண்டு; இந்தப் “பிராமண” குரு எந்தக் குருக்குலத்தில் படித்து அதற்கான பட்டத்தைப் பெற்றார் என்பதை இவர்களால் விளக்க முடியுமா? பிறப்பின் அடிப்படையில் பாரம்பரிய உரிமையாக கட்டமைக்கப்பட்ட இந்தக் கொடூரமான பார்ப்பனிய ஆதிக்கத்தை கல்வித் தகுதியாக மடைமாற்றி “காதில் பூ” சுற்றுகிறார்கள்.
அப்படியானால் முறையான அர்ச்சகருக்கான கல்வியையும் பட்டத்தையும் பெற்றவர்கள் கோயிலில் அர்ச்சகராக வரவேண்டும் என்று சொன்னால் அவர்களும் “பிராமணர்கள்” தான் என்று அங்கீகரித்து அர்ச்சகர் பதவியை வழங்காமல் நீதிமன்றத்திற்கு போய் ஏன் தடை வாங்க வேண்டும் ? “பிராமணர்” சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று சொன்னால் உரிய வேதக் கல்வி தகுதி வேண்டும் என்று இவர்கள் நிபந்தனை விதிப்பார்களா?
வேத உபநயனம் செய்யும் உரிமை பிராமணர்களுக்கு மட்டுமே உண்டு என்ற நிலையில் குருகுலத்தில் இவர்கள் பிற சமூகத்தினரைச் சேர்த்தார்கள் என்பதை எப்படி ஏற்க முடியும் ? அதற்கு வரலாற்று ஆதாரங்கள் உண்டா?
வேதங்களைக் கற்பித்த குருகுலத்தில் முறையாக வேதத்தை பயிலாதவர்களை பிராமணர்களாக ஏற்க முடியாது என்று வகைப்படுத்தி “சத்திரியர், வைசியர்” நிலைக்கு தள்ளப்படும் முறை ஒரு காலத்தில் இருந்தது; ஆனால் பிராமணர்களாக பிறந்த அனைவருமே வேதங்களை முறையாக பயிலாவிட்டாலும் அவர்கள் பிராமணர்கள் தான் என்ற பிறவி ஆதிக்க வெறியில் உபநயனம் செய்து பிராமணராக்கும் உரிமையை- குருவிடமிருந்து சூழ்ச்சியாக தந்தைக்கு மாற்றிக்கொண்டு பிராமண பிறவி உரிமையை பரம்பரை ஆக்கிக் கொண்டார்கள் என்று அம்பேத்கர் தெளிவாக எழுத்துகளில் பதிவு செய்திருக்கிறார்.
பிராமணர்கள் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இரண்டாம் தர குடிமக்களாக வாழ்ந்தார்கள் என்று அம்பேத்கரே கூறியிருக்கிறார் என்ற ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடுகிறார்கள். எங்கே? எப்போது? அம்பேத்கர் இப்படி ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறார்? என்பதை இவர்களால் கூற முடியுமா? பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மையை அதன் வேத புராண சாஸ்திரங்களில் இருந்தும் வரலாற்றில் இருந்தும் எடுத்துக்காட்டி முகத்திரையை கிழித்தவர் அம்பேத்கர்
“வர்ணாசிரமத்தை ஜாதியாக உருமாற்றம் செய்தது பார்ப்பனியம்; இந்த வேலையைச் செய்து முடித்துவிட்டு சமூகத்தை அதற்கு ஏற்ப மாற்றி அமைக்க மனு தனது சட்டத்தை எழுதினார்”என்று எழுதுகிறார் அம்பேத்கர். ஆனால் அம்பேத்கர் பிராமணர்கள் இரண்டாம் தர மக்களாக ஒடுக்கப்பட்டவர்களாக வாழ்ந்தார்கள் என்று கவலைப்படுவதாக பச்சைப் பொய்யை அவிழ்த்து விடுகிறார்கள்.
அம்பேத்கர் எழுதிய சட்டத்தை போல் மனு சாத்திரமும் ஒரு சட்ட நூல்தான் என்று வெட்கம் இன்றி நியாயப்படுத்துகிறது இந்த கூட்டம் மனு சாஸ்திரம் திணித்த பாகுபாடுகளுக்கு எதிராக சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று மனு சாஸ்திரத்தை உடைத்து எறிய வந்ததுதான் இந்திய அரசியல் சட்டம். மனு சாஸ்திரத்தில் மட்டுமா? பைபிளிலும் பாகுபாடு இருக்கிறது என்று ஒரு ஆராய்ச்சியாளர் பேசியிருக்கிறார். அப்படியே இருந்தாலும் கிறிஸ்துவ சமூகம் பைபிள் அடிப்படையில் பிறப்பின் அடிப்படையில் உலகில் எங்கும் பாகுபாடு காட்டுவது இல்லை.
மனுவின் சட்டம் தான் உலகில் எங்குமே இல்லாத ஏணிப்படி வரிசையிலான ஏற்றத்தாழ்வுகளை இந்தச் சமூகத்தில் திணித்திருக்கிறது. மனு சாஸ்திரத்தை தீயிட்டு பொசுக்கிய அம்பேத்கரை மனு சாஸ்திர ஆதரவாளராகவும் பிராமண ஆதரவாளராகவும் சித்தரிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
சில மாதங்களுக்கு முன்பு பாரதி விழாவை நடத்தி அதில் ஒரு இன துரோகியை பிடித்து பிராமண கடப்பாரையை தூக்குவேன் என்று பேச வைத்தது இதே பார்ப்பன அமைப்பு தான். இந்த உருட்டுகள் இந்த மண்ணில் வேகாது இது வேத காலம் அல்ல; வேத இதிகாச புராணங்களை விரட்டி அடிக்கும் சமத்துவ யுகம்!
பெரியார் முழக்கம் இதழ் 18062026
