`வந்தே மாதரம்’ தேசபக்தி பாடலா? மத பக்தி பாடலா?
வந்தே மாதரம் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயமாக்கி இந்துத்துவ பாஜக ஆட்சி உத்தரவிட்டுள்ளது. இந்தியாவை ‘இந்து’ கடவுள்களின் பூமியாக சித்தரிக்கும் பாடலை கட்டாயமாக்கி இது ‘இந்துக்கள்’ நாடு என்று காட்டி வெறுப்பு அரசியலை வெளிப்படுத்தும் ஆணை இது. வங்காளத்தில் பக்கிம் சந்திர சட்டர்ஜி என்றப் பார்ப்பனர் எழுதிய ‘ஆனந்த மடம்’ என்ற நாவலின் இடம்பெற்றுள்ள பாடல் இது. இந்தப் பாடல் சுதந்திரப் போராட்டக் காலத்தில் பாடப்பட்டது. இதை தேசிய கீதமாக மாற்ற வேண்டும் என்று பார்ப்பனர்கள் விரும்பினார்கள். 1937-இல் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பாடலின் முதல் இரண்டு பகுதிகளை மட்டும் பாடலாக வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. மற்ற நான்கு பகுதிகள் ‘இந்து’ மதத்தோடு நாட்டை இணைப்பதால் அந்த பகுதிகள் வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. அந்த மாநாட்டில் ராஜேந்திர பிரசாத், வல்லபாய் பட்டேல், காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
துர்கா, லட்சுமி, சரஸ்வதி பெண் கடவுள்களின் பூமி நமது நாடு என்றும், கரங்களில் 10 விரல்களில் ஆயுதங்களை ஏந்தி துர்கா தேசத்தை வீரத்துடன் காப்பாற்றுகிறார் என்றும் பாடல் வரிகள் வருகின்றன. முஸ்லிம், கிறிஸ்தவர், புத்தர், சீக்கியர், நாத்திகர்கள் வாழும் நாட்டில் ‘இந்து’ பெண் கடவுள்களை கட்டாயப்படுத்தி ஏற்கவைப்பதும், அதை தேசபக்தியோடு இணைப்பதும் ஏற்கத்தக்கது அல்ல என்று எதிர்ப்புகள் வந்தன. சனவரி 24, 1950-ல் குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் “ஜன கண மன” தேசிய கீதம் என்றும் அதேபோல் அதற்கு சமமாக ’வந்தே மாதரத்தையும்’ ஏற்க வேண்டும் என்றும் அறிவித்தார். அரசியல் நிர்ணய சபை வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பகுதிகளை மட்டும் ஏற்றது. ஏனைய பகுதிகளை ஏற்க மறுத்துவிட்டது. அரசியல் சட்டத்தின் 51(ஏ) பிரிவு; தேசிய கொடியையும், `ஜன கண மன’ தேசிய கீதத்தையும் மட்டுமே அங்கீகரித்தது. வந்தே மாதரத்தைக் கட்டாயமாக்கவில்லை.
1976 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 42 ஆவது சட்டத் திருத்தத்திலும் இது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. தேசியப் பாடலாக கூறப்பட்ட வந்தே மாதரம் பற்றி இந்த சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்படவே இல்லை. தேசிய சின்ன அவமதிப்பு பட்டியலில் வந்தே மாதரம் கிடையாது. இப்போது இந்தியா என்பது இந்து கடவுள்களின் தேசம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்காவிட்டால் தேச அவமதிப்புக் குற்றம் என்று ஒன்றிய ஆட்சி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டின் அரசு பாடலாக `நீராடும் கடலுடுத்த’ என்ற தமிழ் வாழ்த்து பாடல் ஏற்கப்பட்டு அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு ஆணையும் பிறப்பித்துள்ளார். ஆளுநர் ரவியும், சங்கராச்சாரி பார்ப்பனர்களும் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தக் காரணத்தினால் முதலமைச்சர் இந்த நடவடிக்கையை எடுத்தார். இது ‘மொழி வாழ்த்து’ ‘கடவுள் வாழ்த்து அல்ல!’ ஆனால் தேசபக்தியை இந்து மதத்துடன் இணைத்து அதற்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது மதச்சார்பின்மை மீது விழுந்த மரண அடி!
பெரியார் முழக்கம் இதழ்19022026
