‘இந்து’ விளிம்பு நிலை மக்களை நசுக்கும் பாரதிய ‘புல்டோசர்’ கட்சி
இராம நவமி விழாக்களில் கலவரம் விளைவித்தார்கள் என்று சிறுபான்மை மக்களின் வீடுகள், கடைகள், வழிபாட்டுத் தலங்களை பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியினர் புல்டோசரை வைத்து தகர்த்து வருகின்றனர். புது டெல்லியிலும், மத்தியப் பிரதேசத்திலும், குஜராத்திலும் இந்த புல்டோசர் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. உச்ச நீதிமன்றம் அதிர்ச்சியடைந்து தானாக முன் வந்து இந்த வழக்கை எடுத்து ‘உடனடியாக இந்த புல்டோசர் தாக்குதல்களை நிறுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தடை வந்தப் பிறகும் கூட புல்டோசர் தாக்குதல்கள் தொடர்ந்தன, அதற்கு கடும் எதிர்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. பாரதிய ஜனதா கட்சி தற்போது “பாரதிய புல்டோசர் கட்சி”யாக உரு மாறியிருக்கிறது.
சிறுபான்மை மக்களுக்கு எதிராக புல்டோசரை வைத்து வீடுகளை இடிக்கிறார்கள், அதே சமயம் பெரும்பான்மை இந்துக்களுக்குத் தான் நாங்கள் கட்சி நடத்துகிறோம் என்று கூறிக்கொள்ளும் இவர்கள், பெரும்பான்மையான இந்துக்களின் வாழ்வாதாரத்தை புல்டோசரை வைத்து தகர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஜி.எஸ்.டி வரி மேலும் 143 பொருட்களுக்கு உயர்த்தப்படுவதாக செய்திகள் வருகின்றன. ஆடைகள், அணிகலன்கள், சேவிங், ரேசர்கள், கை கடிகாரங்கள், பற்பசை, சேவிங் திரவியங்கள், சாக்லேட்டுகள், கோகோ பவுடர்கள் என்று அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு 28ரூ (maximum tax) வரி விதிப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. இதனால் பாதிக்கப்பட போகின்றவர்களெல்லாம் யார் ? நிச்சயமாக நடுத்தர ஏழை எளிய இந்துக்கள் தான்.
மற்றொன்று, மருந்து விலையைக் கூட்டுவதற்கு ஒன்றிய ஆட்சி இப்போது தனியார் மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது. மருந்துக் கம்பெனிகள் தங்களுடைய மருத்துவ உபகரணங்களுக்கு 10.7ரூ விலையை, ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து உயர்த்திக் கொள்ளலாம் என்று ஒன்றிய ஆட்சி அனுமதி அளித்திருப்பதால் இரத்த அழுத்தம், சர்க்கரை, வைட்டமின், ஓ.ஆர்.எஸ், பாரசிட்டமால் உள்ளிட்ட 800 வகையான மருந்துகளின் விலை கடுமையாக உயரப்போகிறது.
இவைகளினாலும் பாதிக்கப்படப்போவது யார்? நடுத்தர ஏழை எளிய இந்துக்கள் தான்.
இன்னொரு பக்கம், முகேஷ் கௌதம் அதானி, உலகத்தின் முதல் 10 பணக்காரர்களில் 5 ஆவது இடத்திற்கு முன்னேறி இருப்பதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன. மோடியின் மிக நெருக்கமான நண்பரான அவர், குஜராத்தை சேர்ந்தவர். இந்தியாவின் பல முக்கியமான தொழில்களில் முதலீடு செய்து, 235 மில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கடந்த ஓராண்டில் மட்டும் உயர்த்தியிருக்கிறார். அதுமட்டுமின்றி கடந்த 8 ஆண்டில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, பெட்ரோலியப் பொருட்களின் வரியை உயர்த்தி, விலை உயர்வால் மட்டும், வெகு இந்து மக்களிடம் கொள்ளையடித்த பணம் 26 இலட்சம் கோடி.
புல்டோசர் இடிப்பு இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல. வெகு இந்து மக்களின் வாழ்வியலை பொருளாதாரத்தால், ஜி.எஸ்.டி வரி விதிப்பால், பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால் இந்துக்களையும் நசுக்கிக் கொண்டு, மதவாதம் என்ற முகமூடி அணிந்து கொண்டு, பார்ப்பன, பணியாக்களின் நலனுக்காக ஏழை எளிய விளிம்பு நிலை இந்துக்களை பலிகொடுத்து வரக்கூடிய ஒரு ஆட்சிதான் இன்றைக்கு இந்துக்களின் காவலராக தன்னை காட்டிக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறது.
பெரியார் முழக்கம் 28042022 இதழ்