ஜாதி ஒழிப்பு மாவீரர்களை நினைவில் ஏந்துவோம்! சட்ட எரிப்பு நாளில் எழுச்சிகரமான வீரவணக்க நிகழ்ச்சிகள்

அரசிலமைப்புச் சட்டத்தில் 25, 26, 13, 19, 368, 372(1) ஆகிய பிரிவுகள் ஜாதியைப் பாதுகாக்கும் விதமாக உள்ளது என்றும், அவற்றை நீக்க வேண்டுமென்றும் 03.11.1957 அன்று தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக ஸ்பெசல் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றிய பெரியார், கோரிக்கைக்கு செவிசாய்க்க அரசுக்கு 30 நாட்கள் கெடு விதித்தார். ஆனால் கோரிக்கை குறித்து பரிசீலிக்க வேண்டிய அரசாங்கமோ, சட்டத்தை கொளுத்தினால் என்ன தண்டனை என்று வரையறுத்து மசோதாவை இயற்றி நிறைவேற்றியது. 3 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று சட்டமியற்றி அச்சுறுத்திய பின்பும், முதல் நாளே தந்தை பெரியாரை திருச்சியில் வைத்து கைது செய்த பின்பும், 26.11.1957-இல் நடைபெற்ற சட்ட எரிப்புப் போராட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, நான்காயிரம் பேர் சிறைபுகுந்து, சிறைக்குள்ளேயும் விடுதலை ஆன ஒரு மாதத்தில் 18 பேர் உயிர் நீத்த வீரஞ்செறிந்த ஜாதி ஒழிப்புப் போராட்டம் இந்தியக் கண்டம் கண்டிராதது.
சிறைக்கொடுமைகள், சிறையில் இருந்து மீண்ட பின்பும் சந்தித்த இடர்பாடுகள், உயிரிழந்த ஜாதி ஒழிப்பு வீரர்களின் குடும்பங்கள் சந்தித்த இன்னல்கள் என சட்ட எரிப்புப் போராளிகள் ஒவ்வொரு வரலாறும் ஜாதி ஒழிப்பு களத்தில் நிற்கும் போராளிகளுக்கான வாழ்வியல் பாடங்கள். அறிவியல் வளர்ச்சியால் உருவான சமூக வலைதளங்களில் ஜாதியை உயர்த்திப் பிடிக்கும் சிந்தனைகளை விதைப்பது, ஜாதிய அடையாளத்தை வெட்கமின்றி பயன்படுத்திக்கொள்வது, வாட்ஸ் ஆப் குழுக்களில் ஜாதிய வலைப்பின்னலை வலுப்படுத்திக்கொள்வது என விதவிதமாக ஜாதியத்தை வளர்க்கிற முயற்சிகள் உருவாகியிருக்கும் இக்காலச்சூழலில், ஜாதிச்சங்கங்களை வீரியமிழக்கச் செய்து, ஜாதிய எண்ணவோட்டத்தில் இருந்து மக்களை விடுவித்து சமத்துவச் சூழலை உருவாக்கிட ஜாதி ஒழிப்புக்காக நடைபெற்ற தன்னிகரற்ற போராட்டமான சட்ட எரிப்புப் போராட்டத்தின் வரலாற்றை இன்றைய இளம் தலைமுறை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமானது. அத்தகைய முயற்சியாக, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், பல்வேறு மாவட்டங்களில் வீரவணக்க நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த ஆண்டு நடைபெற்ற வீரவணக்க நிகழ்ச்சிகளின் செய்தித்தொகுப்பு.
கோவை: ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை கொளுத்தி சிறைசென்ற போராளிகளுக்கும், சிறையில் உயிர் நீத்த போராளிகளுக்கும் 26.11.2025. அன்று கோவை மாநகர திராவிடர் கழகத்தின் மாநகரச் செயலாளர் வெங்கட் தலைமையில் காந்திபுரம் பெரியார் சிலை முன்பு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம், மாநகர தலைவர் நிர்மல்குமார் உரையாற்றினர். கழகத் தோழர்கள் கிருஷ்ணன், மாதவன், நவீன், சதீஷ், தரணி, கிருஷ்ணமூர்த்தி, இராஜலட்சுமி கலந்து கொண்டனர்.
திருப்பூர்: மாவட்டக் கழகம் சார்பில் 26-11-2025 புதன்கிழமை காலை 10 மணி அளவில் புதிய பேருந்து நிலையம் அருகில் ஜாதியைப் பாதுகாக்கும் சட்டப் பிரிவுகளை கொளுத்தி உயிர் நீத்த தோழர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. சிறை வாசத்தால் உயிரிழந்த 18 ஜாதி ஒழிப்புப் போராளிகளின் பெயர் குறிப்பிட்டு வீரவணக்க முழக்கமிட்டு மரணமடைந்த வீரர்களின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. நிகழ்விற்கு திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் இராசு தலைமை வகித்தார். தோழர்கள் ஈழமாறன், கார்த்திக், வெங்கட், சிரிஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர்), துரை.பரிமளரசன் (சமூக ஊடகப் பொறுப்பாளர் தி.வி.க.), பாரதி சுப்பராயன் (நவீன மனிதர்கள் குழு), ஏ.பி.ஆர். மூர்த்தி (மாவட்டச் செயலாளர், விசிக), விடுதலைச் செல்வன், (துணைப் பொதுச் செயலாளர் ஆதித்தமிழர் பேரவை), ஆதன் (தமிழ்நாடு மாணவர் கழகம்), கார்மேகம் (மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு), முத்து (மாநகர அமைப்பாளர், திவிக) ஆகியோர் கருத்துரையாற்றினர். கழகப் பொருளாளர் சு.துரைசாமி சிறப்புரையாற்றினார். மடத்துக்குளம் கணக்கன் நன்றியுரையாற்றினார். நிகழ்வில் துரை. வளவன் (துணை பொதுச்செயலாளர் விசிக),நீதிராசன் (மாவட்டச் செயலாளர் திவிக), மா.இராமசாமி (தெற்கு பகுதிச் செயலாளர், திவிக), வீ.தனபால் (மாநகரத் தலைவர், திவிக), சி.மாதவன் (மாநகரச் செயலாளர் திவிக), க.மாரிமுத்து (மாநகரத் துணைத் தலைவர், திவிக), அய்யப்பன் (வடக்கு ஒன்றிய அமைப்பாளர் திவிக), சு.சிவானந்தம் (மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர்), மதன் (ஆத்துப்பாளையம் பொறுப்பாளர்) கணபதி, ராஜ்குமார் (நவீன மனிதர்கள் குழு), தோழர்கள் லெனின், அருண், கழகத் தோழர் ஆ.இனியன் உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை: 1957-இல் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை எரித்து, சிறைசென்ற போராளிகளுக்கு வீரவணக்க நிகழ்வு, சென்னை ராயப்பேட்டை வெங்கடாசலம் தெருவில், 26.11.2025 மாலை 6 மணிக்கு, சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி தலைமையில் நடைபெற்றது. பெரியார் சிலைக்கு தோழர்கள் மாலை அணிவித்து கொள்கை முழக்கமிட்டனர். ஜாதி ஒழிப்புச் சுடரை தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் ஏற்றி வைத்தார். தோழர்கள் ஜாதி ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர், தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேரன்பு ஜாதி ஒழிப்புப் பாடல்கள் பாடினார்.

ர.பிரகாசு (நிமிர்வோம் வாசகர் வட்ட அமைப்பாளர்), அருண் கோமதி (தாம்பரம் நகர அமைப்பாளர்) ஆகியோர் சட்ட எரிப்புப் போராட்ட வரலாற்றினை விளக்கி, கோவையில் இம்மாத இறுதியில் கழகம் நடத்தவுள்ள ஜாதி ஒழிப்புப் போராட்டத்திற்கான அவசியத்தை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினர். கு.அன்பு தனசேகர் (தலைமைக் குழு உறுப்பினர்), மாவட்டத் தலைவர்கள் மா. வேழ வேந்தன், சேத்துப்பட்டு இராசேந்திரன், ம. கி. எட்வின் பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர்), மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப. அருண், சு. கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதித் தலைவர்), சே. ராஜேஷ்(பகுதிச் செயலாளர்), த.நா. சூர்யா(பகுதி அமைப்பாளர்), ஷர்மிளா (தமிழ்நாடு மாணவர் கழகம் ஈரோடு) பிரசாந்த் (முழக்கம் செய்தியாளர்), ரெங்கநாதன் (அனைத்து ஜாதி அர்ச்சகர் சங்க தலைவர்), U2BRUTUS மைனர், கழகத் தோழர்கள் ஈரோடு கலை, இரண்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேட்டூர்: கழகத்தின் சார்பில் ஜாதி ஒழிப்பு – சட்ட எரிப்பு போராளிகளுக்கு வீரவணக்க நாள் தெருமுனைக் கூட்டம் 26.11.2025 புதன் மாலை 5.30 மணியளவில் மேட்டூர் சின்ன பார்க் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மார்ட்டின் (மேட்டூர் நகரத் தலைவர்) தலைமை வகித்தார். மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவின் பகுத்தறிவு பாடல்களுடன் கூட்டம் நடைபெற்றது. தலைமைக் குழு உறுப்பினர்கள் காவை ஈசுவரன், சக்திவேல் கோவிந்ததாசு (சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர்), கிருஷ்ணன் (சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), பிரபாகரன் (சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர்) முல்லை வேந்தன் (திராவிடர் பண்பாட்டு நடுவத்தின் பொறுப்பாளர்), சிஅய்டியு இளங்கோ, கழகத் தோழர் குமரேசன் ஆகியோர் சட்ட எரிப்பு நாள் குறித்து உரையாற்றினார்கள். ஜாதி ஒழிப்பு உறுதிமொழியை மேட்டூர் தேன்மொழி கூறினார். குமரப்பா (மேட்டூர் நகரச் செயலாளர்) அவர்கள் நன்றியுரையாற்றினார். பொதுமக்கள் அனைவருக்கும் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. விசிக நகரச் செயலாளர் குட்டி (எ) சிவக்குமார் மற்றும் தோழர்கள் மாவட்ட அமைப்பாளர் அண்ணாதுரை, நங்கவள்ளி ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன், ஆர்.எஸ் பகுதி தலைவர் முரளி, செயலாளர் விவேக், (சேலம் மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) பிரபாகரன், குமரேசன் மற்றும் மேட்டூர், மேட்டூ ஆர்.எஸ், நங்கவள்ளி, காவலாண்டியூர், வனவாசி, கொங்காணபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் இதழ் 04122025

You may also like...