வாராது வந்த மாமணி ஸ்டாலின்!
கடந்த சனவரி-24, சூலூர் பாவேந்தர் பேரவை நடத்திய மொழிப்போர் நினைவு உணர்ச்சி விழா மற்றும் பெரியார் நினைவு அறிவு விழாவில் கழகத் தலைவர் ஆற்றிய உரை:
நமக்கு வந்திருக்கிற ஆபத்து நமக்கு அமைந்திருக்கிற ஒரு வாய்ப்பு. மூடநம்பிக்கைகள் அற்ற பகுத்தறிவுவாதிகளாக நாம் இருக்கிறோம். ஆனால் எங்களுக்கெல்லாம் ஒரு மூடநம்பிக்கை இருந்தது. நன்றாக பேசுபவர்தான் நல்ல தலைவராக இருக்க முடியும் என்று கருதிக்கொண்டிருந்தோம். அதனால் ஸ்டாலின் கொஞ்சம் தகுதி குறைவானவர்தான் என்ற மூடநம்பிக்கை அவர் ஆட்சிக்கு வந்து திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு வரை இருந்தது. அந்த மூடநம்பிக்கை அதற்கு பின்பு மறைந்தது. பேச்சாளராக இருக்க வேண்டியது அவசியம் இல்லை, செயல்படுபவராக இருந்தால் போதும் என்பது அவர் ஆட்சிக்கு வந்த பின்னால்தான் நமக்குத் தெரிய வந்தது. பதவி இல்லாத 10 ஆண்டுகாலத்தில் அவர் என்னென்ன நினைத்து வைத்திருந்தார் என்பதெல்லாம் தற்போதுதான் தெரிகிறது. இன்னும் 10-ஆண்டுகள் முடிந்தால்தான் வெளியே வரும் என நினைக்கிறேன். யாரும் எண்ணிப் பார்க்காத திட்டங்கள் பலவற்றை அறிவிக்கிறார்.
அடித்தட்டு மக்களிடம், கிராமப்புற மக்களிடம், அதிலும் உழைக்கும் மக்களிடம் கல்வி முழுமையாகப் போய் சேரவில்லை. கல்வி கிடைத்தாலும் அவர்கள் உரிய இடத்தில் பணி அமர்த்தப்படவில்லை. அந்த இடங்களை எல்லாம் அவர்கள் பெறுவதற்கான முயற்சிகளை இந்த அரசு உரிய முறையில் எடுத்து வருகிறது. எண்ணிப் பார்க்க முடியாத ஒரு புதிய தமிழ்நாட்டைக் கட்டியது கலைஞராக இருக்கலாம். அதை நல்ல வடிவத்தோடு ஆக்கி, பிரமிக்கத்தக்க அளவுக்கு வெளிநாடு, வெளிமாநிலங்கள் எல்லாம் பார்க்கத்தக்க அளவுக்கான ஒரு மாநிலமாக மாற்றியதில் ஸ்டாலினுக்கு பெரிய பங்கு இருக்கிறது. அதை நாம் மகிழ்ச்சியோடு பார்த்த வண்ணம் சொல்கிறோம்.
அரசியல் என்பது ஆட்சியில் இருக்கிறார்கள், திட்டங்களை செய்வார்கள் என்பது மட்டுமல்ல. அரசியலை நாம் எப்படி பார்க்க வேண்டும் என்றால், அண்மையில் குரூப்-1, சர்வீஸ் பிரிவில் தேர்ச்சி பெற்று பணிக்கு தேர்வானதில் ஆண்களை விட பெண்கள் அதிகம். தேர்வானது ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால்தான். “களப்பணிக்கு செல்வதற்கு பெண்களாகவே பெரும்பாலும் இருப்பதால் எங்களுக்குச் சில சிக்கல்கள் ஏற்படுகிறது. கொஞ்சம் ஆண்களும் உள்ளே வருகிற மாதிரி நிலையை உருவாக்க வேண்டிய தேவை தற்போது இருக்கிறது” என்று இப்போது அதிகாரிகள் மட்டத்தில் பேசுகிறார்கள். தமிழ்நாட்டில்தான் இதையெல்லாம் பார்க்க முடிகிறது.
கல்வி கற்க வேண்டுமென்று வந்துவிட்டால் பெண்கள் கல்வியில் மட்டுமே கவனமாக இருந்து படிக்கிறார்கள். அதற்குப் பின்னால் அவர்களுக்கு வாய்ப்புகள் உருவாகவில்லை. குடும்பங்கள் ஒரு பக்கம் தடையாக இருந்து இருக்கிறது. இன்னொரு பக்கம் அந்தப் பெண்களுக்கான உரிமை என்று பேசிய பின்னால், அவர்களுக்கு உரிய வழிகாட்டுதலை செய்ய வேண்டும். அதற்காக இயங்குகிற துறையை நினைத்துப்பார்த்தால் நமக்கு பெரிய பிரமிப்பாக உள்ளது.
அண்மையில் நான் ஒன்றைக் கேள்விப்பட்டேன். அது இன்னும் வெளியே வரவில்லை என்று நினைக்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர்களைப் பற்றி ஒரு ஆய்வு செய்திருக்கிறார்கள். தேர்வில் அவர்கள் தோல்வி அடைந்ததற்கு என்ன காரணம்? மாணவன் ஏன் தோல்வியடைந்தார்? பத்தாம் வகுப்பு தேர்வில் ஏன் தோற்றுப்போனான்? மாணவனுக்கு ஏதாவது குடும்ப சிக்கலா? அப்பா இல்லாமல் இருக்கலாம், வறுமையாக இருக்கலாம். பல காரணங்கள் இருக்கலாம். என்ன காரணம்? அல்லது அப்பா குடிகாரராக இருக்கலாம். இத்தகைய குடும்பப் பின்னணியில் இருந்து அம்மாணவர்கள் வந்திருக்கலாம். இவர்களைப் பற்றியெல்லாம் கணக்கெடுத்து வைத்திருக்கிறார்கள். இப்போது தான் தெரிகிறது. அந்த திட்டத்தில் வேலை செய்கிற நபர்கள் சொல்லித்தான் கேள்விப்பட்டேன்.
அப்படி கணக்கெடுக்கப்பட்ட அவர்களையெல்லாம் உடனடியாக அடுத்து வருகிற துணைத் தேர்வில் எழுத வைப்பதற்கு குறுகிய காலத்தில் பயிற்சி கொடுத்து, அவர்களை தேர்ச்சியடைய வைத்திருக்கிறார்கள். அத்தோடு, பனிரண்டாம் வகுப்பில் அவர்களுக்கு எடுக்கிற பாடத்தில் தொடர்ந்து அவர்களை இரண்டு ஆண்டுகள் கண்காணித்திருக்கிறார்கள். 1304 மாணவர்களை அவர்கள் முழுமையாகத் தேர்வடையச் செய்து அவர்களுக்கான விருப்பமான கல்விகளுக்கான இடங்களை தனியார் நிறுவனங்களிலும் பெற்று, படிப்புக்கான கட்டணமும் கட்ட வேண்டாம், கல்வி கட்டணம் இல்லை, விடுதிக்கட்டணம் இல்லை என்ற நிலையில் அனைவரையும் கல்லூரியில் சேர்த்திருக்கிறார்கள். அந்த 1304 மாணவர்களும் இந்த ஆண்டு கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கிராமப்புறங்களில் இருக்கிற மாணவர்கள் மட்டும் முதலில் கணக்கெடுப்பு செய்யப்பட்டிருக்கிறார்கள். முதல்ல ஏன் அப்படி ஆச்சு? என்ன காரணம் அதைப் பாருங்கள் என்று சிந்திப்பது நமக்குப் பெரிய அதிசயமாக உள்ளது. இப்படி ஒரு முயற்சியை ஒரு அரசு செய்திருக்கிறது என்றால், சமூகத்தின் மீது அக்கறை, சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்கள் மீது அக்கறை, சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீது கூடுதல் அக்கறை இருக்கிறது என்பதுதான் அர்த்தம். இதெல்லாம் எங்கிருந்து வருகிறது என்றால், சுயமரியாதை சிந்தனை.
திராவிட இயக்கம் என்பது என்ன? ஆரியர்கள் வந்து அறிவை தடுத்து வைத்தார்கள். திராவிட இயக்கம் அதை உடைத்துவிட்டது. தடையெல்லாம் உடைத்துவிட்டது. எல்லோரும் கல்வி பெற வேண்டும் என்பதுதான் அந்த தடைகளை உடைப்பதற்கான தொடக்கமாக திராவிட இயக்கம் கையிலெடுத்தது. முதலில் கல்வியில் சமூக உரிமைகள் எல்லாம் பெற்றுவிட்டோமா என்றால் முழுமையாக இல்லாமல் இருக்கலாம். ஒரே நேரத்தில் அனைத்தும் சாதித்துவிட வேண்டும் என்று நம்மால் சொல்ல முடியாது. அதற்கான வாய்ப்புகளும் இல்லை. படிப்படியாகத்தான் செய்வார்கள். ஆனால் ஒரு சிறு இடைவெளி இல்லாமல் செய்து கொண்டிருக்கிற இந்தக் காலத்தை நாம் பெரும் மகிழ்ச்சியோடு பார்க்கிறோம். சமூக அக்கறை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் இதை பார்ப்பார்கள். இப்படி எல்லாம் நாம் எண்ணிப் பார்த்திருக்க மாட்டோம்.
வாராது போன்ற மாமணி என்றெல்லாம் சொல்லுவார்களே அதுபோல, வாராது வந்த மாமணியாகத்தான் இப்போது ஸ்டாலின் வாய்த்திருக்கிறார். இதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால், சமூகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் இருப்போர் தங்களுக்கான பங்குகளைத் தங்களுக்கான பணிகளை நேர்மையாகச் செய்து, முழுமையாகச் செய்து ஈடுபாட்டோடு செய்து இன்னும் நல்ல தமிழ்நாட்டை உயர்த்துவோம். பெரியார் முழக்கம் இதழ்12022026.
