ஸ்ரீராம்-காயத்ரி ஜாதி மறுப்பு சுயமரியாதை இணையேற்பு விழா!
சேலம் மாவட்டம் R.T.கிருஷ்ணன் – கவிதா ஆகியோரின் மகன் ஸ்ரீராம் அவர்களுக்கும், சென்னை மாவட்டம் R.சிவகுமார் – சாந்தகுமாரி ஆகியோரின் மகள் காயத்ரி அவர்களுக்கும், 15.03.2026 ஞாயிறு மாலை 6.00 மணியளவில் அயோத்தியாபட்டினம் வாசு மஹால் திருமண மண்டபத்தில், கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன் தலைமையில், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் முன்னிலையில், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ் ஜாதி மறுப்பு சுயமரியாதை இணையேற்பு விழாவினை நடத்தி வைத்தார்.
சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், செட்டியூர் மாரி, கொளத்தூர் கணேசன், அமஜத்கான், வனவாசி நகரச் செயலாளர் உமாசங்கர், சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி, சுதர்சன், தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் நாகராஜ், சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பிரபாகரன், கீதா, அமுதன், ஆனந்த், வெங்கடேஷ், இனியா, நந்தினி, தமிழ்நாடு மாணவர் கழக கொளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் சுகந்தன் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மணமகன் ஸ்ரீராம் எந்த அரசியல் பின்புலமோ, இயக்க பின்புலமோ இல்லாதவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சேலம் மாவட்டச் செயலாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனக்கு பெரியாரின் கொள்கைகள் மிகவும் பிடிக்கும், காதல் மற்றும் சுயமரியாதை திருமணம் செய்ய விரும்புகிறேன் எனவும், திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் முன்னிலையில் இணையேற்பு விழாவை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். தன்னுடைய திருமண நிகழ்வில் கருப்பு சட்டையோடு தோழர்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டுமெனவும் ஆசைப்பட்டார். இந்த சுயமரியாதை திருமண நிகழ்வில் மாவட்டச் செயலாளர் உறுதிமொழி வாசித்த போது பெரும் ஆரவாரத்துடன் உறவினர்கள் நண்பர்கள் வரவேற்றனர். காவை ஈசுவரன் இது ஜாதி மறுப்பு திருமணம் என சொன்னவுடன் மண்டபத்தில் அனைவரும் கை தட்டி உற்சாகப்படுத்தியது நெகிழவைத்தது.
– பெரியார் முழக்கம் இதழ் 26032026
