குன்னத்தூரில் ஜாதி வெறிச்செயல் கழகம் எதிர்வினை!

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் கருப்பண நாடார் பள்ளியில் 30-01-2026 அன்று சக மாணவர்களால் 8-ம் வகுப்பு பட்டியலின வகுப்பைச் சார்ந்த ரக்சத் என்னும் மாணவன் தீயில் தூக்கி வீசப்பட்ட ஜாதி வெறிச் சம்பவம் நடந்துள்ளது.
தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட மாணவனை பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். உடனே செய்தி அறிந்த திராவிடர் விடுதலைக் கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் அவர்களுடைய தலைமையில் முகில் ராசு (திருப்பூர் மாவட்டத் தலைவர்), செல்வக்குமார் (கோபி மாவட்டச் செயலாளர்), மாரிமுத்து (திருப்பூர் மாநகர துணை தலைவர்), கோபி அருளானந்தம், ஈசுவரமூர்த்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட மாணவனைச் சந்திக்கச் சென்றனர்.
பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஆறுதல் கூறியதோடு அவனுடைய பெற்றோர்களிடமும் மற்றும் மாணவனிடமும் தோழர் இராம.இளங்கோவன் அவர்கள் நடந்த உண்மை சம்பவங்களைக் கேட்டு அறிந்தார்.
பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய லெனினிய அமைப்புகளை ஒன்றிணைத்து இச்சம்பவத்திற்குக் காரணமான பள்ளி நிர்வாகத்தையும் மற்றும் தொடர்ந்து பள்ளியில் ஜாதிய பாகுபாடுகளுக்கு எதிராக புகாரளித்தும் கண்டும் காணாமல் இருந்த ஆசிரியர்களையும் கண்டிக்கும் வகையில் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்ட கோசங்களை எழுப்பி கண்டனம் தெரிவித்தனர். சூழ்நிலை கருதி மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடி நடவடிக்கை எடுக்கும் விதமாக உரிய சிகிச்சை அளிப்பதற்காக பாதிக்கப்பட்ட மாணவனை கோவை (கே.எம்.சி.எச்) மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இராம.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்:- பாதிக்கப்பட்ட பட்டியலின மாணவன் ரக்சத் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் ஜாதியின் பெயரில் இயங்கக்கூடிய அனைத்து கல்வி நிறுவனங்களையும் தடை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பிப்ரவரி-1,2026 ஞாயிற்றுக்கிழமை புகார் மனு அளிக்க தோழர்கள் குன்னத்தூர் காவல் நிலையம் சென்றனர். மாணவனின் அனைத்து சிகிச்சை செலவுகளையும் பள்ளி நிர்வாகமே பார்த்துக் கொள்வதாக தகவல் வந்தது. நம்பியூர் ஒன்றியச் செயலாளர் ரமேசு மற்றும் அமைப்பாளர் மயில்சாமி உடனிருந்தனர்.
தோழமை இயக்கத்தினர் விசிக, ஆதித்தமிழர் பேரவை,தீண்டாமை ஒழிப்பு முன்னணி, திராவிட தமிழர் கட்சி, புஇமு மற்றும் திருப்பூர், கோபி கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ்05022026.

You may also like...