சென்னையில் மகிழ்ச்சி விழா! ஜாதி மறுப்பு மணம் புரிந்த பெரியார் குடும்பங்கள் சந்திப்பு
சென்னை மாவட்டக் கழகம் மற்றும் இளைஞர் அணி இணைந்து நடத்திய காதலர் தினத்தை முன்னிட்டு ஜாதி மறுப்பு இணையர்களின் குடும்ப விழா பிப்ரவரி 17 அன்று மாலை 6 மணி அளவில் ராயப்பேட்டை நல்வாழ்வு மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வை சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி ஒருங்கிணைத்தார்.
கவுசல்யா (நிறுவனர் சங்கர் அறக்கட்டளை) உடுமலை சங்கர் ஜாதியப் படுகொலையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஜாதி ஆணவ கொலைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பவர். தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் ஜாதி வெறி செயலுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வருபவர். காவை.ஈசுவரன் (தலைமைக் குழு உறுப்பினர்), ஜாதி மறுப்பு திருமணங்களை முன்னின்று கடும் எதிர்ப்புகளை மீறி நடத்தி அவர்களுக்கு அடைக்கலம் தருபவர். சேலத்தில் 1000 கணக்கான ஜாதி,மத மறுப்பு திருமணங்களை நடத்தியவர்.
தீனா (பெரியார் சிந்தனையாளர் இயக்கம்) புதுவை இயக்கத்தில் பெண்களை துணிச்சலோடு ஜாதி மறுப்பு திருமணங்களை புரிய ஊக்குவிப்பவர். தன்னுடைய இயக்கப் பெண்களில் சிலர் ஜாதி மறுப்பு திருமணங்களை நடத்தி வைத்தவர். வழக்கறிஞர்.திருமூர்த்தி (சென்னை உயர்நீதிமன்றம்) ஜாதி மறுப்பு திருமணங்களை நடத்தி வைத்து அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்குபவர்.
உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) 500-க்கும் ஜாதி மறுப்பு திருமணங்களை நடத்தி வைத்தவர். அதில் வரும் நெருக்கடிகளை சமாளித்து இரு வீட்டினரையும் இணைக்கும் பணியை செய்பவர். ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர். வழக்கறிஞர். ரமேசு பெரியார் (ஜாதி மறுப்பு சங்கம்) தமிழ்நாட்டில் அனைத்து திருமணப் பதிவு அலுவலங்களில் ஜாதி மறுப்புத் திருமணத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களை தகர்த்தவர். இலவசமாக ஜாதி மறுப்புத் திருமணங்களை நடத்தி வைப்பவர். ஜாதி மறுப்பு திருமணங்களை சட்ட முறைப்படி பதிவு செய்து அவர்களுக்கு அரசு சலுகைகளை வாங்கி தருபவர். இவர்களை பாராட்டி விருதினை கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வழங்கினர்.
கழகத்தில் ஜாதி மறுப்பு திருமணங்களை புரிந்த தோழர்களை பாராட்டி 60-க்கும் மேற்பட்ட இணையர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. சென்னை, சேலம், கோவை, திருப்பூர், புதுவை, வேலூர் என பல்வேறு பகுதிகளில் இருந்து ஜாதி மறுப்பு இணையர்கள் குடும்பத்துடன் கூடியிருந்தனர்.
தம்மம் கலைக் குழுவின் குதுகலமான இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இணையர்கள் குடும்பத்துடன் ஆடி, பாடி மகிழ்ந்தனர். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் “காதலர் தினத்தை ஜாதி மறுப்பு நாளாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த விழாவை நாங்கள் முன்னெடுத்தோம். தொடர்ச்சியாக ஜாதி மறுப்பு திருமணங்களை கொள்கையாகவே ஏற்று செய்து கொள்ள வேண்டும் என்று கழகத் தோழர்கள் பற்றுருதியுடன் இதை செய்து வருகிறார்கள். ஆகவே இணையர்கள் மனம் திறந்து மகிழ்வுடன் கொண்டாடுவதற்காக தான் இந்த நிகழ்வை நாங்கள் நடத்துகிறோம். உங்கள் முகமூடிகளை கழற்றி விட்டு மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள் என்றார்.
ஜாதி மறுப்பு இணையர்கள் பெரியாரியலை வாழ்க்கை நெறியாக்கும் போதுதான் அந்த வாழ்க்கை வெற்றிகரமாகிறது.மதம், கடவுள் நம்பிக்கைகளோடு ஆணாதிக்கம் நிறைந்த பல ஜாதி திருமணங்கள் விவாகரத்துகளில் முடிவதற்கு காரணம். இந்தக் கொள்கைப் புரிதல் இல்லாமை தான் ஒழ்வொரு ஆணும் தனது ஆணாதிக்க சிந்தனையை மறுப்பதற்கு உந்துதல் தருவது பெரியாரியம் தான்” என்று மேலும் கூறினார்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த இணையர்கள் அவர்களின் சொந்த ஜாதியை தவிர்த்து மற்ற ஜாதியில் தனது குழந்தைகள் செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து சிறப்புரையாற்றினார். தோழர்கள் நவெந்தன், சஞ்சய், மனோஜ்குமார் ஆகியோர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். சென்னை, சேலம், கடலூர், வேலூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ்27022026
