திருப்பூரில் களைகட்டிய பொங்கல் விழா!

திருப்பூரில் கடந்த 10- ஆண்டுகளுக்கு மேலாக கழகத்தினர் தமிழர் திருநாள் பொங்கல்விழாவை பகுதி மக்கள் மற்றும் தோழமை சக்திகளின் ஆதரவுடன் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக வீரபாண்டி பிரிவு பாரதி நகரில் கழகப் பொருளாளர் துரைசாமி , மாஸ்கோ நகரில் மாதவன் முன்னெடுப்பிலும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
வீரபாண்டி பிரிவு: பாரதி நகர் பெரியார் படிப்பகம் பகுதியில் பொங்கல் விழா 15.01.26 அன்று காலை பொங்கல் வழங்குதலில் தொடங்கி, விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் வாழ்த்துரை வழங்குதல் பரிசு வழங்குதல் என மாலை வரை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சரசுவதி (கழக மாநகர அமைப்பாளர்) பொங்கல் வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.
விளையாட்டுப் போட்டிகளை வீரபாண்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், ஆர்.குமார் (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம்) தொடங்கி வைத்தார். விளையாட்டுப் போட்டிகளை ஆர்.கணேசன், சி.லட்சுமணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மாலை வரை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
ராமசாமி (தெற்கு பகுதி அமைப்பாளர்) வரவேற்புரையாற்றினார். மேடை நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பு பணியை முத்து (மாநகர அமைப்பாளர்) அய்யப்பன் (வடக்கு ஒன்றிய அமைப்பாளர்) ஆகியோர் செய்தனர். சிறுவர், சிறுமியர் பங்கேற்ற திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, தமிழிசைப் பாடல்களுக்கான நடன நிகழ்ச்சி மிகுந்த உற்சாகத்துடனும் ஆரவாரத்துடனும் நடைபெற்றது.
நிர்மல் குமார் (கோவை மாநகரச் செயலாளர்), நம்பியூர் ரமேஷ், ஆசிரியர் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர்), பரிமளராசன் (சமூக வலைதளப் பொறுப்பாளர்), ரவீந்திர குமார் (53வது வார்டு தி.மு.க செயலாளர்), முகில் ராசு (திருப்பூர் மாவட்டத் தலைவர்), ராம. இளங்கோவன் (கழக வெளியீட்டுச் செயலாளர்), துரைசாமி (கழகப் பொருளாளர் ) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிறைவாக விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமியர், பெண்கள், ஆண்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. கழகத் தோழர் ராசசிங்கம் நன்றியுரை ஆற்றினார். ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் நடராஜ், ஈஸ்வரமூர்த்தி, மயில்சாமி, அருள், சங்கீதா (மாவட்ட அமைப்பாளர்), தனபால் (மாநகரத் தலைவர்), மாதவன் (மாநகரச் செயலாளர்), இனியன், சுசீலா, சூலூர் தமிழ்ச்செல்வி (கோவை மாவட்ட அமைப்பாளர்), தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் ஈழமாறன், யாழிசை, மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.
மாஸ்கோ நகரில் மக்கள் பேராதரவுடன் நடைபெற்ற பொங்கல் விழா!
25.0126 ஞாயிறு அன்று காலை தொடங்கி மாலை வரை தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் கழகத்தின் மாநகரச் செயலாளர் மாதவன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
மாஸ்கோ நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. பொங்கல் விளையாட்டு போட்டியை திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் தொடங்கி வைத்தார். தனபால் (மாநகரத் தலைவர்), முத்து (மாநகர அமைப்பாளர்), தோழர்கள் சரசுவதி, சிரிஜா, தமிழ்நாடு மாணவர் கழக தோழர் கார்திக் ஆகியோரும் பொங்கல் வழங்கி சிறப்பித்தனர்.
சிறுவர், சிறுமியர், பெண்கள், ஆண்கள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகள் காலை முதல் மாலை வரை மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளில் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.
முகில் ராசு (மாவட்டத் தலைவர்) நிகழ்வுகளை நெறியாள்கை செய்தார். விளையாட்டுப் போட்டிகளை கழகத் தோழர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள். பொங்கல் விழா நிகழ்வுகளில் வழக்கறிஞர் தமயந்தி, இளம் பரிதி, அபர்ணா ஆகியோரும், ஆர்.ஏ.சேகர் (28 வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர்), அரிமா ஆர்.நாகராஜ் (மதிமுக மாநகர மாவட்டச் செயலாளர்), பாரதி சுப்பராயன் (நவீன மனிதர்கள் குழு தலைவர்), அருண் (அமைப்புச் செயலாளர்), ஆரியாஸ் கண்ணன் (தவெக வார்டுச் செயலாளர்) ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். தமிழிசைப் பாடல்களுக்கு சிறுவர் சிறுமியரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. திருக்குறள் ஒப்புவித்தல், சிலம்பம் சுழற்றுதல், ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.
“காம்ரேட் கேங்ஸ்டா” இசைக்குழுவினரின் ராப் இசை பாடல்கள் பொதுமக்கள் சிறுவர் சிறுமியரின் பெரும் வரவேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. துள்ளல் இசை நடனத்துடன் முற்போக்குக் கருத்துக்களை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் முயற்சியாக கடவுள் மறுப்பு ஜாதி மறுப்பு, கடவுள் பெயரால் கலவரம் செய்வது கூடாது போன்ற கருத்துகளை மிக அழகாக இக்குழுவினர் எடுத்துச் சென்றது அனைவரின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது. விளையாட்டுப் போட்டிகளில் வென்ற சிறுவர் சிறுமியருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பரிசு வழங்கும் நிகழ்வில் மாரிமுத்து (மாநகரத் துணைத் தலைவர்) வரவேற்புரையாற்றினார்.பொங்கல் விழா – தமிழ்ப் புத்தாண்டு குறித்து இணையதளப் பொறுப்பாளர் பரிமளராசன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் உரையாற்றினார்கள். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.
போட்டிகளில் வென்ற சிறுவர் சிறுமியர்களுக்கு கழகத் தலைவர் மற்றும் கழகத்தின் முன்னணி பொறுப்பாளர்கள் தோழர்கள் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்கள். தோழர் இனியன் நன்றிகூறினார். இந்நிகழ்வில் கழகத்தின் மாவட்ட மாநகர ஒன்றிய பொறுப்பாளர்கள் தோழர்கள் பங்கேற்றார்கள்.
பெரியார் முழக்கம் இதழ்05022026.

You may also like...