டெல்லி ஆதிக்கத்தை தமிழ்நாடு முறியடிக்கும்!
திமுக கூட்டணியில் காங்கிரஸ் சலசலப்புகளால் மகிழ்ச்சிக்கூத்தாடியவர்கள் இன்று சோகத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள். தேமுதிக அணி திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டது. இதற்கு அக்கட்சியின் தலைவர் பிரேமலதா கூறிய காரணம் மிகவும் முக்கியமானது:
தொண்டர்களின் விருப்பத்தின் காரணமாகவே இந்த கூட்டணியில் இணைந்திருக்கிறோம் என்று அவர் கூறியிருக்கிறார்; தொண்டர்களின் மனநிலை இயல்பாகவே திமுக அணிக்கு ஆதரவாகவும் அதுவே வெற்றி பெறும் அணி என்ற உறுதியான நம்பிக்கையாலும் உருவாகிறது.
ஆட்சியில் இருக்கும் கட்சியின் மீது அதிருப்திகள் உருவாவது இயல்புதான் என்ற பொதுவான கருத்தை திராவிட மாடல் ஆட்சி தன்னுடைய சாதனைகளால் தகர்த்து இருக்கிறது; அதன் காரணமாகத்தான் இதுவரை கூட்டணியில் இடம் பெறாத தேமுதிக, திமுக அணியில் வந்து சேர்ந்திருக்கிறது.
இதுவரை தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் அறியப்பட்ட அதிமுக கூட்டணி இப்போது பெயர் மாற்றம் பெற்று என்.டி.ஏ.கூட்டணி ஆகிவிட்டது. எடப்பாடி தான் முதல்வர் என்ற ஒற்றைப் புள்ளியில் மட்டும் அதன் அடையாளம் தெரிகிறது. தினகரனையும் அன்பு மணியையும் பாஜக தான் தனது அதிகார வலிமையினால் கூட்டணியில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியால் கூட்டணிக்கு கொண்டுவரப்பட்ட தேமுதிக இப்போது விலகி விட்டது. ஆட்சியில் பங்கு உண்டு என்று அறிவித்து தேர்தல் களத்தில் கதவைத் திறந்து வைத்திருக்கும். த.வெ.க வை நோக்கி இதுவரை எந்த கட்சியும் நகரவில்லை;
கூடுதல் இடங்களுக்கு பேரம் பேசுவதற்கு மட்டுமே இந்த கட்சியை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் சுயாட்சி உரிமை வேண்டும் என்ற பிரகடனத்தை சட்டமன்றத் தீர்மானமாக நிறைவேற்றி தேர்தல் களத்தை சந்திக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இந்தியாவின் கூட்டணிக்கே இவரே பொருத்தமான தலைவர் என்ற குரல் இயல்பாகவே கேட்கத் துவங்கியிருக்கிறது.
திமுக கூட்டணியின் தலைவர் என்ற எல்லை கடந்து இந்திய கூட்டணியின் தலைவராக கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறார் தமிழ்நாடு முதல்வர். டெல்லி ஆதிக்க எதிர்ப்புக் கொடியை கரங்களில் ஏந்தி மக்கள் தீர்ப்பைக்கோரி நிற்கிறார்.
எதிர் அணிகளோ தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்றிய அரசு இழைக்கும் துரோகங்களை எதிர்க்காமல் நடுங்கி வாய்மூடிக் கிடக்கின்றன. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எடப்பாடி பழனிச்சாமியால் மறுக்க முடியவில்லை; அந்த வளர்ச்சியில் தங்களுக்கும் பங்கு உண்டு என்று உரிமை கோரும் நிலைக்கு வந்துவிட்டார்.
கொசுக்கடி;சாலை விபத்து; காவல் நிலைய பிரச்சனைகள்; என்று அன்றாட நிகழ்வுகளை வைத்தே திமுக அணியை எதிர்க்கும் அவல நிலையில் எதிர்க்கட்சிகள் நிற்கின்றன. ஆட்சியின் மகத்தான சாதனைகள் இவர்களை மவுனமாக்கி விட்டன. எண்ணிக்கைகளை விட இறையாண்மைக்கு போராடும் சட்டமன்றத் தேர்தலை தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன் முதலாக சந்திக்கப் போகிறோம். அதற்கு களத்தை தயார் செய்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின். திராவிடம் வென்று காட்டும்!
பெரியார் முழக்கம் இதழ்262026
