கழகப் பொதுச்செயலாளருக்குப் பாராட்டு விழா!

திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளரும், புரட்சிப் பெரியார் முழக்கம் இதழின் ஆசிரியருமான விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ‘பெரியார் விருது’ வழங்கி பெருமை சேர்த்தது. இதற்காக பொதுச்செயலாளரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சார்பில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்திய அலுவலர்கள் அசோசியேசன் சங்க கட்டடத்தில் 26.01.2025 அன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.

மாணவர் நகலக உரிமையாளர் செளரிராஜன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், மூத்த வழக்கறிஞர் துரைசாமி, வாலாசா வல்லவன், சட்டமன்ற உறுப்பினர் எழிலன், மருத்துவர் அமலோற்பவநாதன், வீ.அரசு, பேராசிரியர் கல்யாணி, தடா ஓ.சுந்தரம், பத்திரிகையாளர்கள் சிகாமணி, வீரபாண்டியன், சுகுணா திவாகர், வழக்கறிஞர் அஜிதா, மனநல மருத்துவர் சிவபாலன், மருத்துவர் தாயப்பன், சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்டோர் பொதுச்செயலாளர் உடனான தங்களது அனுபவங்கள், பொதுச்செயலாளரின் அர்ப்பணிப்புமிக்க இயக்க – எழுத்துப் பணிகளை பாராட்டிப் பல்வேறு செய்திகளை பகிர்ந்து கொண்டனர்.

இறுதியாக ஏற்புரை நிகழ்த்திய கழகப் பொதுச்செயலாளர், “இந்த விருது தன்னை விட இயக்கத் தோழர்களுக்கே அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களுடைய கொண்டாட்டங்கள்தான் எனக்குள் ஓர் உணர்வலைகளை ஏற்படுத்தியது. அதுபோல இங்கே பேசிய எல்லோரும் என்னை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்கள். ஆனால் என்னுடைய இயல்பான பணியைத்தான் நான் செய்திருக்கிறேன். இந்த பணியை நான் விரும்பி செய்திருக்கிறேன். எனக்குத் தெரிந்ததும் இந்த பணி ஒன்றுதான். பெரியாரியலை இன்னும் வீரியமாக மக்களிடம் எடுத்துச் செல்லும் பணியை இனிவரும் காலங்களிலும் மேற்கொள்வோன்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் கழகப் பொதுச் செயலாளருக்கு கடந்த ஆண்டு மருத்துவம் பார்த்த மருத்துவர்களுக்கு பயனாடை அணிவித்து பாராட்டு செய்யப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். ஊடகவியலாளர் மு.குணசேகரன் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். அனைவருக்கும் இரவு உணவு விருந்தளிக்கப்பட்டது.
பெரியார் முழக்கம் 30012025 இதழ்

You may also like...