இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 11
காட்சி – 11
இடம் : இலங்கை இராவணன் அவை.
பாத்திரங்கள் : இராவணன், மேகநாதன், கும்பகர்ணன், விபீடணன், அமைச்சர்கள், அவைப் பிரதிநிதிகள், சேனாவீரர்கள், மற்றும் பலர்.
இராவ : சிங்கத்தின் பீடத்திலே சிறு நாயை ஏற்றி விட்டார்கள்! துரோகம் வீரத்தை விழுங்கிவிட்டது! வாலியை மறைந்து நின்று கொன்றுவிட்டு, சுக்ரீவனை மன்னனாக்கி விட்டார்களாம் அந்த ஆரியச் சிறுவர்கள்.
மேக : சதிக்குச் சாய்ந்துவிட்டதே அப்பா; சமருக்கு அஞ்சாத தென்னாடு.
இராவ : வஞ்சகர்கள் பெருகிவிட்டார்கள் குழந்தாய்!
மேக : மாற்றானின் கால்பிடித்து மன்னன் ஆவதைவிட, மானத்தை விட்ட செயல் வேறு உண்டா?
இராவ : பதவிப் பித்து மானத்தை மறக்கடித்துவிட்டது ஒன்றுபட்ட தமிழகத்திலே தமிழன் வாழ்க்கையிலே பிளவு, ஆரியத்தின் ஊடுருவல்….
மேக : அந்த பேதத்தை நீக்க வேண்டியது தங்கள் கடமை அப்பா. இராவ : அதற்காகத் தமிழனும் தமிழனும் மோதிக் கொள்ள வேண்டியதுதான்; வந்திருக்கும் ஆரியர்களுக்காக வாளேந்தி நிற்பவர்கள் யார்? நம்மவர்கள் தானே? நாம் போர் தொடுக்கலாம்; வெற்றியும் காணலாம். ஆனால், அங்கு ஓடுவது தமிழனுடைய ரத்தமாகத்தானே இருக்கும்?
தலைமை அமைச்சர் : நாம் போராடாவிட்டாலும் அந்தப் புல்லர்கள் படை திரட்டிக் கொண்டிருக்கிறார்களே. அவர்கள் நம்மீது போர்தொடுக்கலாமே?
இராவ : படை! ஆரியர்கள் அயோத்தியிலா படை திரட்டுகிறார்கள் இராவணனை முறியடிக்க? அப்படியிருந்தால் ஆயிரமாயிரம் ஆரிய மன்னர்களை முறியடித்த தமிழனின் வீரம் குன்றியாவிட்டது? இன்றே படை கொண்டு சென்று அழிப்பேனே அந்த அற்பர்களை!
மேக : ஆரிய நரிகள் எப்போதுமே நம்மவர்களைத் தான் மோத விடுவார்கள்; தங்கள் காரியத்தைச் சாதிக்க……
இராவ : அதற்கு அச்சாரம் வாங்கிவிட்டார்கள்; அனுமானும் சுக்ரீவனும் என்றால், நாமும் அந்த வேலையையா செய்யவேண்டும்? சுக்ரீவனுக்கு சொந்தப் புத்தி வராமலா போய்விடும்?
மேக : சொந்தப் புத்தி! அண்ணனை ஆரியனுக்குக் காட்டிக் கொடுக்கும்போதே அதை இழந்துவிட்டான் அந்தத் துரோகி!
இராவ : நாம் சொல்லிப் பார்ப்போம்…
மேக : ஆரியச் சேற்றிலே புரளுபவனுக்கு அறிவு மணம் பயனற்றது.
இராவ : அதை விட்டுக் கரையேற்றுவோம்.
மேக : இனிமேல் அது வீண் வேலை.
இராவ : அப்படியானால்….? மேக : போர்! போரேதான் புல்லுருவிகளுக்குப் புத்தி புகட்டும் ஒரே வழி.
இராவ : தமிழர்களிலே ஒரு பகுதி ஒழியவேண்டுமென்கிறாயா?
மேக : ஆம், தகாதவர்கள் – அன்னியன் தாளைப் பிடிப்பவர்கள் – தமயனைக் காட்டிக் கொடுத்தவர்கள் – தமிழனைக் கூறுபோடும் தறுதலைகள் – அனுமார்கள் – சுக்ரீவர்கள் – அங்கதர்கள் – அவர்களைச் சேர்ந்தவர்களை எல்லாம் இனி ஒருபோக தமிழகம் தாங்காது – தாங்க விடக்கூடாது. ஒழிந்து போக வேண்டியதுதான் அவர்களுக்கான ஒரே முடிவு.
இராவ : ஆத்திரப்படுகிறாய் மேகநாதா!
மேக : அவசரமும் படுகிறேன் அப்பா! ஆரியர் இட்ட தீ வாலியை ஒழித்துவிட்டதோடு நிற்கவில்லை. அந்த நாட்டு மக்களின் உள்ளங்களையே எரித்துவிட்டது… அது இலங்கையைத் தீண்டும் முன்னரே நாம் அணைக்க வேண்டும். அவையோர்களே, உங்கள் ஆதரவு தேவை! என்ன சொல்லுகிறீர்கள்? உத்தரவு கொடுங்கள் இன்றே போர் தொடுக்க….
இராவ : மேகநாதா! சுக்ரீவன் சூதர்களோடு சேர்ந்திருக்கலாம்; சொந்த அண்ணனையே கொன்றிருக்கலாம்; ஆரியர்களின் அடிமையாகவும் மாறி இருக்கலாம் அத்தனையும், அவர்கள் உள்நாட்டு விவகாரமல்லவா? அதிலே நாம்……
மேக : தலையிடுவது கூடாது என்கிறீர்களா! அப்பா! சீதையை மீட்பதற்கு – இலங்கையோடு மோதுவதற்குத்தானே – சூதன் சுக்ரீவன் படை திரட்டிக் கொண்டிருக்கிறான்?
இராவ : படை திரட்டுவது உண்மை . எதற்கு என்பது இன்னும் தெளிவாகவில்லை.
மேக : உம், ராமனோடு – ஆரியர்களோடு கூடிக்கொண்டிருக்கிறானே, அது எதற்காக?
இராவ : சந்தேகப்பட வேண்டிய விஷயந்தான்; இருந்தாலும், பொறுத்துப் பார்க்கலாம்.
மேக : வெள்ளம் வந்த பிறகா அணையைப் பற்றிய யோசனை?
இராவ : வல்லவர்களின் ஆற்றலிலே நமக்கு நம்பிக்கை உண்டு.
மேக : தாக்கும் புலியை எதிர்க்கும்போது – தவழும் பாம்பைப் பார்க்க முடியாதப்பா. முன்னேற்பாடு மிகவும் அவசியம்.
இராவ : உண்மைதான். இருந்தாலும், இலங்கைத் தமிழனில் அத்தகைய ஈனன் இருக்கவே மாட்டான்.
மேக : ஆரிய போதை அவர்களை உண்டாக்கிவிடலாமே!
இராவ : மேகநாதா! நாம் யார் என்பதை எப்போது உணர்வார்கள்.
சேனாதிபதி : எதற்கும் நாம் தயாராக இருப்பதே நலம்.
தலை.அமை : ஆம் மன்னவா! இளவரசர் வார்த்தைகள் பெரும்பாலும் உண்மையென்றே படுகிறது.
இராவ : நல்லது. இவை பற்றிய முடிவை நாம் நாளை கூறுவோம்.
இன்று சபை இத்தோடு கலையலாம்.