கடவுள் உண்டா? சவால் விட்ட நாத்திகர்-கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை-17

டாக்டர் ஆபிரகாம் கோவூர் அவர்கள் ஒரு தலைசிறந்த நாத்திகர், மனோதத்துவ நிபுணர். அறிவியல் அறிஞர். எதையும் அறிவுபூர்வமாகப் பேசி, உண்மைகளை நிலைநிறுத்திடும் ஆற்றல் வாய்ந்த ஒரு சமுதாய விஞ்ஞானி

கேரளத்தில் பிறந்தவராயினும், இறுதி வாழ்க்கையை இலங்கையில் அமைத்துக் கொண்டவர். சிறீலங்காவில், கொழும்புவில்தான் 1978 செப்-18-ல் அவர் மறைந்தார்.

பல ஆண்டுகாலம் தமிழ் நாட்டிலும் இந்தியாவின் இதர மாநிலங்களிலும் தீவிர பகுத்தறிவுப் பிரச்சாரம் புரிந்தவர் அவர். டாக்டர் கோவூர் “கடவுள்” உண்டு என நிரூபிப்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு தருகிறேன் என்று சவால்விட்டார். எவர் முன் வருவார்? அப்படி ஒன்று இருந்தால் அல்லவா நிரூபிக்க முடியும்? அவரது பகுத்தறிவுப் பிரச்சாரத்தை பெரியார் இயக்கம் பயன்படுத்திக் கொண்டது.

கோவூர் பலமுறை தமிழ்நாடு வந்து திராவிடர் கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது உண்டு. கோவூர் எழுதிய தன்னுடைய சுயவரலாற்றிலிருந்து சி ல

கேரளாவில் தீண்டத்தகாதவர்கள் தாங்கள் நடக்கும் வழியிருந்தால் அகன்று போய்விடுவதற்கு எச்சரிக்கையாக, நம்பூதிரிகள் ஆய், உய் என்று கூச்சலிட்டுக் கொண்டே நடந்து செல்வதை நான் என் சிறுவயதில் வியப்புடன் கண்டதுண்டு. ஒரு நாள் ஈழவ வகுப்பைச் சேர்ந்த குன்னிராமன் என்னும் எங்கள் வேலையாளுடன் நான் ஆற்றைக் கடந்து அக்கரை செல்லும் அலுவல் இருந்தது. ஆற்றைப் படகு மூலமே கடக்கவேண்டும். நாங்களிருவரும் சென்ற போது அந்தவூரின் தலைமை நம்பூதிரி படகில் நின்றிருந்தார். அவருக்குத் துடுப்புப் போடத் தெரியாததால் உதவிக்கு என்னை மட்டும் படகில் ஏறச்சொன்னார். அவரை அக்கரையில் விட்டு விட்டுத் திரும்பிவந்து குன்னிராமனை ஏற்றிக்கொண்ட நான், படகில் ஏற மறுத்த குன்னிராமனின் கையைப்பற்றி இழுத்துப் படகில் ஏற்றினேன். ஆற்றின் ஆழத்தைக் கூடக் கருத்தில் கொள்ளாமல் அந்த நம்பூதிரிப் பார்ப்பனர் நீரில் குதித்து, நீந்தத் தெரியாததால், உயிருக்கு மன்றாடித் தத்தளித்தார். அந்த ஜலசமாதியில் மாண்டுபோகாமல் அவரைக் காப்பாற்றுமாறு, சிறந்த நீச்சல்காரனான குன்னிராமனைப் பணித்தேன். அவரைக் கரையில் சேர்ப்பதற்குள் பெருங்கூட்டம் சேர்ந்துவிட்டது. “இப்போது என்ன சொல்கிறீர்கள்? இந்த ஈழவர் தொட்டுத் தூக்கியதற்காக இன்னொரு தடவை குளிக்கப் போகிறீர்களா?” என்று நான் கேட்டபோது, நம்பூதிரிக்கு அவமானமாய்ப் போயிற்று!

இதேபோன்ற பிள்ளை விளையாட்டு, இன்னொன்றும் என் நினைவில் நிழலாடுகிறது. திருவள்ளாவிலுள்ள மார்தோமா சிரியன் சர்ச்சின் தலைமை மதகுரு (முதிய பிஷப்) ஒருவருக்குத் திருமணம் நடக்க இருப்பதாக, ஒரு வதந்தியைக் கிளப்பிவிட்டேன். இவர்களோ, தங்கள் பால் உணர்வுகளை மழுங்கவைத்துக்கொண்டு, பிரம்மச்சாரிகளாக வாழ்பவர்கள். மாணவரிடையே பலத்த புயலாக இது பரவி, பெரிய விசாரணைவரை சென்று தலைமை ஆசிரியரிடம் எனக்கு அரைடஜன் பிரம்படி வாங்கித்தந்தது. 18 மைல்களுக்கு அப்பாலுள்ள கோட்டயம் உயர்நிலைப் பள்ளி மாணவனாக நான் இருந்து, இதே நகைச்சுவைப் புரளியை உண்டு பண்ணியிருந்தால், இந்தத் தண்டனை எனக்குக் கிடையாது. காரணம், அங்குள்ள ஆங்கிலிகன் சர்ச் பாதிரிமார்கள் எத்தனைத் திருமணம் வேண்டுமாயினும் செய்துகொள்ளலாம். கிறித்தவ மார்க்கத்திலேயே எத்தனை முரண்பாடுகள் பார்த்தீர்களா?

1958-இல் ஒரு நாள் கொழும்புவிலுள்ள உணவு விடுதி ஒன்றில் திருமதி திரு ராபர்ட்ஸ் என்னும் அமெரிக்கத் தம்பதிகள் அப்போதுதான் இந்தியாவில் ஒரு மாதகாலம் சுற்றுப் பயணம் செய்து இலங்கை வந்தார்கள். “இந்தியாவைப் பற்றி உங்களது கருத்து என்ன?” என்று விசாரித்தேன். அவ் வம்மையார் “நாடு நன்றாகத்தான் உள்ளது. ஆனால் மக்கள்தான் மூடநம்பிக்கையில் ஆழ்ந்து முட்டாள்களாய் இருக்கின்றனர்” என்றார் வேதனையோடு. அந்த ஆண்டு பிரயாகையில் நடந்த ‘கும்பமேளா’ பற்றி அவர் விவரித்தார்.

கங்கையும் யமுனையும் சங்கமம் ஆகும் இடம் அது. பூமிக்கடியில் தேவலோகத்திலிருந்து வரும் சரசுவதி நதியும் அங்கு வந்து சங்கமம் ஆவதாக ஒரு மூடநம்பிக்கை. அதனால் அது திரிவேணி சங்கமம்! ஏறத்தாழ 60 இலட்சம் மக்கள் அன்று அங்குக் குழுமி, அந்த நீரில் மூழ்கித் தங்கள் பாவங்களைக் கழுவிப் போக்கிக் கொள்கிறார்கள்! கோவில் மணிகளையும் சங்குகளையும் ஒலித்து, எப்போது நல்ல நேரம் என்று அறிவிக்கிறார்கள். உடனே ஒருவரையொருவர் அடித்துமோதி மிதித்து நெரித்துச் செத்து மடிகிறவர்களைப்பற்றிக் கவலையில்லாமல், சேற்றைப் பூசிக்கொள்கிறார்கள்! பிறகு பிணங்களைச் சேற்றினின்றும் இழுத்து எறிகிறார்கள். இப்படிச் சாவதால் நேரே மோட்சலோகம் செல்லலாம் அல்லது அடுத்த பிறவியில் மேலானநிலை பெறலாம் என்பது மூட மதி கொண்ட இந்திய மக்களின் நம்பிக்கை. இது அமெரிக்கர்களுக்கு மிகுந்த எரிச்சலூட்டும் நடவடிக்கை!

அப்போது இந்தியக் குடியரசுத் தலைவரான டாக்டர் இராஜேந்திர பிரசாத்தும் பிரயாகைக்கு வருகை தந்து மக்களின் இந்த முட்டாள்தனமான திருவிழாவில் கலந்துகொண்டதை அந்த அமெரிக்கப் பெண்மணி வருத்தத்துடன் குறிப்பிட்டு, “இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளை ஒழிப்பது பற்றி நீங்கள் தீவிரமாகச் சிந்திப்பதில்லையா?” எனவும் கேட்டார். “எங்கள் நாட்டு மக்களைப் போலவே உங்கள் நாட்டு மக்களின் மூடநம்பிக்கை பற்றியும் நான் சிந்திக்கிறவன்!”என்றேன். “எங்களிடமும் மடமை உள்ளதா?” என்றார். “ஆமாம்! எங்கள் வேதங்களும், மதகுருமார்களும், கங்கையில் மூழ்கினால் பாவங்கள் தொலையும் என்கிறார்கள். உங்கள் திருமறையும், பாதிரியார்களும், ஞானஸ்நானம் செய்து பாவங்களைக் கழுவுவதாகச் சொல்வதை நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு நம்புகிறீர்கள். ஒரு வேறுபாடு நீங்கள் நல்ல நேரம், நாள் என்று குறிப்பிட்டுச் செய்யாததால் எங்களைப் போல் கூட்டத்தில் மிதிபட்டுச் சாவதில்லை” என்றதும், அதுவரை அனைத்தையும் கூர்ந்து கவனித்து வந்த திரு ராபர்ட்ஸ் “அய்யா! எங்களிருவர் சிந்தனைக்கும் நல்ல விருந்தளித்தீர்கள்!”. என்று பாராட்டினார் என்னை.

சிலோன் பெந்தகோஸ்ட் எனப்படும் ஒரு பிரிவினர் கிறித்தவர்களில் மூடநம்பிக்கை மலிந்த ஒரு குழுவினராவர். அவர்கள் ஒரு நாள் என் துணைவியாரையும் என்னையும் விருந்துக்கு அழைத்திருந்தனர். அங்குச் சென்றதும் தெரிந்தது, அவர்கள் என்னை வாதுக்கு அழைத்திருந்தனர் என்பது. நோய் வந்தால் மருந்து சாப்பிடக்கூடாது; கடவுளிடம்தான் மன்றாடவேண்டும். நோய் என்பது கடவுள் நமக்களித்த தண்டனை; நாம் ஏதோ பாவம் செய்திருப்போம்; நாம் மருந்து சாப்பிட்டால், நோய் மூலமாக நம்மைத் தண்டித்த கடவுளின் நோக்கம் தோற்றுவிடும்-என்பது அவர்கள் வாதம். “மருத்துவ விஞ்ஞானத்தின் மூலமாகக் கடவுளின் நோக்கத்தைத் தோற்கடிக்க முடியுமானால், மனிதன் கடவுளை விட அதிக சக்தி வாய்ந்தவன் என்பது புலனாகிறது. மருந்து சாப்பிடக்கூடாது என்பவர்கள், உணவு மட்டும் சாப்பிடலாமா?” நான் வினாத் தொடுத்தேன், இவ்வாறு தொடங்கி..

“உணவு மருந்தாகாது. ஏசுபிரானே உணவு அருந்தியிருக்கிறாரே?” என்றார் அங்கிருந்த பாதிரியார்.

“நீங்கள் சொல்வது தவறு. பசி என்னும் நோயைப் போக்கும் மருந்துதான் உணவு. தாகம் என்னும் நோயைத் தீர்க்கும் மருந்துதான் தண்ணீர்” என்று வாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தேன் நான்.

கடவுளர் – தேவதைகள் – ஆவிகள்

என் தாயார் இறந்தவுடன் நான் 1942-இல் என் சொந்த ஊருக்குச் சென்றேன் (கேராளவில்). எங்கள் வீட்டுத் தோட்டத்தின் மூலையிலிருந்து சிறு குடிலில், என் அண்ணன் மகளான ஆனியை மய்யத்தில் வைத்து, அவளைச் சூழ்ந்து அண்டை அயலில் உள்ள கிறித்தவப் பெண்மணிகள் அமர்ந்து, இறைவழிபாடு (ஜெபம்)-பிரார்த்தனை முதலியன செய்வது, நாள்தோறும் நிகழ்ந்து வந்ததைக் கண்ட நான், என்ன என்று என் அண்ணனைக் கேட்டபோது; “நம் அம்மா இறந்த பிறகு, நமது ஆனி, வானத்தை அண்ணாந்து பார்க்கும் போதெல்லாம், நம் அம்மாவைச் சுற்றித் தேவதைகள் கைகளில் மெழுகுவத்திகளோடு சொர்க்கத்தை நோக்கிப் போவது நன்கு தெரிகிறதாம். அதனால் நம் ஆனி, தெய்வத்தின் அருள் பெற்ற நங்கையென, அருகிலுள்ள கிறித்தவ மகளிர்கள் மதித்துப் போற்றுகிறார்கள்” என்றார்.

ஹிப்னாடிசம் (நினைவுத் தூக்கம்) மூலமாகவும் இப்படிப்பட்ட “கற்பனைக் கனவு காணும்” உணர்வுகளை உந்திவிட முடியும். முற்பிறப்பில் நம்பிக்கையுள்ள ஓர் இந்து அல்லது ஒரு பவுத்தரை இப்படி ‘ஹிப்னொடைஸ்’ (மயங்கச்) செய்தால், அவர் உடனே தமது முந்திய பிறவிபற்றிக் கதையளக்கத் தொடங்குவார். சொர்க்கம்-நரகம் இவற்றை நம்புகின்ற ஒரு கிறித்தவர் அல்லது ஒரு முஸ்லீம் இப்படி ஹிப்னாடிசத்துக்கு உள்ளாக்கப்பட்டால் அவர் சொர்க்கத்திலிருப்பதாகவும் கூறப்பட்டால், உடனே அதைப் பற்றி, வருணிக்கத் தொடங்கிவிடுவார். இப்படி ஓர் அரை மயக்க நிலையிலிருப்போரிடமிருந்து உண்மைகள் வரவழைப்பதாகச் சொல்வது முட்டாள் தனமாகும். மனோதத்துவ (உளவியல்) மருத்துவர்களுக்கு வேண்டுமானால் இது ஆராய்ச்சிக்கு உதவலாம்.

குறிப்பு: இறைநம்பிக்கையை போலவே நடிகர்கள் மீதான “ரசிக”நம்பிக்கையும் கும்பல் மரணத்துக்கு காரணமாகிவிடுகிறது.
– தொடரும்
பெரியார் முழக்கம் இதழ் 02102025

You may also like...