‘இடையாற்றுமங்கல’ புரட்சி!
வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ர.பிரகாஷ் எழுதி வருகிறார். லால்குடி இடையாற்று மங்கலத்தில் பெரியார் தொண்டர்கள் பண்ணை ஆதிக்கத்தை எதிர்த்த சுருக்கமான வரலாறு. பகுத்தறிவுக் கொள்கைகளை முழுமையாகக் கடைப்பிடிக்கும் ஊர்களைப் பற்றிய பதிவாக ஒரு தொடர்.
கீழத்தஞ்சையில் மட்டும் திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கத்தில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் இருந்தனர். குடந்தையில் அதன் முக்கிய முகங்களில் ஒருவராக இருந்த ஜோசப்பை லால்குடிக்கு அனுப்பினார் பெரியார். `விளைச்சலைச் சமமாகப் பங்கிடு’, `நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கு’ போன்ற முழக்கங்களை விவசாயக் கூலிகள் மனதில் ஆழமாகப் பதியச் செய்தார் ஜோசப். ஊர்வலங்கள், பிரச்சாரங்கள், துண்டறிக்கை விநியோகம் என பெரியார் கொள்கைகளும் சேர்ந்து பரப்பப்பட்டன.
பண்ணையாளர்களோடு தொடர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். கொண்டையம்பட்டி செட்டியார் பண்ணை படியாததால், அறுவடையை மொத்தமாக எடுத்துக்கொள்வது என முடிவு செய்தனர். அறுவடைக் களத்தில் திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கத்தி னருக்கும் கொண்டையம்பட்டி செட்டியார் பண்ணை ஏவிய, கொடிக்கால் விவசாயிகளுக்கும் இடையே மோதல் மூண்டது. திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 12 பேர் துடிதுடிக்க வெட்டிக் கொல்லப்பட்டனர்.
பாப்பம்மாள் பண்ணை, மணக்கால் பண்ணை, தாத்தாச் சாரியார் பண்ணையிலும் மோதல் எதிரொலித்தது. பண்ணைகள் ஒன்றுகூடி, மதுரையில் இருந்து ஆட்களை அழைத்து வந்தனர். அவர்கள் வயலில் இறங்கிய நொடியில் மோதல் வெடித்தது. மோதலில், வெளியூர் தொழி லாளர்கள் 7 பேர் இறந்தனர். அங்குள்ள வாளாடியிலும் பண்ணை ஆதிக்கம் தீவிரமாக இருந்தது. மொத்த ஊரும் பார்ப்பனர்களுடை யது. அதற்கெதிராக அங்கிருந்த திராவிடர் கழகச் செயற்பாட்டாளர் கோவிந்த ராஜ் இயங்கிக் கொண்டிருந்தார். அதன்விளை வாக, விவசாயத் தொழிலாளர்கள் கிடைக்காமல் நேரடியாக, பார்ப்பனர்களே வயலில் இறங்கினர். இந்திய வரலாற்றில் முதன்முதலாக பார்ப்பனர்களே வயலில் இறங்கி, வேலைபார்த்த முதல் சம்பவம் இதுதான்.
மோதல்போக்கின் தொடர்ச்சியாக, விவசாயிகளுக்கு 40%, பண்ணைகளுக்கு 60% என அறுவடையில் பங்கு பிரித்து, அவசரச் சட்டம் இயற்றினார் அன்றைய முதல்வர் ராஜாஜி. 1954-இல் ஆட்சிக்கு வந்த காமராசர் விவசாயிகளுக்கு 60%, நிலவுடமையாளர்களுக்கு 40% என குத்தகைதாரர் சட்டத்தை இயற்றினார். குத்தகைதாரர் சட்டம் மட்டும் போதாது என நிலங்களைப் பகிரும் வேலையை மேற்கொண்டது `திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம்’. சமரசத் தீர்வாக அன்றைய ஆட்சியர் மலையப்பனும் இந்நடவடிக்கைகளுக்கு உடன் நின்றார். மலையப்பனைக் கண்டித்து `இந்து’ பத்திரிகை தலையங்கமே எழுதியது. `இவரைப் போன்றவர் பதவியில் இருப்பதே ஆபத்து’ என நீதிபதி கூறினார். வழக்குத் தொடுத்தவர், அரசு வழக்கறிஞர், நீதிபதி என அனைவருமே பார்ப்பனர்கள்.
அப்போது திருச்சி, காந்தி மார்க்கெட்டில் நடந்த ஒரு கூட்டத்தில், ஆட்சியர் மலையப்பனுக்கு ஆதரவாக பார்ப்பனர்களைக் கண்டித்து ஆவேசமாக உரை யாற்றினார் பெரியார். வாளாடி, உத்தமர்சீலி, கூகூர், மணக்கால் என அனைத்து ஊர்களுமே இடையாற்று மங்க லத்தில் இருந்து 3 முதல் 7 கி.மீ. தொலைவுக்குள் இருப்பவை. ஒரு பண்ணையில் விழுந்த சிறு கீறல், மற்ற பண்ணைகளிலும் விரிசலை ஏற்படுத்தின. அந்த விரிசலைப் பெரும் பிளவாக்கி, பண்ணை ஆதிக்கத்தோடு, ஜாதிய கட்டமைப் பையும் தகர்த்தது திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம். இன்றும் அங்கு எல்லா சமூகங்களும் நிலம் வைத்திருக்கின்றன. அதற்கான வலுவான அடையாளமாக இன்றும் திகழ்கிறது இடையாற்றுமங்கலம்.
பெரியார் முழக்கம் 26062025இதழ்
