தொலைக்காட்சிகளில் ஜாதி வரன் தேடும் விளம்பரங்களை தடை செய்க
“தமிழ்நாட்டு கிராமங்களில் ஜாதிய பாகுபாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுகின்றன. திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் நிலவும் தீண்டாமை வடிவங்களை நேரில் சென்று ஆய்வு செய்து, அந்த அறிக்கையை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்திடம் நேரில் வழங்கினர்.
தலித் மக்கள் வாழும் பகுதிகளில் ரேஷன் கடைகள் நடத்தத்தடை, முடிவெட்ட மறுப்பு, இரட்டை தம்ளர் முறை, இருசக்கர வாகனங்களில் செல்லத் தடை போன்ற பல்வேறு வடிவங்களில் தீண்டாமை பின்பற்றப்பட்டு வருகிறது.
அண்மைக்காலமாக உயர்நீதிமன்றங்கள் ஜாதிக்கு எதிராகதீர்ப்புகளை வழங்கி வருவது பாராட்டி வரவேற்கத் தக்கதாகும். ஜாதி அடிப்படையில் கோவில்களுக்கு உரிமை கோர முடியாது. கோயில் திருவிழா விளம்பரங்களில் ஜாதிப் பெயர் போடக்கூடாது. ஜாதியை நிலை நிறுத்தும் போக்கு, செயல்பாடுகள் அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் தொலைக்காட்சிகளில் ஜாதி வரன் தேடும் விளம்பரங்கள் ஏராளமாக வந்து கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பும் நாடகத் தொடர்கள், நிகழ்ச்சிகள், செய்திகளில் ஜாதி அடையாளம் இடம்பெறுவது இல்லை. ஜாதி கலவர செய்திகளை ஒளிபரப்பும் போது கூட இரு பிரிவினருக்குமிடையே என்று கூறி ஜாதிப் பெயரை குறிப்பிடுவதைத் தவிர்க்கின்றனர்.
ஆனால் வரன் தேடும் விளம்பரங்களில் வெளிப் படையாகவே ஜாதி அடையாளம் பேசப்படுகிறது, இது தடை செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.
தொலைக்காட்சி நிறுவனங்கள் இத்தகைய விளம்பரங்களை செய்தி ஒழுங்கு கருதி வெளியிடாமல் தவிர்க்க வேண்டும் என்று மாநாடு கேட்டுக்கொள்கிறது.
வன்கொடுமைகள் ஜாதியின் பெயரால் நடக்கும் போது காவல்துறை தலையிட்டு நடவடிக்கை எடுக்கிறது, ஆனாலும் தீண்டாமை அடிப்படையில் சிவில் உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்கிறது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் வாக்கு வங்கி கருதி இதற்கு மறைமுகமாகவோ, நேரடியாகவோ துணை போகிறார்கள். தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் சமூக நல்லிணக்கம் பேணும் கிராமத்திற்கு ஒரு கோடி பரிசு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். அதுபோலவே தீண்டாமையைப் பின்பற்றும் கிராமங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறது.
இந்த தீண்டாமை அவலங்களை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் தமிழ்நாடு அரசு முழு வீச்சோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டு மக்களும் காலத்திற்கு ஒவ்வாத பாகுபாடுகளை நிலைநிறுத்தும் இந்த ஜாதி அடையாளத்தை கைவிட்டு சமூக மனிதர்களாக வாழ முன்வர வேண்டும் என்றும் மாநாடு கேட்டுக்கொள்கிறது.”
பெரியார் முழக்கம் 27032025இதழ்
