ஆணவப் படுகொலை சட்டம் வரட்டும்; ஆனாலும் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை தொடர வேண்டும்!

தடைச்சட்டம் என்று ஒன்று இல்லாத காரணத்தினால் தான், ஆணவப் படுகொலைகள் நடக்கிறதா? வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருந்தும் கூட ஜாதியக் கொடுமைகள் நின்று விட்டதா? சட்டங்களும் வரட்டும்! ஆனால் ஆணவப் படுகொலைகளுக்கு ஊற்று எது? ஜாதிய கட்டமைப்புதான்! ஜாதியக் கட்டமைப்பை மீறக் கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா? இல்லை.

சமையலறை பெண்களுக்கே உரிமையானது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா? இல்லை. சட்டங்கள் ஏதும் இல்லாமலே, இவைகள் கண்டிப்பாக வாழ்க்கையின் சட்டங்களானது எப்படி?

ஆணவக் கொலையில் முதல் குற்றவாளியாக கூண்டில் ஏற்ற வேண்டியது ஜாதியையும் ஜாதி வெறியையும் தான்!

பிறப்பின் அடிப்படையில் விலையில்லாமல் கிடைக்கிறது ஜாதி.‌ அந்த விலையில்லா பொருளுக்கு மதத்தின் முதலீடுகள் இருக்கின்றன.‌இவை புரிந்துணர்வு ஒப்பந்தம் இல்லாமலே கிடைக்கின்ற முதலீடுகள்! மனுதர்மம், பகவத்கீதை, சாஸ்திரம், ஆகமம், வேதம், ராமாயணம், இதிகாசங்கள், சம்பிரதாயங்களில் இருந்து இந்த முதலீடுகள் வருகின்றன!

பிறப்பின் அடிப்படையில் விலையில்லாமல் கிடைக்கும் ஜாதியை இந்த முதலீடுகளே‌ இயக்கிக் கொண்டிருக்கின்றன. ஜாதியப் படிநிலைகளை கட்டமைக்கின்றன. சமூகத்தைச் சீரழிக்கும் இந்த முதலீடுகளின் அதிகாரங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று பெரியாரும் அம்பேத்கரும் போராடினார்கள்.

ஜாதி அடையாளம் இல்லாத ஒரு இந்து கூட இங்கே பிறப்பதில்லை. மக்களை ஜாதி என்ற சிறைக்குள் இந்து மதம் அடைத்து வைத்திருக்கிறது. இதிலிருந்து மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் இப்போதுள்ள வழக்கு, இதில் முதல் குற்றவாளிகள் ஜாதியும் மதமும்தான். ஜாதியையும் தீண்டாமையையும் மதத்திலிருந்து விலக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை! இந்த வழக்கை மக்கள் மன்றத்தின் முன் வைப்போம்! நியாயம் கேட்போம்!
– விடுதலை இராசேந்திரன், முகநூல் பதிவு
பெரியார்முழக்கம்இதழ்07082025

You may also like...