சவால் விட்ட தேர்தல் ஆணையம் சந்தி சிரிக்கிறது
தேர்தல் ஆணையம் நடத்தியுள்ள ஓட்டுத் திருட்டுகளை ராகுல் காந்தி ஆதாரத்துடன் அம்பலப்படுத்திவிட்டார். தேர்தல் ஆணையத்தின் முகத்திரை மக்கள் மன்றத்தில் கிழிந்து தொங்குகிறது! தலைமை தேர்தல்ஆணையர் ஞானேஷ்குமார் ராகுல் காந்தியை மிரட்டுகிறார். குற்றச்சாட்டுகளை ‘பிரமாண பத்திரத்தின்’ ஆவணமாக கையெழுத்திட்டுத் தர வேண்டும், 7 நாட்களில் சமர்ப்பிக்காவிட்டால் ஆணைத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் சவால் விட்டார்.
ஆனால் உச்சநீதிமன்றம் ராகுல் காந்தி கேட்ட கேள்வியை தேர்தல் ஆணையத்திடம் கேட்டபோது தேர்தல் ஆணையம் மண்டியிட்டுக் கிடக்கிறது. நீக்கப்பட்ட 65 இலட்சம் வாக்காளர்களுடைய பெயரை வெளியிட முடியாது என்று தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு போட்டது. உச்சநீதிமன்றம் அதை ஏற்க மறுத்து விட்டது. நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று ஆணையிட்டது. ராகுல் காந்தியை மிரட்டி பார்க்கலாம், ஆனால் உச்சநீதிமன்றத்தை இவர்களால் மிரட்ட முடியுமா?
உத்தரவிட்ட 56 மணி நேரத்தில் நீக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலை மட்டும் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு முகத்தில் கரியை பூசிக் கொண்டது. ஆனால் அப்படி வெளியிட்ட பட்டியலில் முழுமையான விவரங்கள் தராமல் மறைக்கப்பட்டது தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை நிரூபிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் ‘இந்து’ ஆங்கில நாளேடு வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டி ஒரு தலையங்கம் தீட்டி இருக்கிறது.
நீக்கப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்ட ஆணையம் அதற்கான காரணத்தை குறிப்பிடவில்லை ஏன்? இறந்தவர்களா? இடம் மாறியவர்களா? காணாமல் போனவர்களா? வெவ்வேறு இடத்தில் அந்த பெயர்கள் இடம் பெற்றதா? இந்த விவரங்கள் இல்லாமல் பெயர்களை மட்டுமே கொண்ட பட்டியலை ஆணையம் வெளியிட்டு இருக்கிறது.
நீக்கப்பட்டவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகம். சுமார் 32 லட்சம் பேர் பெண்கள், ஆண்கள் சுமார் 25 லட்சம் பேர் மட்டுமே. பீகாரில் இருந்து வேறு மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து வந்தவர்களில் ஆண்களே மிக அதிகம். இதற்கு புள்ளி விவரங்கள் இருக்கின்றன.
அண்மைக் காலங்களில் பீகாரில் இறந்தவர்களுடைய எண்ணிக்கையும் பெண்களை விட ஆண்களே அதிகம். இந்த நிலையில் நீக்கப்பட்ட பெட்டியலில் பெண்களே அதிகமாக இருப்பது ஏன்? உயிருடன் இருப்பவர்களை இறந்தவர்களாக நீக்கம் செய்துள்ளார்கள் (இறந்து போன வாக்காளர்களுடன் ராகுல் காந்தி தேநீர் விருந்து நடத்தியுள்ளார்).
உரிய ஆவணங்களை சமர்ப் பித்தவர்களே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.வழமையாக வாக்காளர் சரிபார்ப்பு ஜனவரியில் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகிறது. இப்போது சிறப்பு தேர்தல் திருத்தம் என்ற பெயர் சூட்டி 11 ஆவணங்களுடன் குடியுரிமையை உறுதி செய்யும் திட்டத்தை அமல்படுத்தும் தேர்தல் ஆணையம், சட்டப்படி செய்ய வேண்டிய வழமையான சரிபார்ப்பு நடவடிக்கையை தள்ளிவைத்துள்ளது இது சட்டப்படி சரியா?
தேர்தல் ஆணையம் வாக்காளர் பதிவுக்கு ஆதார், தேர்தல் ஆணைய அடையாள அட்டை, ரேஷன் கார்டுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அறிவித்தது. பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கும் இந்த அடையாளங்களை ஆணையம் ஏன் மறுக்கிறது? உச்சநீதிமன்றம் இதில் தலையிட்டு இந்த அடையாள அட்டைகளை ஆவணமாக ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டது இந்த அடையாளங்களுடன் மீண்டும் பதிவுக்கு வரும் வாக்காளர்களைப் பட்டியலில் இணைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சிறப்பு வாக்காளர்கள் சேர்க்கையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று உச்ச நீதிமன்றம் எடுத்துரைத்துள்ளது. வயது வந்துள்ள அனைவருக்கும் வாக்குரிமை என்ற அரசியல் சட்டத்தின் நோக்கத்துக்கு எதிரானது இந்த திட்டம்! இயற்கை நீதியை சீர்குலைக்கிறது.
சிறப்பு வாக்காளர் சேர்க்கை சட்டத்திற்கு உட்பட்டது தானா? என்பதையும் உச்ச நீதிமன்றம் ஆராய இருக்கிறது என்று ‘இந்து’ நாளேட்டின் தலையங்கம் கூறுகிறது.
தேர்தல் ஆணைய உறுப்பினர்களை நியமிக்கும் குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம் பெற்றிருந்தார். இதை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் ஒன்றிய ஆட்சி, தேர்தல் ஆணைய விதிகளைத் திருத்தி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை குழுவில் இருந்து நீக்கிவிட்டது. பிரதமர், அவரால் அடையாளப்படுத்தப்படும் ஒருவர், எதிர்க்கட்சி தலைவர் ஆகிய மூவர்தான் தேர்தல் ஆணையக்குழுவை தேர்வு செய்வார்கள் என்று தேர்தல் ஆணையத்தை தனது கைபிடிக்குள் கொண்டு வந்து விட்டது ஒன்றிய ஆட்சி. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இப்போது நிலுவையில் உள்ளது.
வாக்கு சாவடிகளில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை வெளியிட வேண்டும் என்று ராகுல் காந்தி கேட்டார். வாக்களிக்க வந்த பெண்களின் உருவங்களை எப்படி வெளியிட முடியும் என்றும் உங்கள் தாய், மகள், சகோதரிகள் படத்தை வெளியிடுவீர்களா? என்று ‘செண்டிமெண்ட்’ பேசுகிறார் தேர்தல் ஆணையத்தின் தலைவர்.
“வாக்குச்சாவடி ஒன்றும் உடை மாற்றும் அறைகள் அல்ல” என்று பதிலடி தந்துள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ். அப்படியானால் பெண்கள் முன் அனுமதி இல்லாமல் எப்படி ஆணையம் அவர்களை சிசிடிவி கேமராவில் பதிவு செய்தது என்று நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வறுத்தெடுக்கிறார்கள். தமிழ்நாட்டில் கடந்த தேர்தலில் பாஜக 11 சதவீத ஓட்டுகளை பெற்றதிலும் இத்தகைய தில்லுமுல்லுகள் அரங்கேறி உள்ளதாக புகார்கள் வந்துள்ளன. சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சமூக போராளி டீஸ்டா செடல்வாட் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும் தேர்தல் ஆணையத்தை நோக்கி 7 கேள்விகளை எழுப்பி உள்ளார். ராகுல் காந்தி வீசிய வெடிகுண்டு தேர்தல் ஆணைய மோசடிகளை அம்பலப்படுத்தி இருக்கிறது, உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டின் தேர்தல் தில்லுமுல்லுடன் நடப்பதை உலகம் கவனிக்க தொடங்கியுள்ளது.
பெரியார்முழக்கம்இதழ்21082025
