காஞ்சி சங்கராச்சாரி “பிராமண” வெறிப் பேச்சு-நடவடிக்கை எடுக்கக் கோரி கழகம்

பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்?” “வாருங்கள் வரலாறு பேசுவோம்!!” என்ற‌ தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் மார்ச் 15-ல் தொடங்கி மார்ச் 22- வரை தமிழ்நாடு தழுவிய பரப்புரைப் பயணங்களை நடத்தி நிறைவு விழா மாநாட்டை மயிலாடுதுறையில் மார்ச் 22.03.2025 மாலையில் நடத்தியது. மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசியல் சட்டத்திற்கு எதிராக இனவெறியைத் தூண்டி காஞ்சி சங்கராச்சாரி பேசிய பேச்சுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஏப்ரல் 21-இல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மாநாடு முடிவு செய்தது. தீர்மானத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்தார். பலத்த கரவொலி எழுப்பி, தோழர்கள் வரவேற்றனர்.
கடந்த ஜனவரி 19-ஆம் தேதி பெங்களூரில் “கர்நாடக பிராமண மகாசபையில்” பேசிய‌‌ காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திர சரஸ்வதி, அரசியல் சட்டத்திற்கு‌ எதிராக இன‌வெறியை தூண்டிவிட்டிருக்கிறார். வேத மதத்தை காப்பாற்ற “பிராமணர்களால்” மட்டுமே முடியும் எனவே “பிராமணியத்தை” நாம் காப்பாற்றியாக வேண்டும்.
“பிராமணர்களை” அடையாளப்படுத்தும் சந்திய வந்தனம், காயத்திரி மந்திரம்,‌ அக்னி பூஜைகளை கண்டிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் நடத்த வேண்டும். சடங்குகளை குடும்பத்தினரே நடத்த வேண்டும். வீட்டுச் சமையல் சாப்பிட வேண்டும். ஓட்டலில் இருந்து வரவழைத்து சாப்பிடக் கூடாது.
நமக்கான தனி‌ “அக்கிரகாரங்களை” உருவாக்க வேண்டும். 50-100 பிராமணர்கள் மட்டுமே வசிக்கக்கூடிய தனி குடியிருப்புகளை உருவாக்க வேண்டும். அப்போதுதான்‌ நம்முடைய கலாச்சாரத்தைக் காப்பாற்ற முடியும். இசை, சினிமா‌ மற்றும் கலை நிகழ்ச்சிகள் வழியாக நம்முடைய தர்மத்தைப் பரப்ப வேண்டும். கிராமங்களை நம்முடைய `பிராமண’ தர்மத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து மக்களை நாம் வழிநடத்த வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் கோயில்களிலும் நமது குல கோத்திரங்களை‌ நிலைநிறுத்தியாக வேண்டும். நமக்கான “மரபுவழி ஆடைகளை (மடிசார்), (பஞ்ச கச்சம்) கைவிடக்கூடாது” என்று‌ பேசி இருக்கிறார். அரசியல் சட்டத்துக்கு எதிரான இந்த இனவெறிப் பேச்சின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த பார்ப்பனியத்திற்கு துணைபோகும் போலித் தமிழ் தேசியவாதிகளை கண்டித்தும் ஏப்ரல் 21, 2025 அன்று தமிழ்நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டஙக்ளை நடத்த இந்த மாநாடு முடிவு செய்கிறது. கழகத் தலைவர் இந்த தீர்மானத்தை முன்மொழிய கழகத் தோழர்கள் பலத்த கரவொலியுடன் வரவேற்றனர்.
பெரியார் முழக்கம் 27032025இதழ்

You may also like...