ஜாதி பேதமும் வர்க்க பேதமும் வேறு வேறல்ல! – கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை
டிசம்பர் 16-ஆம் தேதி கோவை அண்ணாமலை அரங்கத்தில் நடந்த அனைத்திந்திய சாதி ஒழிப்பு இயக்கத்தின் 5-வது அகில இந்திய மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு கழகத் தலைவர் ஆற்றிய உரை.
பொதுவுடமை இயக்கங்கள் ஜாதியின்பால் தன் கருத்தைத் திருப்புமா என்ற எண்ணம் பல வேளைகளில் இருந்திருக்கிறது. அதுகுறித்த விவாதங்களும் கூட இருந்திருக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால்கூட எம்.சி.பி.அய் கட்சியினர் (யுனைடெட்) என்னிடம் வந்து பெரியார் நினைவுநாளை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் “மார்க்சியத்தின் மீதான எங்கள் விமர்சனங்கள்” என்ற தலைப்பில் நீங்கள் உரையாற்ற வேண்டும் என்று கேட்டனர். மார்க்சியர்கள் எப்போதுமே உலக நடப்புகளை துல்லியமாகக் கணித்து அதற்கேற்ப தங்கள் வரையறைகளை, செயல்திட்டங்களை வகுத்துக் கொள்ளும் பண்பு கொண்டவர்கள்.
ஜாதிய சிக்கல்களை கையிலெடுக்கிற மார்க்சிய இயக்கங்கள் அண்மைக்காலங்களில் பல இயக்கங்கள் வந்துவிட்டன. ஆனால் இதற்குமுன்புவரை ஏன் இவ்வளவு காலம் ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒரு வலுவான இயக்கத்தை முன்னெடுக்கவில்லை என்ற ஏக்கம் இருந்தது. அதை பணியை இப்போது ரெட் ஸ்டார் அமைப்பு முன்னெடுத்திருக்கிறது. அதற்கு எங்களுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை, மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறோம். எந்த இயக்கம் வந்தாலும் பார்ப்பனர்கள் அதை முதலில் கைப்பற்றி விடுவார்கள். அதன்காரணமாக நடந்த கூத்துக்களும் கொஞ்ச நஞ்சமல்ல. பெரிய தொழிற்சங்க தலைவர்களாக கருதப்பட்டவர்கள் கூட “எங்களுக்கு தனியாக அரிசி கொடுங்கள், நாங்கள் பிராமணர்களிலேயே உயர்ந்த ஜாதி, நாங்களேதான் சமைத்து சாப்பிடுவோம்” என்று கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டிலேயே செய்தவர்கள் இருக்கிறார்கள்.
1927ஆம் ஆண்டு சென்னையில் நடந்த தலைமை செயற்குழுவில்தான் பிராமணர் சங்கத்தில் இருந்து எல்லோரும் விலக வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியது. அப்படி ஒரு இயக்கமாக, அதுகுறித்து சிந்திக்காதவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். 1930-இல் நடந்த மூன்றாம் அகிலத்தின்போது இந்தியாவில் இருந்து இரண்டு பேர் அறிக்கை கொடுத்தனர். அப்துல் ராவுஃப் மற்றும் விரேந்திரநாத் பட்டாச்சார்யா கொடுத்த அந்த அறிக்கையில், ஜாதியத்தைப் பற்றி மிகத் துல்லியமாக குறிப்பிட்டுள்ளனர். “இந்தியாவில் வர்க்கமாக இருக்க வாய்ப்பில்லை, ஜாதியாகத்தான் இருக்கிறார்கள். இந்தியத் தொழிலாளர்களும் ஜாதியாகத்தான் இருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறார்கள். நாம் தற்போது கடுமையாக விமர்சிக்கும் மனுஷ்மிருதி பற்றி மார்க்ஸ் தனது “மூலதனம்” நூலில் பதிவு செய்துள்ளார். நாம் ஏன் இதை கவனிக்கத் தவறிவிட்டோம் என்பது சிந்திக்க வேண்டியது.
வர்க்கமும் ஜாதியும் ஒருங்கிணைந்தது என்று சொல்லுகிறோம், இரண்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதுதான் எனது கருத்து. ஜாதியால் அடக்கப்பட்டவர்கள்தான் வர்க்க சுரண்டலுக்கும் ஆளானவர்களாக இருக்கிறார்கள். ஏனென்றால் பெரு முதலாளிகளில் உயர் ஜாதிக்கார்களே இருக்கிறார்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் கூட சொல்லிக்கொள்ள ஆள் இல்லை. பாம்பே டையிங் நுஸ்லி வாடியா, அசிம் பிரேம்ஜி என 2 இசுலாமியர்கள் மட்டும் தவறிப்போய் வந்துவிட்டார்கள். வேறு யாரும் இல்லை என்பதில் இருந்தே வர்க்கத்துக்கும் வர்ணத்துக்கும் இடையிலான உறவு என்னவென்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
இந்த கேள்விகளை பெரியார் பல நேரங்களில் எழுப்பியிருக்கிறார். சிவதாபுரத்தில் திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கத்தை தொடங்கி வைத்துவிட்டு பெரியார் பேசுகையில், “சதி செய்வதற்கு என்றே ஒரு ஜாதியில்லாத நாட்டில் பிறந்த மார்க்சும், லெனினும் இந்த வருண பேதங்களை கவனிக்காமல் விட்டிருக்கலாம், நம்மவர்கள் ஏன் கவனிக்கவில்லை” என்று கேட்டார் பெரியார். இன்னொன்றையும் கேட்டார் பெரியார். “உபரி யாருக்குப் போகிறது என்பதை வைத்துத்தானே நாம் முடிவு செய்கிறோம். ஆனால் இந்த நாட்டின் உபரி முதல் போட்ட முதலாளிக்கு போவதைவிட எதுவும் போடாத ஒருவன் கைக்குத்தான் போகிறது. பிறவி முதலாளிகளுக்கும், கல் முதலாளிகளுக்கும் உபரிகள் போய் சேர்ந்து கொண்டே இருக்கிறது.” என்றார்
பெரியாரின் கொள்கை என்ன என்று கேட்டால் ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை, பொதுவுடைமை, தனித் தமிழ்நாடு ஆகிய நான்கைச் சொல்லாம். ஆனால் பொதுவுடைமை என்பதை பெரியாருக்கு பின்னால் வந்த தலைமைகள் பேசாசமல் விட்டுவிட்டன என்பது ஒரு அவலம்தான். 1973-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பெரியார் இறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்னால், ”சமதர்மம்” என்ற தலைப்பில் விடுதலையில் ஒரு தலையங்கம் எழுதினார். இந்த நாடு ஜாதி ஒழிந்த ஒரு சமதர்மம் உடைய நாடாக மாற நம்முடைய பங்கு என்ன என்பதைப் பற்றி அந்த தலையங்கத்தில் எழுதினார். அதற்கு ஒரு வருடத்துக்கு முன்பு “கம்யுனிசம்” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். ஆனால் அடுத்து வந்தவர்கள் பொதுவுடைமையை முதன்மைப்படுத்தவில்லை என்பது எங்கள் இயக்கத்தின் பக்கமும் (பெரியாரிய இயக்கங்களின்) இருக்கிற ஒரு குறைபாடுதான்.
நம் நாட்டிற்கு சுரண்ட வந்த ஆங்கிலேயர்கள், 1871-இல் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தினார்கள். அப்போது சென்னை மாகாணத்திற்கு டபிள்யூ.ஆர்.கார்ணிசு என்பவர் கணக்கெடுப்பு அதிகாரியாக இருந்தார். “அரசாங்கம், இந்த மண்ணின் சிக்கல்களை, மக்களின் சிக்கல்களை நேராக தெரிந்து புரிந்துகொள்ள வேண்டும். பார்ப்பன கண்ணாடி போட்டுப் பார்த்தால் பல குழப்பங்கள் ஏற்படும்” என்று முன்னுரையில் அவர் எழுதினார். இது உங்கள் ஆட்சிக்கு பாதுகாப்பல்ல என்றும் ஆங்கிலேய அரசை அவர் எச்சரித்தார். எங்கே இருந்துவந்த ஒரு ஆங்கிலேயர், இந்த நாட்டில் சில ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தபோதும் கூட இந்த மண்ணின் சிக்கல்களை சரியாகப் புரிந்து கொண்டார். பின்னாளில் 1901-இல் வந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அதிகாரி, ”இந்த நாட்டில் எல்லோரும் வசிக்கும் இடம், புசிக்கும் உணவு, உடுத்தும் உடை, பேசும் மொழி என எல்லாவற்றையும் ஜாதியம்தான் தீர்மானிக்கிறது. அந்த ஜாதியம் என்ற நச்சுப் பல்லில், சக்கரத்தில் சிக்கி உழைக்கும் மக்கள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று எழுதினார்.
ஆனால் நாம் (பொதுவுடைமை இயக்கங்கள்) ஏன் இவ்வளவு காலம் இதனை கவனிக்காமல் விட்டோம் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. அதை தீர்த்துவைக்கிற விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. இந்த இயக்கத்தின் திட்டங்களை மிக அழகாக விவரிக்கும் விதமாக துண்டறிக்கை இருக்கிறது. இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கிற அனைத்து ஜாதி அர்ச்சகர் உரிமை, தில்லை நடராஜர் கோயில் விவகாரம் ஆனாலும் சரி அவை எல்லாவற்றுக்கும் நீதிமன்ற தீர்ப்புகளில் ஒரு சொல்லை தவாறமல் சுட்டிக் காட்டிவிடுவார்கள். அது Customs and Usages, அதாவது பழக்க வழக்கங்கள்.
இதைப்பற்றி 1929-இல் ஆதிதிராவிடர் மாநாட்டில் பெரியார் பேசியிருக்கிறார். “இதுவரை பார்ப்பனர்கள் நம்மிடம், கடவுள், வேதம், புராணம், சாஸ்திரம் என்று சொல்லிக்கொண்டு இருந்தனர். ஆனால் இப்போது புதிதாக “பழக்க வழக்கம்” என்ற ஒன்றைப் பேச ஆரம்பித்துள்ளனர். நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது எல்லாவற்றையும் விட கொடுமையான சொல்லாக நான் பார்க்கிறேன்” என்று அப்போதே சொன்னார் பெரியார். கராச்சி காங்கிரஸ் மாநாட்டில் “பிரஜா உரிமை” என்ற திட்டம் குறித்து தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதில் பயன்படுத்தப்பட்டிருந்த “மத நடுநிலைமை” “பழக்க வழக்கம்” என்ற சொற்களைப் பற்றி தொடர்ந்து மூன்று வாரம் தலையங்கம் எழுதினார் பெரியார். ”அது என்ன மத நடுநிலைமை? மதச்சார்பின்மை என்று பேசுவதை விட்டுவிட்டு மத நடுநிலைமை என்று வைத்துள்ளான். இதில் ஒரு சூழ்ச்சி உள்ளது.” என்று எழுதினார் பெரியார்.
1931-இல் ஆகஸ்டில் விருதுநகரில் அதற்காக ஒரு மாநாட்டை கூட்டி, பெரியார் எதிர் தீர்மானங்கள் நிறைவேற்றினார். அந்த மாநாட்டில் பேசிய பெரியார், ”ஜாதியின் கொடுமையான ஆதிக்கம் நம்மை வளரவிடாமல் தடுத்திருக்கிறது.” என்றார். ஜாதியத்திற்கு தத்துவங்கள் அடிப்படையாக இருக்கின்றன. முதலில் வேதக்கடவுள்கள் இருந்தன, இப்போது அவற்றை மறந்து விட்டார்கள். மனுசாஸ்திரம்தான் இப்போதும் இருக்கிறது. மனுசாஸ்திரத்தின் பல கூறுகளை புரட்சியாளர் அம்பேத்கரும் ஆய்வு செய்து எழுதியிருக்கிறார்.
இந்து மதமாக உருவானதற்கு முன்பிருந்த பிராமணிய மதம் மறுமணத்தை பற்றி கொஞ்சம் பேசியிருக்கிறது. உரிய வயதை பெற்ற பின்னர்தான் திருமணம் என்று அப்போது இருந்திருக்கிறது. ஆனால் மனுதான் மாற்றியமைத்திருக்கிறது. இதுபோல பலவற்றை மாற்றியமைத்திருக்கிறார்கள் என்பதை புரட்சியாளர் அம்பேத்கர் தனது ஆய்வில் கூறியிருக்கிறார். உபநயனம் என்பதைப் பற்றியும் அம்பேத்கர் ஒன்றை வேடிக்கையாச் சொல்வார். உபநயனம் என்பது பட்டமளிப்பு விழாவைப் போல. ஒருவனுக்கு கல்வி முடிந்த பின்பு அவனுடைய குரு, எந்த வர்ணத்தைச் சேர்ந்தவன் என்று முடிவு செய்வார். இது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிசீலனை செய்யப்படும். அறிவாற்றலின்படி மாறத்தக்கதாக ஒன்றாக வர்ணம் இருந்தது. பின்னர் அதை வாழ்நாள் முழுவதுக்குமாக ஒரே வர்ணமாக மாற்றிவிட்டனர். அதற்குப் பின்னால், பள்ளிக்குப் போய் பட்டம் பெறுவதைப் போல இருந்த வர்ணத்தை, பள்ளிக்கு அனுப்பும்போதே தந்தைக்கு அந்த பதவியைக் கொடுத்து பூணூல் போட்டு அனுப்பிவைத்தனர். அதன்மூலம் பிறவி அடிப்படையில் ஜாதி என்று உண்டாக்கிவிட்டனர்.
ஆனால் வருணங்கள் என்றால்தான் பிராமணர், சத்திரியர், வைசியர். சூத்திரர் என்று நான்குதானே? எப்படி நாம் நாலாயிரம் ஜாதிகள் ஆனோம் என்று கேள்வி எழுகிறதே! அதற்குத்தான் எந்த ஜாதி எந்த ஜாதியோடு கலந்தால் எந்த ஜாதி பிறக்கும் என்றும் எழுதி வைத்திருக்கிறார்கள். அதைவைத்து பெரியார் 1930-இல் “விபச்சாரமே ஜாதிக்கு காரணம்” என்ற கட்டுரையை எழுதினார். “ஜாதி விளக்கம்” என்ற நூலில் இருந்தெல்லாம் ஆதாரங்களை எடுத்துச் சொல்லியிருப்பார் அந்த கட்டுரையில். ஒரு பார்ப்பன பெண்ணோடு ஒரு சூத்திரன் கள்ள உறவு கொண்டு குழந்தை பிறந்தால் அவன் ‘சண்டாளன்’ என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.
“சண்டாளர்களின் எண்ணிக்கையையும், பார்ப்பன பெண்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, ஒவ்வொரு பார்ப்பன பெண்ணும் விபச்சாரம் செய்திருக்க வேண்டும், ஒவ்வொரு சூத்திரனும் கேடுகெட்டவனாக பாலியல் வல்லுறவில் ஈடுபடுபவனாக இருந்திருக்க வேண்டும்.” என்று அம்பேத்கரும் அதை வேடிக்கையாகச் சொல்லியிருக்கிறார். “சண்டாளர்கள் மீண்டும் பார்ப்பன பெண்களோடு கள்ள உறவு கொண்டு பிறந்த குழந்தைகள் தான் அவர்கள் தான் சரும வேலைக்காரர்கள். அதாவது தோல் வேலை செய்பவர்கள்.” என்று எழுதி வைத்திருப்பதை பெரியாரும் சுட்டிக்காட்டுகிறார்.
நாலாயிரம் ஜாதிகள் வந்துவிட்டன, இப்போது வேறு வேறு ஜாதியைச் சேர்ந்தர்கள் திருமணம் செய்துகொண்டால் இன்னொரு ஜாதி கூடிவிடப்போகிறது, அதனால் என்ன ஆகிவிடப்போகிறது என்று நாம் கூட பலமுறை கேட்டுவிட்டோம். அதற்குத்தான் மனுசாஸ்திரத்தில் இன்னொன்றையும் எழுதிவைத்திருக்கிறார்கள். எந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளலாம், எந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அனுலோமா, பிரதிலோமா என்ற 2 திருமண வகைகள் உள்ளன. உயர்ஜாதி ஆண் கீழ்ஜாதி பெண்ணை திருமணம் செய்தால் அது அனுலோமா, அந்த திருமணம் அனுமதிக்கப்படும். கீழ்ஜாதியை சேர்ந்த ஆண் மேலான ஜாதியைச் சார்ந்த பெண்ணை திருமணம் செய்தால் அது பிரதிலோமா, ஏற்றுக் கொள்ளப்படாது. இத்தகைய பிரதிலோமா திருமணங்களுக்கு தண்டனை வழங்க வேண்டுமென்று மனுசாஸ்திரத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். அதை படித்துக்கூட இருக்க மாட்டார்கள், ஆனால் இன்றும் செய்துகொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, உயர் ஜாதியினரோடு கீழ் ஜாதியினர் சமமாக அமர்ந்தால் அவன் பிட்டத்தை அறுக்க வேண்டும், உயிர்போகும் அளவுக்கு தண்டிக்க வேண்டும் என்றும் மனுசாஸ்திரம் சொல்கிறது. செகுடந்தாளி முருகேசன் வாழ்வில் அதுதான் நடந்தது. பேருந்தில் சரிசமமாக அமர்ந்து வந்தார் என்றுதானே கொலை செய்தார்கள்?
மனுசாஸ்திரம் இப்படிச் சொல்கிறது என்று கொலை செய்தவர்களுக்கு தெரியுமா? ஆனாலும் செய்தார்கள். நம்மை அறியாமல் நம் மூளையில் இதையெல்லாம் ஏற்றிவைத்த திறமை பார்ப்பனர்களுக்கு உண்டு. பார்ப்பனர்கள் ஏற்றிவைத்த அந்த சிந்தனையை நம் மக்கள் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அறிவியல் வளர்ந்து, அறிவியல் கல்வியை நாம் பெற்று, முற்போக்கான சிந்தனைகளை நாம் உள்வாங்கிய பின்னாலும் ஜாதியமும், ஆணாதிக்கமும் எங்கோ ஓரிடத்தில் இன்னமும் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது. ஒருவர் மார்க்சிஸ்ட்டாக இருப்பார், பெரியாரிஸ்ட்டாக இருப்பார், ஆனால் வீட்டில் ஆணாகத்தான் இருப்பார் என்று நான்கூட பல திருமணங்களில் கூறியிருக்கிறேன். நாம் ஏற்றுக்கொண்ட தத்துவங்களும் கொள்கைகளும் நமக்கு வழிகாட்டுகின்றன, ஆனால் வாழ்க்கையில் அதைப் பின்பற்றாமல் ஆணாதிக்கம் ஏதோ மரபணுவில் கலந்துவிட்டதைப் போல நடந்து கொள்வார்கள்.
பெரியார் முழக்கம் 21.12.2023 இதழ்