கோட்சேக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்பு இல்லையா?
காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். என்று ராகுல் காந்தி பேசியதற்காக கொதித்தெழுந்து நீதிமன்றம் போனார்கள். ஆனால் கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் உள்ள தொடர்பை இவர்களால் மறுக்க முடியுமா? பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் பார்வையிலிருந்து மாறாமல் இருந்துகொண்டே காந்தியின் புகழ்பாடுவது ஒரு கலைதான். இந்தக் கலையைத்தான் செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்பரிவாரம். மகாத்மா காந்தியின் படுகொலை உலகத்தில் ஏற்படுத்திய அதிர்ச்சியும் கோபமும் சோகமும் சூழ்ந்த சூழலில் எடுக்கப்பட்ட ஒரு அரசியல் தந்திர நடவடிக்கைதான் இது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் தனக்கும் இருந்த தொடர்பைக் கோட்ஸே துண்டித்துக் கொண்டார் என்றுதான் பா.ஜ.க. தலைவர்களும் அதன் பழைய அவதாரமான ஜனசங்கத் தலைவர்களும் கூறிவந்தனர், கூறிவருகின்றனர். பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்ட அத்வானியும் இதைத்தான் கூறினார். அவருக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்துக் கண்டித்தவர் நாதுராம் கோட்ஸேயின் தம்பி கோபால் கோட்ஸேதான். இவரும் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டவர். தான் எழுதிய ‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் டிசம்பர் 1993 அன்று பேசிய கோபால் கோட்ஸே, தானும் சகோதரன் நாதுராமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர உறுப்பினர்கள் என்று பலருக்கும் தெரிந்த உண்மையை வெளியிட்டார்.
நாதுராம் விலகவில்லை? அதற்குப் பின் ஜனவரி 1994இல் ‘ஃப்ரண்ட்லைன்’ இதழுக்குப் பேட்டியளித்த கோபால் கோட்ஸே, “சகோதரர்களாகிய நாதுராம், தத்தாத்ரேயா, கோவிந்த், நாங்கள் எல்லோருமே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உறுப்பினர்களாயிருந்தோம். நாங்கள் வீட்டில் வளர்ந்தோம் என்பதை விட ஆர்.எஸ்.எஸ்.ஸில் வளர்ந்தோம் என்பதே சரியாக இருக்கும். எங்களுக்கு அது ஒரு குடும்பம் போன்றது. நாதுராம் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ‘பவுதிக் கார்யவாஹ்’ (அறிவுஜீவி ஊழியர்) ஆக இருந்தார். தான் ஆர்.எஸ்.எஸ்.ஸிலிருந்து விலகிவிட்டதாக கோட்ஸே அறிக்கை விட்டார். ஏனெனில் காந்தியின் படுகொலைக்குப் பிறகு கோல்வால்கரும் ஆர்.எஸ்.எஸ்.ஸும் பெரும் பிரச்சினையிலிருந்தனர். ஆனால் அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை விட்டு விலகவில்லை” என்றார். ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் கோட்ஸேவுக்குத் தொடர்பு ஒன்றுமில்லை என்ற அத்வானியின் கூற்றைக் கடுமையாக மறுத்தார் கோபால் கோட்ஸே. “அப்படிச் சொல்வது கோழைத்தனம் என்று நான் அவரை மறுதலித்துவிட்டேன். ‘காந்தியைக் கொல்லுங்கள்’ என்று ஆர்.எஸ்.எஸ். தீர்மானம் நிறைவேற்றவில்லைஎன்று வேண்டுமானால் நீங்கள் கூறலாம். ஆனால் கோட்ஸேயை நீங்கள் கழற்றி விட முடியாது.
இந்து மகாசபை அவரைக் கழற்றி விடவில்லை. 1944இல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘பவுதிக் கார்யாவாஹ்’ ஆக இருந்த அவர் இந்து மகாசபையின் வேலைகளையும் செய்யத் தொடங்கினார்.” பிரபல அமெரிக்க வார இதழான ‘டைம்’ இதழுக்கு 2000ஆம் ஆண்டில் கோபால் கோட்ஸே அளித்த பேட்டி வெளியானது. ‘ஏன் காந்தியைக் கொல்லத் திட்டமிட்டீர்கள்?’ என்று அவரிடம் கேட்கப்பட்டது. “காந்தி ஒரு கபடதாரி. முஸ்லிம்கள் இந்துக்களைப் படுகொலை செய்த பின்னரும் அவர் மகிழ்ச்சியாக இருந்தார். எவ்வளவு அதிகமாக இந்துக்கள் கொல்லப்பட்டனரோ அந்த அளவுக்கு உயரப் பறந்தது அவரது மதச்சார்பின்மைக் கொடி” என்றார். சமீபத்தில் இதே கருத்தை மீண்டும் வெளியிட் டிருப்பவர் சாத்யகி சாவர்க்கர். இவர் கோபால் கோட்ஸேயின் மகள்வழிப் பேரன். அவரது தாயார் ஹிமானி சாவர்க்கர், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட அபினவ் பாரத் அமைப்பை நடத்திவந்தார். அந்த வழக்கு விசாரணை வளையத்திலும் இருந்த அவர் கடந்த ஆண்டு இறந்துவிட்டார்.நாதுராமும் கோபாலும் எழுதியவற்றைத் தங்கள் குடும்பம் பராமரித்து வருவதாகவும், நாதுராம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிந்ததையும், அதன் தீவிரத்தன்மை போதவில்லையென்று உணர்ந்தமையால் ஏமாற்றமடைந்ததையும் அவ்வெழுத்துக்கள் தெளிவாக்குகின்றன என்கிறார் சாத்யகி. மென்பொருள் துறையில் பணிபுரியும் அவர் சாவர்க்கர் தொடங்கிய இந்து மகாசபையை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சித்து வருகிறார்.
படேலின் கடிதம்? “நாதுராம் 1932-ல் சாங்லியில் இருக்கும் போது ஆர்.எஸ்.எஸ்.ஸில் இணைந்தார். இறக்கும் வரை அதன் அறிவுஜீவி ஊழியராக இருந்தார். அவர் வெளியேற்றப்படவும் இல்லை. வெளியேறவும் இல்லை…. அவர் ஒரு ஸ்வயம் சேவக் என்கிற உண்மையை மறுப்பதால் ஆர்.எஸ்.எஸ். மீது எனக்கு நிச்சயமாக வருத்தம் இருக்கிறது. காந்திஜி கொலையை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டாலும் அவர்கள் உண்மையைக் கண்டு ஓடி ஒளியக் கூடாது” என்கிறார் சத்யகி. இன்று மோடி மாபெரும் சிலை வைத்துக் கொண்டாடப்போகும் சர்தார் வல்லபாய் படேல் (அன்றைய உள்துறை அமைச்சர்) நேருவின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஷ்யாமா பிரசாத் முகர்ஜிக்கு (இவர்தான் பா.ஜ.க.வின் முன்னோடியான ஜனசங்கத்தை 1951இல் தோற்றுவித்தவர்) எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறுகிறார்: “காந்தி கொலை வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மகாசபைக்கு அதில் இருக்கும் தொடர்பைக் குறித்து நான் பேச விரும்பவில்லை. ஆனால் இந்த இரு அமைப்புகளின் செயல்பாடுகள் காரணமாக, குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். செயல்பாடு காரணமாக, எழுந்த சூழலில்தான் இத்தகைய கொடூரச் சோகம் நிகழ்ந்திருக்கிறது என எங்களுக்குக் கிடைத்த தகவல்கள் உறுதி செய்கின்றன.”
வெறுக்கப்பட்ட அமைப்பு? ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் குரு கோல்வால்கருக்கு படேல் செப். 11, 1948இல் எழுதிய கடிதம் இப்படிச் செல்கிறது. “இந்து சமுதாயத்துக்கு ஆர்.எஸ்.எஸ். செய்திருக்கும் சேவையைப் பற்றி எவ்விதச் சந்தேகமும் இல்லை. … ஆனால் ஆட்சேபத்திற்குரிய கட்டம் எங்கு எழுகிறதென்றால், அவர்கள் பழிவாங்கும் உணர்ச்சி கொழுந்து விட்டெரிய முஸல்மான் களைத் தாக்கத் தொடங்கியபோதுதான். இந்துக்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்கு நன்மை செய்வது என்பது ஒரு விஷயம். ஆனால் அவர்களின் துன்பங் களுக்குப் பழிவாங்குவது என்ற பெயரில் அப்பாவியான ஆண்களையும், பெண்களையும் குழந்தைகளையும் தாக்குவது வேறு…. அவர்களின் பேச்சுக்கள் முழுவதிலும் வகுப்புவாத விஷம் நிறைந்திருக்கிறது. இந்துக்களை உற்சாகப்படுத்தி ஒன்று திரட்டு வதற்கும் பாதுகாப்பதற்கும் விஷத்தைப் பரப்ப வேண்டிய அவசியமில்லை. இந்த விஷத்தின் இறுதி விளைவாகக் காந்திஜியின் உயிர்த்தியாகத்தை நாடு தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது.
ஆர்.எஸ்.எஸ். மீது இந்திய அரசாங்கத்திற்கோ மக்களுக்கோ துளி கூடப் பரிவு இல்லை. உண்மையில், காந்திஜியின் மரணத்திற்குப்பின் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இனிப்புகளை வினியோகித்தபோது மக்களின் கோபம் அதிகரித்து மேலும் தீவிரமானது.” அன்று மக்களிடமிருந்து தனிமைப்பட்ட சங் பரிவாரம் அதற்குப் பிறகு 30 ஆண்டுகள் வனவாசமிருக்க நேரிட்டது. காந்தியின் பாரம் பரியத்தைத் தனதாக்கிக்கொள்ள என்னதான் முயன்றாலும், கொள்கைரீதியாகக் கோட்ஸேயின் பாரம்பரியத்தைத்தான் பா.ஜ.க. வரித்துக்கொண்டுள்ளது. அது கொள்கையையும் துறக்க முடியாது; வரலாற்றையும் மறைக்க முடியாது.
– ஆர். விஜயசங்கர் ஃப்ரண்ட்லைன்’ இதழின் ஆசிரியர்
(இது குறித்து மேலும் புதிய தகவல்கள்தொடர்ந்து வெளி வரும்.)
பெரியார் முழக்கம் 06102016 இதழ்