திராவிட மாடல் ஆட்சியின் தனித்துவம்!
திராவிட மாடல் ஆட்சி இந்திய அரசியலுக்கு ஒரு புதிய திசையை வழிகாட்டி இருக்கிறது.
1990க்கு பிறகு “உலகமயமாக்கல்” கொள்கை அறிமுகமான பிறகு தனியார் துறைகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் தலை தூக்கின; அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மறையத் தொடங்கி விட்டன.
விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியது. இதிலிருந்து மக்களைக் காப்பாற்ற மக்களுக்கு நேரடியாக பயனளிக்க கூடிய மக்கள் நலத்திட்டங்கள் மாற்று வழி என்ற நிலையை உருவாக்கி விட்டது.
1990க்கு முன்பு சோவியத் ஒன்றியம் சிதையாத நிலையில் சோசியலிசக் கொள்கைகள் செல்வாக்கு பெற்றிருந்தன. திராவிட அரசியல் சோசியலிசத்தின் பக்கம் உறுதியாக நின்றது. அதன் காரணமாகவே கலைஞர் பேருந்துகளை அரசுடைமையாக்கினார்.
நில உச்சவரம்பு சட்டத்தைக் கொண்டு வந்தார் .
தஞ்சை மாவட்டத்தில் நிலப்பிரபுக்களின் ஆதிக்கம் வீழ்த்தப்பட்டது.
தொடர்ந்து தனியார் துறை வேகமாக தலையெடுத்தபோது விழித்துக்கொண்ட கலைஞர் இந்தியாவில் முதன்முதலாக தொழில்நுட்பக் கொள்கையை உருவாக்கினார். அடையாறு டைடல் பார்க் வந்தது.
மாறிவரும் சர்வதேச பொருளாதாரக் கொள்கைகளின் தாக்கத்திலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும். அதே நேரத்தில் இந்தப் பொருளாதாரக் கொள்கைகள் வழியாக தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியையும் உருவாக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் திராவிட மாடல் ஆட்சி களம் இறங்கியது.
பதவி வருவதற்கு முன்பே 6 தொலைநோக்கு திட்டங்களை பொருளாதார நிறுவனங்களின் ஆலோசனையோடு முதல்வர் ஸ்டாலின் உருவாக்கினார். ஆட்சிக்கு வந்த உடனேயே அந்த தொலைநோக்கு திட்டங்கள் படிப்படியாக செயல்வடிவம் பெற்றன. இதுவே திராவிட மாடல்!
பெரியார் 1925-லேயே முன்வைத்த பெண்களுக்கான சுயமரியாதை, அவர்களை அதிகாரப்படுத்துதல் என்ற திட்டங்களை கலைஞர் தனது ஆட்சியிலே தொடங்கிவிட்டார். முதல்வர் ஸ்டாலின் அதை விரிவாக்கினார்.
பெண்களிடையே பணப்புழக்கத்தையும் (உரிமைத் தொகை), சுதந்திர நடமாட்ட உரிமையையும்( விடியல் பயணம்), உயர்கல்வியை நோக்கி அழைத்துச் செல்லும் திட்டமும் வடிவமைக்கப்பட்டன. இதனால் பெண்களுக்கு தன்னம்பிக்கையையும் சுயசார்பையும் இத்திட்டங்கள் உருவாக்கின. இத்திட்டத்தின் தாக்கங்கள் திட்டக்குழு வழியாக தொடர்ந்து ஆய்வுகளுக்கு உள்ளாக்கப்பட்டன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து. ” எந்த ஒரு பிரிவினரையும் பின்தங்க விடமாட்டோம்” என்று கூறும் அந்தக் கருத்துதான் திராவிட மாடல் ஆட்சியின் தனித்துவம்!
“எல்லோருக்கும் எல்லாம்” என்ற சொற்றொடர் தவிர்க்கப்பட்டது. அதற்கு மாற்றாக அதைவிட துல்லியமாக ஒவ்வொரு பிரிவினரும் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
பெண்கள்- மாணவர்கள்-மாணவிகள் -பள்ளிக் குழந்தைகள் – திருநங்கைகள் – மாற்றுத்திறனாளிகள் – வயது முதிர்ந்தோர் – விளையாட்டு வீரர்கள் – கைவினைக் கலைஞர்கள் – கைவிடப்பட்டவர்கள் என்று ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான திட்டங்கள் வந்தன.
பெண்களின் கல்விக்கு முன்னுரிமை தரப்பட்டது. பார்ப்பனிய மனுவாதம் சூத்திர பஞ்சமர்களுக்கு மறுத்த கல்வியை மீட்டுத் தந்தது திராவிட இயக்கம். பெரியார் வாழ்நாள் முழுவதும் இந்தக் கல்வி உரிமைகளுக்காகவே போராடினார்.
பார்ப்பனர் அல்லாத மக்களின் சுயமரியாதையும் வாழ்வுரிமையும் பொருளாதாரத்தை விட சக்திவாய்ந்த கல்வி வளர்ச்சியில் மட்டுமே அடங்கி இருக்கிறது என்ற சமூக எதார்த்தத்தைத் துல்லியமாகக் கண்டறிந்த தலைவர் பெரியார்.
தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்பு வேறு எந்த மாநிலத்திலும்
கிடையாது.
கொரோனா காலத்தில் கடும் பாதிப்புக்குள்ளான கல்விதுறையை மீட்டெடுக்கும் திட்டங்களை உருவாக்கியது திராவிட மாடல் ஆட்சி.
“இல்லம் தேடி கல்வி” திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளிக்கல்வியை பாதியிலேயே நிறுத்திவிட்டு உடல் உழைப்பு வேலைக்கு சென்ற மாணவர்களை தேடிப்பிடித்து கல்வி கட்டமைப்புக்குள் கொண்டு வந்ததும் திராவிட மாடல் ஆட்சிதான்.
மக்களுக்கான பிரச்சனைகளை தீர்ப்பதில் அரசு நிர்வாகம் ஆமை வேகத்தில் தான் நகர்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இதற்கான நடைமுறைகள்; துறை சார்ந்தவர்களிடம் பெற வேண்டிய ஒப்புதல்கள்; இதனால் கோப்புகளை கிடப்பில் போடும் அலட்சியம் என்பதாகவே நிர்வாக அமைப்புகள் இயங்குகின்றன. இந்த நெருக்கடியில் இருந்து மக்களை விடுவிக்கும் செயல்திட்டங்களை அறிமுகப்படுத்தியது திராவிட மாடல் ஆட்சி. துறை சார்ந்த அதிகாரிகள் மக்களிடம் வந்தார்கள். மக்களின் பிரச்சனைகள் அதே இடத்திலேயே தீர்த்து வைக்கப்பட்டன.
கியூபா, சீனா நாடுகளைப் போல் மருத்துவர்கள் மக்களை நோக்கிச் செல்லும் `இல்லம் தேடி மருத்துவம்’; முதியோருக்கு வீடு தேடி ரேஷன் பொருள்களை வழங்கும்; தாயுமானவர் திட்டம் போன்ற திட்டங்கள் வழியாக அரசு நிர்வாகப் பிடியிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட்டனர்.
மக்களுக்கு வழங்கப்படும் நிதி அவர்கள் அலைபேசியில் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படுகிறது.
ஜெயலலிதா காலத்தில் நடந்ததைப் போல் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அடுக்கடுக்கான சாதனைத் திட்டங்கள் வழியாக மக்கள் அரசியலை முன்னெடுத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
உரிமைக்களுக்காக ஒன்றிய ஆட்சியை எதிர்த்து குரல் கொடுத்தார் முதல்வர். ஆனால் எதிர்ப்பு அரசியலோடு நிற்கவில்லை. மக்களுக்கான திட்டங்கள் தொடர்ந்துகொண்டே இருந்தன. சாதனைகள் வழியாக மக்கள் வளர்ச்சியையும் வலிமையையும் உறுதியாக்கிக் கொண்டே வருகிறது.
இத்தகைய வலிமையான மக்கள் சக்தியின் பின்புலத்தில்தான் ஒன்றிய ஆட்சிக்கு எதிரான உரிமைக் குரலை எழுப்புகிறார் முதல்வர்.
நிதியை முடக்கி மிரட்டினார்கள் ஆட்சி பணியவில்லை; தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது; குலத்தொழிலுக்கு அழைத்துச் சொல்லும் மோடியின் “விஸ்வகர்மா” திட்டத்தை மறுத்து ஜாதிகளைக் கடந்து கலைஞர் கைவினை திட்டத்தை முதல்வர் முன்வைத்தார்.
ஆளுநர் பறித்த உரிமைகளை சட்டப் போராட்டம் நடத்தி அனைத்து மாநில ஆட்சிகளையும் ஆளுநர் அதிகார மீறல்களில் இருந்து விடுவித்தது; மருத்துவ உயர் பட்டப்படிப்பில் இட ஒதுக்கீட்டை மறுத்த ஒன்றிய ஆட்சியின் சமூக அநீதிக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி அனைத்து மாநில பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் இட ஒதுக்கீட்டு உரிமையை மீட்டுத்தந்தது திராவிட மாடல் ஆட்சி.
கட்சி மாறுபாடுகளைக் கடந்து தமிழ்நாட்டு அரசியலில் கட்சி மாறுபாடுகளை கடந்து மனித மாண்புடன் செயல்பட்ட முதல்வராக மு.க. ஸ்டாலின் நிமிர்ந்து நிற்கிறார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய கூட்டத்தில் அக்கட்சியின் தவறான அணுகுமுறையால் 41 உயிர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த போது நள்ளிரவில் பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்து அரசு உதவித்தொகையை அறிவித்தார். இதை விஜய் கட்சியின் எதிர்ப்பு அரசியலுக்கு பயன்படுத்தாமல் எந்த ஒரு தலைவரும் தனது தொண்டர்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள் என்று கூறி தமிழ்நாட்டு மக்களின் தலைவராக உயர்ந்தார்.
கொள்கை எதிரிகளும் உடல்நலம் பாதிக்கப்பட்டால் தேடிச்சென்று நலம் விசாரிக்கிறார். தமிழ்நாட்டு அரசியலில் இந்த உயரிய மனித மாண்பை வெளிப்படுத்தியது திராவிட மாடல் ஆட்சி!
இப்படி எத்தனையோ திட்டங்கள் செயல்பாடுகள் வழியாக திராவிட மாடல் ஆட்சி ஏனைய மாடல்களை விட தனித்துவமாக நிமிர்ந்து நிற்கிறது.
(நிமிர்வோம் வாசகர் வட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையிலிருந்து….)
பெரியார் முழக்கம் இதழ் 19032026
