ஈட்டியாய் கருத்தியல் பாய்ச்சிய மடத்துக்குளம் பயிலரங்கம்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பெரியாரியல் பயிலரங்கம் மடத்துக்குளம் சூர்யா மகாலில் மடத்துக்குளம் மோகன் அரங்கில் மே 21, 22 ஆகிய இரண்டு நாட்கள் மிக சிறப்பாக நடைபெற்றது.
முதல் நாள் மே 21ஆம் தேதி காலை 9:30க்கு தோழர்கள் அறிமுக நிகழ்ச்சி தொடர்ந்து பயிலரங்கின் நோக்கம் குறித்து எடுத்துரைத்து தோழர்களை வரவேற்று கழகத்தின் வெளியீட்டுச் செயலாளர் கோபி இராம.இளங்கோவன் உரையாற்றினார்.
முதல் வகுப்பு காலை 10.00 மணிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் “வகுப்புவாரி பிரதிநிதித்துவம்” என்னும் தலைப்பிலும், இரண்டாவது அமர்வாக பிற்பகல் 12.15 மணிக்கு தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் தலைவர் சிவகாமி “கடவுள் மறுப்பு தத்துவம்” என்னும் தலைப்பிலும், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மூன்றாவது அமர்வாக மாலை 03.15 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் அவர்கள் “திராவிடர் இயக்க வரலாறு” எனும் தலைப்பில் வகுப்புகள் எடுத்தனர்.
நான்காம் அமர்வாக இரவு 07.00 மணிக்கு “உலகம் தோன்றியது எப்படி? எனும் தலைப்பில் பேராவூரணி “தா.கலைச்செல்வன்” வகுப்பெடுத்தார். இத்துடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.
இரண்டாம் நாள் பயிலரங்கம் முதல் வகுப்பாக காலை 09.00 மணிக்கு “திராவிடர் இயக்கத்தின் இன்றைய தேவையும்” “பெரியார் மீதான அவதூறுகளும்’, எனும் தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் வகுப்பும், தொடர்ந்து காலை 11.30க்கு இரண்டாவது அமர்வாக “தி.வி.க. கட்டமைப்பும், செயல்பாடும்” எனும் தலைப்பில் கழக வெளியீட்டுச் செயலாளர் கோபி இராம.இளங்கோவனும் வகுப்பெடுத்தனர். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பிற்பகல் 2:30க்கு காலை முதல் அமர்வின் தொடர்ச்சியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் வகுப்பு தொடர்ந்தது.
நிறைவாக மாலை 04.15 மணியளவில் “அய்யம் தெளிதல்” நிகழ்ச்சியில் தோழர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பெரியாரியப் பார்வையில் கழகத் தலைவர் “கொளத்தூர் மணி” மிக சிறப்பாக நீண்ட நேரம் தன்னுடைய பதில்களை அளித்தார்.
இந்நிகழ்ச்சியுடன் 2 நாள் மடத்துக்குளம் பயிலரங்கம் மிகச் சிறப்பாக நிறைவுற்றது.
கோவை திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் இருந்து 70 தோழர்கள் உற்சாகமாய் பங்கேற்று பயிலரங்கில் பல்வேறு புதிய செய்திகளை அறிந்து கொண்டார்கள். மிகுந்த ஒழுங்கும் கட்டுப்பாடுடனும் இந்த பயிலரங்கு நடைபெற பங்கேற்ற தோழர்கள் மிகவும் ஒத்துழைப்பு நல்கினார்கள்.அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் தோழர்களை ஒருங்கிணைக்கும் பணிகளை சிறப்பாக செய்திருந்தனர்.
பயிலரங்கில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் குறிப்பேடு மற்றும் எழுதுகோல் வழங்கப்பட்டது. வகுப்புகள் நடைபெறும் பொழுது பங்கேற்ற தோழர்கள் கருத்துக்களை தங்கள் குறிப்பேடுகளில் குறித்து பதிவு செய்து கொண்டார்கள்.
நிறைவு நாளன்று பயிலரங்கிற்கு வருகை தந்த திமுகவின் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஈசுவரசாமி கழகத்தின் செயல்பாடுகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும், கழகம் மேற்கொண்ட தேர்தல் பரப்புரைகளுக்கு நன்றி தெரிவித்தும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களுக்கு பயனாடை அணிவித்துப் பாராட்டு தெரிவித்தார்.
இப்பயிலரங்கு 2 நாட்கள் மிக சிறப்பாக நடைபெறுவதற்கு பம்பரமாய் சுற்றிச்சுழன்று பணியாற்றியதில் மடத்துக்குளம் சிவானந்தம் அவர்களுடைய பணி முக்கியமானது. உடன் கணக்கன் அவர்களும் பயிலரங்கிற்கான பணிகளைக் கவனித்துக் கொண்டார். அவர்களுக்கு கழகத் தலைவர் பாராட்டு தெரிவித்து நினைவு பரிசாக புத்தகங்களை வழங்கினார்.
பயிலரங்கம் நடைபெற்ற சூர்யா மகால், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஈசுவரசாமிக்கு சொந்தமானது ஆகும். வாடகைக் கட்டணம் ஏதுமின்றி 2 நாட்கள் பயிலரங்கு நடத்த அம்மண்டபத்தை கழகத்திற்கு அவர் வழங்கினார்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி, நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு “கருஞ்சட்டைக் கலைஞர்” நூலை நினைவுப் பரிசாக வழங்கினார்.
2 நாள் பயிலரங்கில் தோழர்களுக்கான சுவையான உணவுகளை சிறப்பாக சமைத்த சமையற்கலைஞர் நல்லூர் மனோகரன் குழுவினருக்கு கழகத் தலைவர் பாராட்டு தெரிவித்து புத்தகங்களைப் பரிசாக வழங்கினார்.
பயிலரங்கிற்கான பணிகளை கழகப் பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், கோவை மாவட்ட செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம், திருப்பூர் அய்யப்பன் ஆகியோர் முன்னின்று செய்தனர்.
பயிலரங்கு ஏற்பாட்டுக் குழுவில் கழகப் பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
பயிற்சி வகுப்புக்கான வகுப்புகள், நிகழ்ச்சி நிரல் இவற்றை தொகுத்து ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்தும் பணியை கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் மேற்கொண்டார்.
நிறைவாக பயிலரங்கில் கலந்துகொண்ட தோழர்கள், இந்த பயிலரங்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், பல கருத்துக்களை அறிந்து கொண்டதாகவும் கருத்து தெரிவித்தனர்.

பெரியார் முழக்கம் 30.05.2024 இதழ்

You may also like...