கழகத் தோழர் பழனி கொலை வழக்கு
விசாரணையை சேலம் நீதிமன்றத்துக்கு மாற்றியது உச்சநீதிமன்றம்
கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக அமைப்பாளர் பழனி, 5.7.2012இல் அவரது வீட்டில் இருந்த போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தளி. இராமச்சந்திரனின் தூண்டுதலில் அவரது ஆட்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பிறகு அவரது தலையைத் துண்டித்தனர். தளி பகுதியில் தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்தவர் தளி. இராமச்சந்திரன், அப்பகுதியில் தங்களின் ‘சாம்ராஜ்யத்தை’க் கேள்விக்குள்ளாக்கும் துணிவோடு (அன்றைய) பெரியார் திராவிடர் கழகம் உருவாகி வளருவதை விரும்பவில்லை. எனவே கழகத் தோழர்களைத் தொடர்ந்து மிரட்டி தாக்குதல் நடத்தி வந்தவர்கள், இறுதியில் கழக அமைப்பாளர் பழனியையும் படுகொலை செய்தனர்.
தளி இராமச்சந்திரனும் அவரது குடும்பத்தாரும் நடத்திய தொழில் மோசடி, வன்முறைகளை பொதுக் கூட்டங்கள் வழியாகத் துணிவோடு அம்பலப்படுத்தி வந்தது (அன்றைய) பெரியார் திராவிடர் கழகம். அவர் மீதான நடவடிக்கையை கழகம் வலியுறுத்திய நிலையில் பழனி கொலைக்குப் பிறகு தளி. இராமச்சந்திரன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு எட்டு மாதங்களுக்குப் பிறகு விடுதலையானார். தோழர் பழனி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தளி. இராமச்சந்திரன், சிறையிலிருந்து வெளி வந்த பிறகு வழக்கிலிருந்து விடுதலை பெற தனது அதிகாரம் பணச் செல்வாக்கைப் பயன்படுத்தத் தொடங்கினார். ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது வழக்கில் தளி இராமச்சந்திரனுக்கு எதிரான அரசு சாட்சிகளும், காவல்துறை சாட்சிகளும் பிறழ் சாட்சிகளாக மாறினர். இந்த நிலையில் வழக்கை ஓசூர் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கக் கூடாது; சேலம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததோடு, பழனியின் குடும்பத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யலாம் என்று கூறியது. இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்யப்பட்டது.
1995ஆம் ஆண்டு ஓசூர் பேருந்து நிலையத்தில் நாகமங்கலத்தைச் சார்ந்த என்.சி. சந்திரசேகரன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இராமச்சந்திரனும் அவர்கள் ஆட்களும் இருந்தனர். இந்த வழக்கையும் நீர்த்துப் போக வைக்கும் முயற்சிகள் நடந்தன. இந்த நிலையில் வழக்கை ஓசூரிலிருந்து சேலம் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் கொலையுண்ட என்.சி.சந்திரசேகர் துணைவியார் சரஸ்வதி அம்மாள் மற்றும் பழனியின் துணைவியார் முருகம்மாள் தனித்தனியாக மேல்முறையீடு செய்தனர். ஓசூர் நீதிமன்றத்திலேயே வழக்கை நடத்த வேண்டும்; சேலத்துக்கு மாற்றக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தளி. இராமச்சந்திரன் சார்பில் மூத்த வழக்ககறிஞர்கள் கபில்சிபல், சஞ்சய், ஆர். ஹெக்டே ஆகியோர் வாதிட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர் இந்திரா ஜெய் சிங், பாரிவேந்தன், பிரபு வாதிட்டனர்.
அவர்கள் தங்கள் வாதத்தில், “இராமச்சந்திரனுக்கு எதிராக 14 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர் சாட்சியங்களை மிரட்டிவருகிறார். அவருக்கு எதிரான வழக்குகளை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம், 2017இல் உத்தரவிட்டும், விசாரணை நிறைவடையவில்லை. எனவே ஓசூரிலிருந்து சேலம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்” என்று வாதிட்டனர்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி. இரமணா, எஸ். அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு இரண்டு தனித்தனி மனுக்களையும் ஒரே விசாரணைக்கு ஏற்று கடந்த மே 2018, 9ஆம் தேதி விசாரணையை சேலம் நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் விவரம்:
“இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டோம். இந்த வழக்கு தொடர்பான மனுத் தாக்கல் செய்யப்பட்ட நாளில் 19 சாட்சியங்களில் 13 சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக மாறியுள்ளனர். அதில் 9 பேர் அரசு அதிகாரிகள். வழக்கில் தொடர்புடைய இராமச்சந்திரன் 15 கிராமங்களில் செல்வாக்கு படைத்தவர் என அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் வெளிப்படையான விசாரணை நடைபெற விசாரணையை வேறொரு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. ஓசூர் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கு விசாரணையை சேலம் முதன்மை செஷனஸ் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிடுகிறோம். எந்தவிதமான தலையீடும் இன்றி விசாரணையை விரைவாக நடத்தி முடிப்பதை சேலம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்” எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியார் முழக்கம் 17052018 இதழ்