சென்னை, ஈரோட்டில் காமராஜர் பிறந்தநாள் விழா

திராவிடர் விடுதலைக் கழகம் தென்சென்னை மாவட்டம், திருவான்மியூர் பகுதியில் கடந்த 18.07.2018 (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு “சமூக நீதியின் சரித்திரம்” பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் கூட்டம் ந.விவேக் (தென்சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) தலைமையில் நடைபெற்றது. தோழர்கள் மு.தமிழ்தாசன், சே.கந்தன், பா.இராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரா.வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து கூட்டத்தின் தொடக்கமாக ‘யாழ்’ பறையிசை முழக்கத்தோடு, வீதி நாடகங்களை நடத்தினர். ந. அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்) மற்றும் இரா. உமாபதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்) ஆகியோர் காமராசரின் வரலாற்றை குறித்து எடுத்துரைத்தனர். சிறப்புரையாற்றிய பேராசிரியர் சுந்தரவள்ளி, காமராசரின் சமூகநீதி வரலாற்றை நினைவு கூர்ந்தார்.

தொடர்ந்து பெரம்பலூர் துரை தாமோதரனின் ‘மந்திரமல்ல.! தந்திரமே!’ அறிவியல் விளக்க நிகழ்ச்சியை பகுதி மக்களிடையே ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நிகழ்த்தினார். பகுதி மக்களும் அறிவியல் விளக்கத்தை ஆர்வமுடன் கவனித்தனர். பகுதிவாழ் பெண்கள் பெருமளவில் திரண்டு, முன்வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் கேட்டனர். இறுதியாக மா.தேன்ராஜ் (திருவான்மியூர் பகுதி அமைப்பாளர்) நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

ஈரோடு : ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 15.07.2018 ஞாயிறு மாலை 6:30 மணியளவில் சித்தோடு கொங்கம்பாளையத்தில் காமராஜரின் பிறந்தநாள் விழா எழுச்சியோடு கொண்டாடப்பட்டது.   இவ்விழா சண்முகப் பிரியன் தலைமையில், இளங்கோ முன்னிலையிலும் நடைபெற்றது.

மாநகரத் தலைவர் திருமுருகன் வரவேற்புரையாற்ற,  தமிழ்நாடு அறிவியல் மன்ற தோழர் வீரா கார்த்தி ‘மந்திரமல்ல தந்திரமே’ என்னும் அறிவியல் நிகழ்ச்சி நடத்திக் காட்டினார். இறுதியாக கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். கிருஷ்ணமூர்த்தி நன்றியுரை கூறினார்.

 

பெரியார் முழக்கம் 26072018 இதழ்

You may also like...