பெரியாரின் ‘இதழில்’ தனித்துவமானது

 ‘ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்’ (பாரதி புத்தகாலயம்), ‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?’ (நியூசெஞ்சுரிபுத்தக நிலையம்) ஆகிய இரண்டு பெருந்தொகுப்புகளினூடாக பரவலான கவனக் குவிப்பைப் பெற்ற பசு. கவுதமனிடம் ஒரு நேர்காணல்.

(சென்ற இதழ் தொடர்ச்சி)

பெரியாரின் அறிவியல் பார்வை குறித்து…?

அவர் தான் சொன்ன அனைத்திற்கும் அறிவியல் பார்வை கொண்டே விளக்கமளித்துள்ளார்… தமிழர்களின் பண்பாட்டு விசயங்களில் அவர் பார்வையே இன்னும் நமக்கு உறுதுணையாக இருக்கிறது என்றால் மிகையல்ல. குறிப்பாக தீபாவளி குறித்து அவர் பல சூழலில் பேசியுள்ளார் என்பது எல்லாருக்கும் தெரியும். அந்த நிகழ்வு நம் பண் பாட்டின் அடையாளமா என்பதை அறிவியலின் துணை கொண்டே விளக்கினார். அது குறித்த விவாதங்கள் இன்றளவிலும் நடைபெறுவதையும், இக்கால தலைமுறையினர் பலர் அதை எவ்வாறு ஏற்றுக் கொண்டு பல மூடபழக்கங்களை புறந்தள்ளு கின்றனர் என்பதையும் பார்க்க முடிகிறதே. அது போலவே பெண்கள் கர்ப்பத்தடை குறித்து அவரின் பதிவுகள், அவரின் அறிவியல் தொலைநோக்குப் பார்வை ‘இனி வரும் உலகமாக’ வந்து பல்லாயிரம் பிரதிகள் விற்பனையாவதை மறுக்கமுடியாதே. ஆக அவர் முன்மொழிந்த பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, தீண்டாமை, பெண்விடுதலை என அனைத்திலும் அறிவியல் பின்னணி நிச்சயம் இருக்கும். அப்படி அறிவியல் பூர்வமாக சொன்னதால் தான் உழைப்பை போற்றும் திருவிழா என பொங்கல் திருவிழாவை முன்னிறுத்தி அதை தமிழர் திருநாள் என்று ஒரு பண்பாட்டு விழாவாக பரவலாக்க முடிந்தது.

புராணங்களும், இதிகாசங்களும் மூட நம்பிக்கை களைப் பரப்புகின்றன என்பதைக் காட்டிலும் அவை பார்ப்பனீயத்தைக் கட்டமைக்கிறது என்ற அடிப் படையில்தான் அவர் அறிவியல் பார்வையோடுதான் அனைத்தையும் எதிர் கொண்டார்.

உங்களுடைய இரண்டாவது தொகுப்புக்கு ‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்’ என தலைப்பு வைத்தீர்களே?

பெரியாரின் சிலைகளில் எல்லாம் அவரின் கடவுள் மறுப்பு வாசகங்கள் பொறிக்கப்பட்டன. இதையே அடிப்படையாகக் கொண்டு பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டுமே சித்தரிக்கும் போக்கும் இருந்தது. அப்போது உண்மை இதழில் அவர் எழுதிய தலையங்கக் கட்டுரையின் தலைப்புதான் ‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்’. பெரியார் கலை, இலக்கியம், பண்பாடு என்று சகல தளங்களிலும் பயணித்தவர். அவை அனைத்தும் குறித்து ஆழமான தன் கருத்துகளை நிர்வாணமாக பொதுவெளியில் பதிவு செய்தவர். அவர் முன்னால் வைக்கப்படும் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளித்தவர். எந்தக் கேள்விக்கும் அஞ்சி ஒதுங்கிக் கொள்ளவில்லை. ‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்’. அது எக்காலத்துக்கும் மிகவும் பொருத்தமான அவருடைய கேள்வி. எனவேதான் அதைத் தொகுப்பின் தலைப்பாக்கினேன்.

அய்ந்து புத்தகங்களாக வெளிவந்துள்ள அந்த படைப்பு இன்று பலரின் வாயை மூடியுள்ளது. என்னுடைய ஏழு ஆண்டுகால உழைப்பின் விளைவு அது. எனவேதான் இன்றைக்கு கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் மத்தியில் அது பேசுபொருளாக மாறியுள்ளது.

அந்த தொகுப்பு வெறும் பிரச்சார நெடியுடன் இல்லாமல் அவரின் பன்முக அரசியலை முன்னுக்கு கொண்டு வந்துள்ளது. அதனால்தான் தமிழ்நாடு முழுமைக்கும் பெரும் வாசக வரவேற்பைப் பெற்றது. பெரியாரின் சிந்தனைகளைப் பின்பற்றாதவர்கள் கூட இந்த நூல் தொகுப்பை வாங்கியுள்ளார்கள் என்பதே அதன் வெற்றி. ஆக அவரின் கொள்கை கள் மேலும் பரவ லாகி வருகின்றன என்பதும், அவரது தேவை உணரப்படு கின்றது என்பதும் புரிகின்றது.

வாசிப்பு தமிழகத்தில் பரவலானது என்றால் அதில் பெரியாருக்கு ஆகப்பெரிய பங்கு உண்டு? அது பற்றி?

வாசிப்பையும், வாசக சாலைகளையும் தமிழகத் தில் பரவலாக்கியதில் பெரியாருக்குப் பெரும் பங்கு உண்டு. இங்கிலாந்து பகுத்தறிவாளர் கழகம் (நுசூழுடுஹசூனு சுஹகூஐடீசூஹடுஐளுகூ டுநுஹழுருநு) வெளியிட்ட அனைத்து புத்தகங்களின் அச்சு, மற்றும் விற்பனை உரிமையை அவரின் ஐரோப்பா சுற்றுப் பயணத்தின் போது பெற்று ஈரோட்டில் பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் பிரைவேட் லிமிட்டெட்டை நிறுவி குறைந்த விலையில் ஏராளமான மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டார்.

இன்றும் விற்பனையில் சாதனை புரிந்து வரும் “பெண் ஏன் அடிமையானாள்” எனும் நூல், 1928-1933 வரை அவர் ‘குடிஅரசில்’ எழுதிய கட்டுரை களின் தொகுப்பு தான் அது. அந்த நூல்தான் அந்தப் பதிப்பகத்தின் முதல் வெளியீடு.

பதிப்புத்துறையில் சில வெற்றிகரமான முயற்சிகளை செய்தவர். தமிழகத்தில் முதன் முறையாக ஏன் இந்தியாவில் என்றுகூடச் சொல்லலாம் பொது மக்களிடம் பங்குத்தொகை பெற்று பதிப்பகம் துவங்கியவர் பெரியார்.

பிற மொழிகளில் வந்த நல்ல நூல்களை தமிழ் மக்களுக்குத் தந்தவர் பெரியார். மாவீரன் பகத்சிங்கின் “நான் ஏன் நாத்திகன் ஆனேன்” எனும் பொக்கிசத்தை ஜீவா வழியாக நமக்கு தந்தவர். சமதர்ம அறிக்கை யினை வழங்கியவர். அம்பேத்கரின் ஜாதியை ஒழிக்க வழியை கொடுத்தவர். ரஸலை, இங்கர்சாலை, ஜீன் மெஸ்லியரை தமிழுக்கு அழைத்து வந்தவர் – இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அதே போல பல்வேறு புனைப் பெயர்களில் ஏராளமான கட்டுரைகளை எளிய தமிழில் கொடுத்தவர் அய்யா. தான் படித்து உள்வாங்கியதை எல்லாரும் படித்துப் பயன் பெற வேண்டும் என்பதற்காக புத்தகங்களை வெளியிடுவார்.

அவர் ஒரு பிரமிக்கத்தக்க ஆளுமை. ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் அவரின் இதழியல் தனித்தன்மை வாய்ந்தது. அவர் எடுத்துக்கொள்ளும் தளங்கள் விளக்குவதற்கு சற்று கடினமானதாக இருக்கும். ஆனால் அதை மிக எளிதாக பதிவு செய்யக் கூடியவர். அவரின் பகடி (ளுஹகூஐசுநு றுசுஐகூஐசூழுளு) வகை எழுத்துகள் அலாதியானவை. அப்படி பகடி செய்யும் போது கூட அதில் நாகரீகம் இருக்கும். எது பகை முரண், எது நட்பு முரண் என்பதை பகுப்பாய்த்து எழுதக்கூடியவர்.

தன் பத்திரிகையில் தோழர் சிங்காரவேலருக்கு தனி இடம் கொடுத்து பல சித்தாந்தக் கட்டுரைகளை நம் மக்களுக்கு கொடுத்தவர். அப்படி அவர் எழுதும் கட்டுரைகளில் பெரியாருக்கு கருத்து முரண்பாடு இருக்குமானால் அடுத்த இதழில் புனைப்பெயரில் அதற்கு மறுப்பு எழுதுவார். அந்த அளவுக்கு நாகரீகம் இருக்கும்… இப்படி பல உதாரணங்களை சொல்ல முடியும்.

உங்களுடைய மற்றுமொரு முக்கிய படைப்பு தோழர் ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன் நினைவுகளும், நிகழ்வுகளும்….அது ஏன்? எதற்காக?

அன்றைய கீழத் தஞ்சை மாவட்டத்தில், குறிப்பாக இன்றைய நாகை மாவட்டத்தில் விவசாய கூலி தொழிலாளிகளின் போராட்டத்தில் இடதுசாரி இயக்கங்களுக்கு இணையாகவும், இணைந்தும் பணியாற்றியது பெரியார் உருவாக்கிய திராவிடர் விவசாய தொழிலாளர்கள் சங்கம். அதை அங்கு வழி நடத்தியவர்களில் முன்னோடித் தோழர் ஏ. ஜி. கஸ்தூரி ரெங்கன் என்ற முறையில் அவரின் போராட் டங்களை, பங்களிப்பை, அதன் விளைவுகளை பதிவு செய்தேன். அதுனூடே அவரின் போராட்ட நினைவுகளையும் பதிவு செய்யும் போது பல சம்பவங்களை அவர் பதிவிட்டார். அதெல்லாம் சேர்ந்தது தான் அந்த நூல்.

ஆனால் அந்த நூல் எழுதுவதற்கான காரணம் பெரியார் ஒரு தலித் விரோதி என இன்னும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் அல்லவா, அது போலவே வெண்மணி நிகழ்வு பற்றி பெரியார் எதுவுமே பேசவில்லை, பெரியாரியக்கத்தின் பங்களிப்பு என்ன என்றொரு கேள்வி இருக்கின்றதல்லவா அதனுடைய உண்மைத் தன்மை என்ன என்பதற்கான கள ஆய்வாக அந்த பணியினை துவக்கினேன். தோழர் ஏ.ஜி.கே மூலம் அறிந்த பல்வேறு செய்திகளை பதிவாக்கி அதை வெளியிட்டேன்.

(தொடரும்)

பெரியார் முழக்கம் 25012018 இதழ்

You may also like...