நிறுவனமயமாக்கப்பட்ட பெரியார், தத்துவமயமாக்கப்பட வேண்டும்!

 ‘ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்’ (பாரதி புத்தகாலயம்), ‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?’ (நியூசெஞ்சுரிபுத்தக நிலையம்) ஆகிய இரண்டு பெருந்தொகுப்புகளினூடாக பரவலான கவனக் குவிப்பைப் பெற்றவர்; இன்னும் பல படைப்புகளை உருவாக்கும் ஆயத்தப்பணிகளில் இருக்கிறார்.

சூழலியலாளர். இயற்கைமுறை விவசாயத்திலும், மீன் வளர்ப்பிலும் முனைப்புடன் இருப்பவர்.

தன்னுடைய இயற்கை வேளாண் பண்ணையில் – எழில் கொஞ்சும் சூழலில் பல கேள்விகளுக்கு மடைதிறந்த வெள்ளமென பதிலளித்தார்.

அவர் எழுத்தாளராக உருவானது எப்படி? ஏன்? எந்த சூழல் தன்னை மாற்றியது உள்ளிட்ட பல விவரங்கள்.…. தன் உடல்நலத்தை பெருமளவுக்கு கண்டு கொள்ளாமல் பெரியாரை பெரியாராகவே அறிமுகப்படுத்தும் அவரது முனைப்பு தமிழ்ச் சமூகம் கண்டு கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

இனி உரையாடலிலிருந்து….

தங்களைப்பற்றிச் சொல்லுங்களேன்…?

என் தந்தையார் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு பொன்மலை ரயில்வேதுறையில் பணியாற்றினார். அய்யா பெரியாருடனும், மணியம்மையாருடனும் ஆசிரியர் வீரமணி அவர்களுடனும் நெருக்கமான தொடர்பில் இருந்தவர். பழைய தஞ்சை மாவட்டத் தில் சுயமரியாதை இயக்க, திராவிடர்கழகத்தின் வரலாற்றில் அவருக்கென்று ஓர் இடமுண்டு. அப்பா வும் அம்மாவும் அக்காலத்திலேயே சுயமரியாதைத் திருமணம்செய்துகொண்டவர்கள்.. அது போலவே நானும், எனது துணைவியாரும் காதல், சாதி மறுப்பு, சுயமரியாதை திருமணம்தான், அதையும் ஆசிரியர் வீரமணி அவர்கள்தான் 1982-ல் செய்துவைத்தார். தஞ்சையில் உள்ள பெரியார் நூற்றாண்டு தொழில் நுட்பக் கல்லூரியில் பணியாற்றிவிட்டு பின்னர் பணியை துறந்து எழுத்துப்பணியிலும், தற்போது கொஞ்சம் விவசாயத்திலும் ஈடுபட்டு வருகிறேன்..

எழுத்துலகில் நுழைந்தது எப்போது?

என் எழுத்து என்பது துவக்க காலத்தில் கவிதையில் தான் ஆரம்பித்தது. அதுவும் நான் கோவையில் தொழில்நுட்பக் கல்வி பயில்கின்றபோதுதான். பின்னர் கவியரங்குகளில் பங்கேற்றேன்… சமூக கோபம், அதன் பிணிகள் அதன் தீர்வுக்கான வழிகளில் பகுத்தறிவின் தேவை, பெரியாரின் கொள்கைகள் தான் என் கவிதைகளில் மையக்கருவாக இருக்கும்.

கவிதைகளோடு அவ்வப்போது சிற்றிதழ் களுக்கும், ‘விடுதலை’க்கும் சில கட்டுரைகளை அனுப்புவேன். ஆனாலும் எனக்குள் ஒரு பெரும் வேட்கை இருந்தது. ஏதாவது கூடுதலாக செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் சங்கமித்ரா, இரா.இரத்தினகிரி, சின்னப்பா போன்ற தோழர்கள், ஏற்கெனவே என்னிடத்தில் இருந்த வாசிப்பினை அதிலும் குறிப்பாக பெரியாரை ஆழமாக வாசிக்கச் சொன்னார்கள். அது எனக்கு உந்துதலானது. என் தந்தையிடமிருந்தும் என்னுடைய மாமனாரிடமிருந்தும் அவர்கள் சேகரித்திருந்த குடிஅரசு இதழ்கள், துண்டறிக்கைகள், பிரசுரங்கள், புத்தகங்கள், தரவுகள் என நிறைய கிடைத்தன. அவற்றை வாசித்து பார்த்த பிறகு தான் பொது வெளியில் பெரியார் பற்றி எதிர்மறையாக உலா வரும் கருத்துகளை எதிர்கொள்ள வேண்டுமெனவும்,

பதில் சொல்ல வேண்டுமென்ற தேவையினையும் உணர்ந்தேன்.

அவர் ஏன் வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டுமே, பார்ப்பன எதிர்ப்பாளராக மட்டுமே சித்தரிக்கப்படுகிறார் என்பதும், அதையும் தாண்டி இந்தச்சமூகம் மேம்பட அவர் சொல்லிய கருத்துகள் – இன்றும் ஏன் அவர் தேவைப்படுகிறார் என்பதை தமிழ் சமூகம் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற் காகவும் மேலும் மேலும் ஆழமாக வாசித்தேன் என்பதைவிட அவரை சுவாசித்தேன் என்பதுதான் சரியாக இருக்கும். அப்படி பெரியாரை ஆழமாக வாசித்ததின் வெளிப்பாடுதான் இரு பெருந் தொகுப்புகள்.

‘ஈ.வெ. இராமசாமி என்கின்ற நான்’ தொகுப்பைப் பற்றி……

பெரியாரிய தொகுப்பிற்கு தோழர் ஆனைமுத்து அவர்கள்தான் முன்னோடி. ஆனாலும் பெரியாரிய தொகுப்பில் ஒரு போதாமை இருப்பதை உணர்ந்தேன். அந்த இடைவெளியிலிருந்து ஒரு புதிய கோணத்தில் பெரியாரை தொகுக்க வேண்டும் என எண்ணினேன்.

பெரியார் எவ்வாறு, எங்கு தன்னை முன் நிறுத்திக் கொண்டார் என்பதும் அவர் இச்சமூகத்தில் இருக்கும் பிரச் சனைகளுக்கு பல் வேறு காலகட்டங் களில் எப்படி தன்னுடைய ஆளுமையினை செலுத்தியுள்ளார் என்பதையும் தேடி னேன்.

ஓர் ஆளுமையின் எழுத்துகள் அல்லது பேச்சுகள் அந்தச்சூழலுக்கு ஏற்ப பொருத்தப்பாட்டோடு எடுத்துகொள்ளப்படவேண்டும். ஆகவே இந்த தொகுப்பினை எழுதும் போது அய்யா தன்னை எப்படி பொதுவெளியில் காட்டிக் கொண்டாரோ அது முதலில் பதிவாக்கப்பட வேண்டும் என்பதற்காக பல தரவுகளைத் தேடித்தேடி எந்த தவறும், விடுபடுதலும் இருக்கக்கூடாது என்பதற்காக உழைத்ததின் விளைவு தான் ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்.

இந்தத் தொகுப்பு மற்ற படைப்புகளிலிருந்து ஏன் வேறுபடுகிறது என்றால் யாரும் பெரியாரை, பெரியாராக படிக்கவில்லை… அம்பேத்கரை அம்பேத்கராக யாரும் படிக்கவில்லை. எல்லாரும் அந்த ஆளுமைகளின் பேச்சை, எழுத்தை மேற்கோள்களாகவே பேசினார்கள், எழுதினார்கள் தங்களுடைய தேவைக்கேற்ப. ஆனால், இந்த தொகுப்பு பெரியார் எனும் ஆளுமையின் தன்நிலைப் பதிவாக- மேற்கோள்களாக சொல்லாடல்களாக இல்லாமல் – அவர் பேசியது எழுத்தாக பதிவு செய்தது. மிக முக்கியமாக பொருள் மாறாமல், சாரம் குறையாமல் அப்படியே வாசகர்களுக்கு மறுபதிவு செய்து கொடுத்தேன்.. ஏனென்றால் பெரியார் பெரியாராகப் படிக்கப்பட வேண்டும் என்பதோடு நிறுவனமயமாக்கப்பட்ட பெரியார் தத்துவமய மாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில். காரணம் அவரின் பல தத்துவங்கள் தேங்கி நிற்கின்றன. அது இன்றைய அரசியல் சூழலில் பரவலாக்கப்பட வேண்டும். அதைத்தான் இந்த தொகுப்பு செய்தது.

பெரியார் எனும் ஆளுமை முழுவதும் படிக்கப்பட வில்லை என எப்படி சொல்லுகிறீர்கள்…?

உண்மை. பெரியாரை முழுதும் வாசித்தால் தான் அவரின் உயரம், நீளம், ஆழம், அகலம் என அனைத்தும் தெரிய வரும்.. உதாரணமாக ஒன்றை குறிப்பிடுகிறேன். தமிழகத்தில் இயங்கும் பல தமிழ் தேசிய அமைப்புகள் பெரியார் தமிழை காட்டு மிராண்டி மொழி என்று சொல்லிவிட்டார் என்று விமர்சனம் செய்தார்கள் இன்னும் செய்கின்றார்கள். அதுவா உண்மை. சங்கராச்சாரியார் தமிழ் மொழியை ‘நீச’ மொழி என்றதற்கும்; பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்பதற்கும் வித்தியாச மிருக்கிறது. ஒரு தாய் தன்னுடைய பிள்ளைகளைப் பார்த்து ‘உருப்பட மாட்டே’ என்று சொல்வதைப் போல அக்கறையிலிருந்து வரும் கோப வார்த்தையைப் போலத்தான் பெரியார் சொன்னார். ஆனால் மேலோட்டமாக பெரியாரை போகிற போக்கில் படித்து விட்டு அரசியல் செய்வதால் வந்த வினை.

அதைப்போலவே சாதிய கொடுமைகள். தீண்டாமை பிரச்சனைகள் குறித்து அவர் எந்தவொரு எதிர் வினையாற்றவும் இல்லை என்று தாழ்த்தப் பட்டவர்களுக்கு எதிரியாக அவரைக் கட்டமைப் பதில் அன்றிலிருந்து இன்று வரைக்கும் முயற்சித்து பலர் பேசுகின்றனர். அது உண்மையா…. இடைநிலை சாதிகளில் உள்ள மக்களிடத்தில் பேசும்போதுதான் அய்யா சொன்னார், “பறையன் பட்டம் போகாதவரை உன் சூத்திரப்பட்டமும் போகாது” என்று சமூகநிலையை தெளிவாக வரையறுத்தார்.

இப்படி பல விசயங்களைச் சொல்லலாம். அப்படி சொன்னவரின் எழுத்துகள், பேச்சுகளை முழுமையாக உள்வாங்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக அவரை மேற்கோளில் காட்டுவது- அவர் பதிவிட்ட விசயங்களில் தங்களின் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பலவற்றை விடுவது நாகரீகமல்லவே. அதனை உடைக்க வேண்டும் என்பதற்காகவே எடுத்த முயற்சிகளின் பலன் தான் என் தீவிர வாசிப்பு. அதனின் பயனாக வந்ததுதான் இந்தப் படைப்பு.

அதே போல பெரியார் தமிழின் சங்ககாலப் படைப்புகளை படிக்காதவர் என்றும். தொன்மை வாய்ந்த தமிழின் மேன்மை அறியாதவர் என்றும் கலை, இலக்கியப் படைப்புகளை அவர் தொட்டது கூட கிடையாது என்றும் அவரை விமர்சிப்பவர்கள் உண்டு. ..அது உண்மையா என அவரை ஆழமாக படித்தால் தானே புரியும். என் தொகுப்பின் மூலம் அந்த பொய் பிரச்சாரங்களை எல்லாம் உடைத் துள்ளேன்.. அவர் தொடாத இலக்கியம் இல்லை. உதாரணமாக, ராமாயணத்தின் அனைத்துப் பிரதிகளையும் அவர் வாசித்துள்ளார். அப்படி படித்ததால் மட்டுமே அவரால் அதை தர்க்கம் செய்ய முடிந்தது. அதற்கு எதிராக அறிவியல் பூர்வமான எதிர் கருத்துகளை பிரச்சாரம் செய்ய முடிந்தது. அதன் விளைவாகத்தான் இராமயாண ஆராய்ச்சி நூலை எழுதினார் பெரியார். அதே போலத்தான் . சிலப்பதிகாரத்தையும் மேலும் பல இலக்கியங்கள் குறித்தும் அவரால் தீர்மானகரமாக பேச முடிந்தது. அடிப்படையில் அவர் ஓர் இலக்கியவாதியும் கூட. அதற்குச் சான்றாக அவரின் பல பதிவுகளைச் சொல்ல முடியும். ஒரு கட்டுரையில் தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதற்கான காரண காரியத்தை எத்தனை அழகியலோடு விளக்குகிறார்.. நான் ஏன் காங்கிரசிலிருந்து விலகினேன் என்று சொல்லும் போது, நான் ஏன் காங்கிரசில் சேர்ந்தேன் என்பதையும் சொல்ல வேண்டுமல்லவா என்று ஈ.வெ.ராவுக்கு தோன்றியது என்ற தலைப்பில் எழுதுகின்றார். அதைப் படியுங்கள். அப்போது தெரியும் அவர் யாரென்று? பெரியார் இலக்கியம் என்ற ஒன்றையே வரையறுக்கலாம் என்பது என் திடமான முடிவு. பெரியார் எந்த ‘இலக்கியக் கொம்பர்களுக்கும்’ இளைத்தவரல்ல.

(தொடரும்)

பெரியார் முழக்கம் 18012018 இதழ்

You may also like...