பெரியாரிய-அம்பேத்கரிய-மார்க்சிய சிந்தனைகள் ஒரு புள்ளியில் இணைய வேண்டும் நேர்காணல்: பசு கவுதமன்
‘ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்’ (பாரதி புத்தகாலயம்), ‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?’ (நியூசெஞ்சுரி புத்தக நிலையம்) ஆகிய இரண்டு பெருந் தொகுப்பு களினூடாக பரவலான கவனக் குவிப்பைப் பெற்ற பசு. கவுதமன் பேட்டி.
தங்களின் அடுத்த படைப்புகள் பற்றி…
அடுத்ததாக மீண்டும் பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக மார்ச் 8 அன்று சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி ‘பெரியாரின் பெண்ணிய சிந்தனைகள்’ தொகுப்பினை கொண்டு வரவேண்டும் எனும் வேலையை துவக்கியுள்ளேன். அது சமகாலத் திற்கு தேவைப்படும் மிக முக்கிய பதிவு என கருதுகிறேன்.
அதே போல பெரியாருக்கும் கம்யூனிஸ்ட் களுக்குமான உறவு அல்லது சொல்லாடல் எனும் அடிப்படையில் பல அம்சங்களைக் கொண்ட புரிதலோடு ஒரு தொகுப்பையும் உருவாக்க வேண்டும் என எண்ணியுள்ளேன்.
வெண்மணி பற்றிய என்னுடைய கள ஆய்வுகள் மூலம் அச்சம்பவம் குறித்து வெளிவராத பல தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதை பச்சைத் தீ என்ற தலைப்பில் ஆவணப் படுத்தும் இறுதிக்கட்டப் பணிகளில் இருக்கிறேன்.
பெரியாரைப் பற்றிய பல பிம்பங்கள் இன்று கட்டமைக்கப்படுகின்றன. அதில் எதிர்மறையான சில குளறுபடிகள் நடக்கின்றன. அவைகள் மாற்றப்பட வேண்டும். அதற்காக மீண்டும் மீண்டும் அவரின் எழுத்துகளை மீள் வாசிப்பு செய்கிறேன். அப்படி செய்யும்போது இன்றைய சூழலுக்குத் தீர்வு நிச்சயம் அவரிடமிருந்தே பெறமுடியும் உதாரணமாக, அவர் ஆரம்பத்திலிருந்தே இந்துக் கடவுள்களான பிள்ளையாரையும், இராமனையும் தான் பிரச்சனைகளின் ஆணிவேராகக் கருதி எதிர்த்தார். அதனால் மற்ற கடவுள் சின்னங்களை புறந்தள்ளினார் என்பது பொருளல்ல. மாறாக ராமனும், பிள்ளையாரும் கடவுள் சின்னங்கள் என்பதையும் தாண்டிய குறியீடுகள். இந்த குறியீடுகளால்தான் சனாதன மத வெறியர்கள் சகல அரசியலையும் செய்வார்கள் என்பதைக் கொண்டு தொலை நோக்குப் பார்வையோடு எதிர்த்தார். சமர் புரிந்தார். இப்போது பாருங்கள். பிள்ளையாரையும் இராமரையும் வைத்துதான் மதவெறி காவிக் கூட்டம் அரசியல் செய்கிறது. ஆக இது போல பல தரவுகள் அவரிடமிருந்து கிடைக்கும். சமூக மேன்மைக்கும், சமூக நீதிக்கும் பயன்படுத்திடலாம்.
இந்துத்துவம் அல்லது பார்ப்பனீயம் தனக் கெதிரான ஆளுமைகள் அனைவரையும் செரித்துக் கொள்ள எத்தனித்துக் கொண்டிருக்கின்றதை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அதே நேரத்தில் பெரியாரிடத்தில் அவ்வாறான முயற்சிகளை முன்னெடுக்க முடியவில்லை தானே..
இது பெரியாரோடு திராவிட இயக்க அரசியலை யும், ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூக அரசியல் மனோநிலையினையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கப்பட வேண்டிய ஒன்று.
இந்துத்துவ அமைப்புகளுக்கு தமிழ்நாட்டின் அரசியல் என்பது வாக்குகளை மட்டுமே சார்ந்தது இல்லை, அது சித்தாந்தங்களோடு – குறிப்பாக பெரியாரியத்தோடு பின்னப்பட்ட வலை என்ற தெளிவான புரிதலை அவர்கள் பல படிப்பினைகள் மூலமாகக் கற்றுக்கொண்டவர்கள். அவர்களால் நேரடியாக கலந்து பவுத்தத்தைப் போல அல்லது தற்போது அறிஞர் அம்பேத்கருக்கு நிகழ்வதைப் போல தனதாக்கிக் கொள்ள அவ்வளவு ‘சல்லிசாக’ பெரியாருக்குள் புகுந்துவிடமுடியாது. அந்தப் புரிதலோடு இருப்பவர்களின் அரசியலை நடைமுறைப்படுத்துவதற்கு மிகச்சரியான, மிகச்சிறந்த ‘கூலிகள்’, ‘அடிமைகள்’ இப்போதுதான் கிடைத்திருக்கின்றார்கள். இது அவர்களுக்கான கடைசி வாய்ப்பு, எனவே அவர்கள் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடமாட்டார்கள். அது வேறு செய்தி. இந்த முன்னுரையோடு உங்கள் கேள்விக்கு வந்துவிடுகின்றேன்.
இது பெரியாரால் – அவருக்கு முன்னால் அயோத்திதாசர் தொடங்கி அய்யங்காளி உள்ளிட்ட பலரால் சன்னம்சன்னமாக பதப்படுத்தப்பட்டு – பெரியாரால் பக்குவப்படுத்தப்பட்ட மண். இங்கே அவரவர்கள் தங்களின் சமூகச் சூழலுக்கேற்ப பெரியாரை பாகம் பிரித்து உள்வாங்கிக்கொண்ட மனோபாவம் உடைய மனிதர்களைக் கொண்ட மண். எப்படியென்றால், கடவுளை வைத்துக்கொண்டு மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர்கள் – ஜாதியை ஏற்றுக்கொண்டு தீண்டாமை வேண்டாம் என்பவர்கள் – கடவுளை, மதத்தை, சாதியை எல்லாவற்றையும் ஒத்துக் கொள் வார்கள் ஆனால் பார்ப்பனர்களைப் புறந் தள்ளுபவர்கள் – நாத்திகத்தையும் பகுத்தறிவையும் கலந்து, கடவுளை ஒதுக்கிவிட்டு, “ஏங்க, பார்ப்பான் எங்க போவான், அவனும் இங்கேதானே பொறந்து வளந்து தமிழனாகவே” இருக்கிறான் என்று சொல்பவர்கள் – எல்லாவற்றையும் விட்டுவிட்டு இடஒதுக்கீட்டை மட்டும் போதும் என்று கொள்பவர்கள் – எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு ஆண், பெண் சமத்துவம் மட்டும் கூடாது என்பவர்கள் இப்படி பெரியாரை, பெரியாரின் கருத்துருவாக்கத்தினை பகுதிபகுதியாக உள்வாங்கிக் கொண்டவர்கள்தான் மிகமிக அதிகம். பெரியாரின் ஒட்டுமொத்த சுயமரியாதையோடு கூடிய பகுத்தறிவுத் தத்துவத்தை, சித்தாந்தங்களை உள்வாங்கிக் கொண்டவர்கள் குறைவு. ஆனால் எல்லாருக்குள்ளும் பெரியாரின் தாக்கம் கண்களுக்குத் தெரிந்தும், தெரியாமலும் வினையாற்றிக் கொண்டுதான் இருக்கிறது – இருக்கும்.
இப்படியானவர்களைக் கொண்ட நீட்சிதான் திராவிட இயக்க அரசியல் சூழலும், தமிழ்ச்சமூக வாழ்வியல் சூழலும். இப்படியான தமிழ்நாட்டு வாழ்வியல் சூழலில் உணர்ச்சிமிகுந்த பக்திக்கு உச்சபட்ச இடமுண்டு. ஆனால் அது இந்துத்துவாவை ஏற்றுக்கொள்ளாது, அதோடு உடன்படாது. எனவேதான் ஜெயலலிதாவால் ‘பீடாதிபதி, ஜகத்குரு’ சங்கராச்சாரியை கைது செய்யமுடிகிறது. கரசேவைக்குக் கல் அனுப்பிக் கொண்டே அடல்பிகாரி வாஜ்பாயியையும் வீட்டுக்கு அனுப்பிவிட முடிகிறது. ஜெயலலிதாவின் இந்துத்துவம் என்பது வேறொரு விலாசத்தில் இருக்கிறது.
கலைஞரவர்களால் இராமன் எந்த இஞ்சினியரிங் காலேஜில் படித்தான் என்று கேட்கமுடிகிறது. இராமகோபாலனிடம் கீதையின் மறுபக்கத்தைக் கொடுக்க முடிகிறது. வாஜ்பாய் நல்லவர்தான் என்று சொல்லிக்கொண்டே இந்துத்துவ பேரணிகளுக்கு அனுமதி மறுக்க முடிகிறது.
பி.ஜே.பியில் தலித் பிரிவு என்ற அவலநிலையினை ஏற்படுத்திக் கொண்டாலுங்கூட அது உதிரியாகத் தான் இருக்கமுடியுமே தவிர ஒட்டுமொத்த இந்து என்ற ‘வகையறா’வுக்குள் இவர்கள், அவர்களை இணைத்துவிடமாட்டார்கள் என்ற உண்மை புரிதலால், அண்மை எடுத்துக்காட்டாக கேரள கோவில்களில் உறுதியாகிவிட்டது.
சாதிகளாக, உட்பிரிவுகளாகப் பிரிந்து நின்று கூச்சலிட்டுக் குத்திக் கொண்டாலும், தங்களின் மொழிக்கு – இனத்திற்கு – அது சார்ந்த ஏதோ ஒன்றுக்கு பிரச்சனை என்றால் எல்லாம் கடந்து ஒன்றுகூடிவிட முடிகிறது ஜல்லிக்கட்டு வரை.
இவை எல்லாவற்றையும்விட பொதுவெளியில் – யதார்த்தத்தில், ‘கடைசில உன்னோட ஜாதி புத்திய காமிச்சிட்டில்லே’ என்று ஒருவனால் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பூணூல் போட்டவனிடம் கேட்க முடிகிறது. இதுவெல்லாம் முடிகின்றபோதுதான் இங்கே இந்திக்கு ஆதரவாகவோ, வகுப்புரிமைக்கு எதிராகவோ, தமிழ் இனத்திற்கு எதிராகவோ இந்துத்துவா சக்திகளால் இரண்டடி கூட நகர முடியால் போகிறது. திராவிட அரசியல் கட்சி களுடன் கூட்டணி போட்டுக்கொண்டாலும், அமைச்சர் நாற்காலிகளைக் கொடுத்து பக்கத்தில் வைத்துக்கொண்டாலும் இங்கே இவர்கள் மன நிலையில் மாபெரும் மாற்றங்கள் எதுவும் நடந்துவிடுவதில்லையே ஏன் ? தமிழ்ச் சமூகம் கடந்தகாலங்களில் மாற்றங்களுக்குள்ளாக்கப்பட்டு பெரியாரால் – திராவிடர் இயக்கத்தால் வடிவமைக் கப்பட்டதன் விளைவு.
இந்த கருத்தாக்கங்கள் திராவிட இயக்கங்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கின்ற அரசியல் கட்சிகளால் சமரசத்திற்குட்பட்டு குறுக்கப் பட்டாலுங்கூட பொதுப்புத்தியில் – அதன் மனோ நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு விடுவதில்லை. எனவேதான் இந்துத்துவ சக்திகளால் பெரியார் நெருங்கமுடியாத நெருப்பாக இருக்கின்றார் இன்றுவரை; ஏன் நாளையுங்கூட அதேநிலைதான்.
நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத் திற்குப் போய்விட்டு வந்த தோழர் களப்பிரன் சொன்னார், ‘இந்தியாவில் உள்ள செத்துப்போன, இருக்கிற எல்லா தலைவர்களின் படங்களும் அங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. அங்கே இல்லாத ஒரேஒரு படம் தந்தை பெரியாரின் படம் மட்டும்தான்’ என்று பெருமையுடன் சொன்னார். உண்மைதான், அவர்களால் படமாகக்கூட பெரியாரை பக்கத்தில் வைத்துக் கொள்ளமுடியாது. எனவேதான் இன்றைக்கு கூலி அடிமைகளை நமக்குள்ளேயே உண்டாக்கி பெரியார் என்ற அரணை தகர்த்திட முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள். நான் முன்னே சொன்னதுபோல பல தளங்களில் கூலிக்கு நல்ல அடிமைகளும் கிடைத்திருக்கின்றார்கள். அவர்கள் வேலையும் செய்கின்றார்கள். வாங்கிய இரட்டைஇலை கூலி வரைக்கும் வேலையும் செய்வார்கள். இது ஒன்றும் புதிதல்ல, பெரியார் வாழ்ந்த காலத்திலேயே துவக்கப்பட்டதுதான். இன்றைக்கு, வடிவங்கள் மாறி இருக்கின்றன அவ்வளவுதான்.
நெருப்பின் மீது ஈக்களும், கொசுக்களும் மொய்க்க முயல்கின்றன, பாவம். ஆனாலும் பெரியாரிஸ்டுகளும், அம்பேத்கரிஸ்டுகளும், இடதுசாரி சிந்தனையாளர் களும், செயற்பாட் டாளர்களும் விழிப்புடனிருப்பதுவே விவேகம்.
தங்களின் பெரும்பாலான படைப்புகள் இடதுசாரி அமைப்புகள் நடத்திடும் பதிப்பகங் கள் மூலமே வந்துள்ளன. வரவும் இருக்கிறதே.
இன்றைய இந்தியச் சூழலுக்கு பொதுவுடைமை சிந்தனை, பெரியாரிய சிந்தனை, மற்றும் அம்பேத்கரிய சிந்தனைகள்தான் இந்த மூன்று சித்தாந்தங்களும் ஒரு புள்ளியில் இணைந்து மதவெறி சக்திகளை எதிர் கொள்ள வேண்டும். புறந்தள்ளி பொதுச் சமூகத்திலிருந்து முற்றிலுமாகத் தூக்கி எறிய வேண்டும்.
பொதுவுடமைக் கருத்துகளை மறுவாசிப்பு செய்வது போல் பெரியாரை மீள் வாசிப்பு செய்வது காலத்தின் தேவை. அது அவசியம் என்பதை உணர்ந்ததால் தான் இடதுசாரி இயக்கங்களின் பதிப்பகங்கள் பெரியாரை மீண்டும் புத்துயிர்ப் பூட்டுகின்றன. அதன் வழியே நானும் பயணிக்கிறேன் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.
அதே போல இந்த பெரியாரிய எழுத்தாளனை மதித்து ஒரு நேர்காணலின் மூலமாக பெரியாரை மேலும் பரவலாக்கும் வேலையை செய்தமைக்கும் -படியுங்கள், பெரியாரைப் படியுங்கள் – பெரியாரிட மிருந்தே படியுங்கள்.
நன்றி : ‘புத்தகம் பேசுகிறது’
பெரியார் முழக்கம் 02022018 இதழ்