களப்பணிகளில் கழகத் தோழர்கள்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த கழகத்தின் களப்பணிகள் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்ற நிகழ்வுகளின் தொகுப்பு.

ஈரோட்டில் ‘கனி ராவுத்தர்’ குளம் மீட்பு இயக்கத்தின் தொடர் போராட்டம்

ஈரோடு நகருக்கு அருகே உள்ளது கனிராவுத்தர் குளம். 44 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தக் குளம் அரசு அதிகாரிகளின் துணையோடு பணமுதலை களால் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது வெறும்14 ஏக்கராக சுருங்கியுள்ளது. குளத்தை மீட்டெடுப் பதற்காக ‘கனிராவுத்தர் குள மீட்பு இயக்கம்’ என்ற பெயரால் தமிழத் தேசிய நடுவம் தோழர் நிலவன் ஒருங்கிணைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் கண.குறிஞ்சி, திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி போன்றோர் இணைந்து மக்கள் திரள் போராட்டங்கள், நீதிமன்ற வழக்கு என்ற வழிமுறைகளில் போராடிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குளத்தை சுத்தப்படுத்தும் பணிகள் தற்போது நடந்தேறிவருகின்றன. 23-4-2017 அன்று ஈரோட்டுக்கு ஒரு நூல் வெளியீட்டுக்காக சென்றிருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க பொதுச்செயலாளர் வி.பி.குணசேகரன் ஆகியோருடன் கனிராவுத்தர் குளப் பணிகளைப் பார்வையிட்டனர். கழக மாவட்ட செயலாளர் சண்முகப்பிரியன் உள்ளிட்ட பல தோழர்கள் உடனிருந்தனர்.

ஈரோட்டில் அம்பேத்கரின் நூல் வெளியீடு

பகத்சிங் மக்கள் சங்கம், டாக்டர் அம்பேத்கரின் ‘இந்து மதத்தின் புதிர்கள்’ என்ற நூலின் இறுதி அத்தியாயமான ‘இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர்’ என்கிற பகுதியை ”இந்து மதமே பார்ப்பனியம்- பார்ப்பனியமே இந்து மதம்” என்ற நூலை பதிப்பித்துள்ளது. அந்நூலின் அறிமுக விழா. 23-4-2017  ஞாயிறு அன்று மாலை 6-00 மணிக்கு, ஈரோடு, ரீஜென்சி ஓட்டல் கூட்ட அரங்கில், நடைபெற்றது. நிகழ்வுக்கு நூலை தொகுத்து வெளியிட்ட மூத்த வழக்கறிஞர் இரத்தினம் தலைமை தாங்கினார். நூல் குறித்த மூத்த வழக்கறிஞர்கள் திருமலை ராஜன், ப.பா.மோகன், மக்கள் சிவில் உரிமைக் கழக மாநிலத் தலைவர் கண.குறிஞ்சி ஆகியோரின் அறிமுக உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரை ஆற்றினார். கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி நன்றி கூ றினார்.

தலைமை கழகத்துக்கு வி.சி.க. தோழரின் அன்பளிப்பு

சேலம் மாநகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 56ஆவது கோட்ட செயலாளர் தோழர் எம்.எஸ்.ஏ. ஆர்ட்ஸ் முத்துராசு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை அலுவகத்தில் வைப்பதற்காக, கிரானைட் கல்லில் பெரியார்-அம்பேத்கர் ஆகியோரின் உருவப் படங்களுடனும், கடிகாரம் பொறுத்திய முகவரிக் கல்லை 26-4-2017 அன்று காலை கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கினார். கழகத் தோழர் எல்.ஐ.சி. தனசேகரன் உடனிருந்தார்.

புதுவை அம்பேத்கர் விழாவில் கழகத் தலைவர் பங்கேற்பு

26-4-2017 அன்று மாலை புதுச்சேரி, தவளக் குப்பத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படையின் சார்பாகக் கொண்டாடப்பட்டது. மாலை 6-00 மணியளவில் ஏம்பலம் அடவு கலைக் குழுவினரின் பறையிசை முழக்கத்தோடு நிகழ்வு தொடங்கியது.

நிகழ்வுக்கு அம்பேத்கர் தொண்டர் படைத் தலைவர் பாவாடைராயன் தலைமை வகித்தார்.த.பெ.தி.க. அமைப்பாளர் வீர மோகன், கிராமப்புற மக்கள் மேம்பாட்டு இயக்கத் தலைவர் சந்திரசேகரன், மக்கள் உரிமை இயக்கத் தலைவர் செகநாதன், வழக்கறிஞர் இராமலிங்கம், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுவை மாநில அமைப்பாளர் சிரீதர் ஆகியோர் உரையாற்றியதை தொடர்ந்து ஆதி தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் வினோத், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

ஆத்தூரில் அம்பேத்கர் வாசகர் வட்டம்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் கடந்த 14-4-2017 அன்று அம்பேத்கர் பிறந்த நாளில், பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம் தொடங்கப்பட்டது. அதையொட்டி அன்று கழகத் தோழர்களின் முயற்சியில் ஒரு நூலகமும் திறக்கப்பட்டது. நூலகத்தை வடசென்னிமலை அரசினர் கலைக் கல்லூரிப் பேராசிரியரும் பெரியாரியல் சிந்தனை யாளருமான பேரா.முருகேசன் திறந்துவைத்தார். அக்கல்லூரிப் பேராசிரியர் அம்பேத்கர் சிறப்புரையாற்றினார்.

26-4-2017 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அந்நூலகத்துக்கு, குடிஅரசு தொகுப்பினையும், அம்பேத்கர் நூல் தொகுப்பினையும் மாவட்டக் கழகத் துணைச் செயலாளரும், நூலகப் பொறுப்பாளருமான ஆத்தூர் மகேந்திரனிடம் வழங்கினார்.

பள்ளி பாளையத்தில் கழக சார்பில் அம்பேத்கர் விழா

30-4-2017 அன்று மாலை நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள சின்னா கவுண்டன்பாளையத்தில், பள்ளிபாளையம் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஏற்பாட்டில் ‘புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் நகர செயலாளர் தியாகு தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தின் தொடக்கத்தில் பெரம்பலூர் தாமோதரனின் ‘மந்திரமல்ல! தந்திரமே!’ செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக இஸ்லாமிய மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட கோவை ஃபாரூக்கின் படத்தை தோழர்கள் சஜீனா, மீனாட்சி ஆகியோர் திறந்துவைத்தனர்.

தோழர்கள் முத்துபாண்டி, திருச்செங்கோடு வைரவேல், மாவட்டத் தலைவர் சாமிநாதன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி ஆகியோரைத் தொடர்ந்து கோபி வேலுச்சாமி நகைச்சுவை பொங்க ஒரு மணி நேரம் உரையாற்றினார். இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் பணிகளைக் குறிப்பிட்டு, அவர்கள் காட்டிய வழியில் பணியாற்றி சமூக விடுதலை பெறுவோம் என்றார். இளைஞரணித் தோழர் கா.யுவராசு நன்றி கூற கூடம் நிறைவுற்றது.

கோட்டாரில் கழகம் எடுத்த புரட்சிக் கவிஞர் விழா

குமரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3.00 மணிக்கு மணிமேகலை இல்லம் கோட்டாரில் சூசையப்பா தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவில் மணிமேகலை வரவேற்புரையாற்றினார். தோழர்கள் நீதிஅரசர், தமிழ் மதி, இளங்கோ, சுனில்குமார், வின்சென்ட் ஆகியோர் பாவேந்தர் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்தனர். சிறப்பு அழைப்பாளராக ‘ஒளிவெள்ளம்’ ஆசிரியர் பிதலிஸ் வாழ்த்திப் பேசினார். மாணவிகள் ரித்திகா, மோனிகா, ஆசிகா ஆகியோர் பாரதிதாசன் கவிதை ஒப்புவித்தனர். அவர்களுக்கு கழகம் சார்பாக பெரியாரின் உயர் எண்ணங்கள் என்ற புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. சத்தியராணி நன்றிகூற கூட்டம் இனிதே முடிவுற்றது. பின்பு கோட்டார் சந்திப்பில் பாவேந்தர் பாரதிதாசன் படத்தின் முன்பு கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சென்னையில் புரட்சிக் கவிஞர் சிலைக்கு கழக சார்பில் மாலை அணிவிப்பு

29-5-17  தை ஒன்றே தமிழர் புத்தாண்டு என்று முழங்கிய மக்கள் கவிஞன் “பாவேந்தர்” பாரதிதாசன் 127வது பிறந்தநாளன்று… சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் உருவச் சிலைக்கு திராவிடர் விடுதலைக் கழக தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கழக வழக்கறிஞர் துரை அருண், சென்னை மாவட்ட தலைவர் வேழவேந்தன், மாவட்ட செயலாளர் உமாபதி மற்றும் மாவட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

கழக தலைமைஅலுவலகத்தில் ‘கக்கூஸ்’ ஆவணப் படம் திரையீடு

1-5-17 அன்று மே நாளை முன்னிட்டு  “கக்கூஸ் ஆவணப்படம்” திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவகத்தில் திரையிடப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழகக் குழு உறுப்பினர்  அன்பு தனசேகரன், கழக தலைமை நிலைய செயலாளர்  தபசி குமரன், சென்னை மாவட்ட தலைவர் வேழவேந்தன் மற்றும் இயக்க தோழர்கள் உரையாற்றினர். சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி ஆவணப்படத்தின் திரையிடலை ஒருங்கிணைத்து நடத்தினார். 70 தோழர்கள் பங்கேற்றனர். ஆவணப் படம், மலம் எடுக்கும் தோழர்களின் அவல நிலையை சித்தரித்தது,

கண்ணீர் மல்க தோழர்கள் அந்தப் படத்தைப் பார்த்தனர்.

You may also like...