மாண்டொழிக மரணதண்டனை – பொதுக்கூட்டத்திற்கு திடீர் அனுமதி மறுப்பு
திராவிடர் விடுதலைக்கழக பிரச்சாரப்
பொதுக்கூட்டத்திற்கு தடை
மன்னார்குடியில் திராவிடர் விடுதலைக் கழக பிரச்சாரப்பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்திய தண்டனை சட்டத்திலிருந்து மரண தண்டனை பிரிவை நீக்க வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மன்னார்குடியில் இன்று மாலை பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூடத்தில் திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் காளிதாசு, மதிமுக தலைமை கழக பேச்சாளர் விடுதலை வேந்தன் ஆகியோர் பேசுவதாக இருந்தது. இந்த கூட்டத்திற்கு ஏற்கனவே காவல்துறையில் முறையாக அனுமதி பெற்றதன் அடிப்படையில் திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகிகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இந்நிலையில் திடீரென மன்னார்குடி காவல்துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாகவும் இக்கூட்டம் நடைபெற்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக்கூறி நேற்று (2ம் தேதி) நள்ளிரவு 11 மணிக்கு அனுமதி மறுத்து கடிதம் கொடுத்தனர்.
இதுபற்றி திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் காளிதாசு கூறுகையில் மன்னார்குடியில் ஏற்கனவே மரண தண்டனைக்கெதிரான மக்கள் இயக்கம் சார்பில் இதே கோரிக்கையை வலியுறுத்தி இயக்கம் நடத்தியுள்ளோம். அதுபோலத்தான் இதற்கும் அனுமதி கேட்டு கடந்த 31ம் தேதி விண்ணபிக்கப்பட்டது. அதற்கு 1ம் தேதி நிபந்தனையுடன் கூடிய அனுமதியை எழுத்துபூர்வமாக மன்னார்குடி டிஎஸ்பி வழங்கினார். அதை நம்பி பல்வேறு ஏற்பாடுகளை செய்துவிட்டோம். ஆனால் நேற்று இரவு 11 மணியளவில் அனுமதி ரத்து செய்யப்பட்டுவிட்டதாக கூறிவிட்டனர். இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியிருக்கின்ற பேச்சுரிமை மற்றும் கருத்துரிமைக்கு எதிராக கூட்டங்கங்களுக்கு அனுமதி மறுப்பதை கண்டிக்கின்றோம்