பாலமலை பெரியாரியல் பயிலரங்கம்
ஏராளமான புதிய தோழர்கள் உற்சாகத்துடன் பங்கேற்க,சிறப்புடன் நடைபெற்றது !
பல்வேறு தலைப்பிலான வகுப்புகள், சிறப்பு அழைப்பாளர்கள் என 2 நாட்கள் நடைபெற்றது பயிலரங்கம் !
சேலம் மாவட்டம், காவலாண்டியூர், பாலமலையில் கடந்த 17.05.2016 மற்றும் 18.05.2016 அன்று சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 2 நாள் பெரியாரியல் பயிலரங்கு நடைபெற்றது.120 தோழர்கள் இப்பயிலரங்கில் பங்கேற்றனர்.
முதல் நாள் நிகழ்வாக 17.05.2016 அன்று காலை 10 மணிக்கு பயிலரங்கம் குறித்த அறிமுகத்துடன் பயிலரங்கு ஆரம்பமானது.
காலை 11.00 மணிக்கு முதல் வகுப்பாக ”அறிவியல் சமுதாய உருவாக்கத்தை நோக்கி” எனும் தலைப்பில் மருத்துவர் எழிலன் அவர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.ஜோதிடம்,சாஸ்திரங்களின் பொய்மைகள் குறித்து காணொலிக் காட்சியுடன் விரிவாக விளக்கினார். உயிர்கள் உருவாக்கம் குறித்த மெய்ப்பிக்கப்பட்ட அறிவியல் கருத்துக்களை பகிர்ந்த மருத்துவர் எழிலன் அவர்களின் வகுப்பு மதியம் 2.30 வரை நீடித்தது. தோழர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் வகுப்பைக் கவனித்தனர்.
மருத்துவர் எழிலன் அவர்களின் வகுப்பு நிறைவடைந்த பின் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.
பிற்பகல் நிகழ்வு ”சமத்துவ சமுதாயத்தில் பாலின பாகுபாடுகள்” எனும் தலைப்பில் தோழர் பூங்குழலி அவர்கள் வகுப்பெடுத்தார்.அவர் தன் உரையில் பெண்ணுரிமையில் ஆண்களின் பங்கு குறித்து தோழர்களிடம் விரிவாக எடுத்துரைத்தார்.
மாலை ”இட ஒதுக்கீடு -சந்திக்கும் சவால்கள்” எனும் தலைப்பில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வகுப்பெடுத்தார். இட ஒதுக்கீட்டின் வரலாற்றையும், இட ஒதுக்கீட்டு உரிமை ஆரம்ப காலம் முதல் இப்போதுவரை எதிர் கொள்ளும் சிக்கல்களை எளிமையாக தோழர்கள் மத்தியில் விவரித்தார்.
கழகத் தலைவர் உரையுடன் முதல் நாள் வகுப்புகள் நிறைவு பெற்றன.
திருப்பூரில் இருந்து வந்து பயிலரங்கில் கலந்து கொண்ட இளம் கவிஞர் கழகத் தோழர் கனல்மதி அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு தோழர்கள் மத்தியில் கேக் வெட்டி மகிழ்சியுடன் கொண்டாடப்பட்டது.
இரவு குறும்படங்கள் திரையிடல் நிகழ்வு நடைபெற்றது.”நடந்த கதை” உள்ளிட்ட குறும்படங்கள் திரையிடல் நிகழ்வுடன் முதல் நாள் நிகழ்வுகள் முடிவுற்றன.
————————————————————————–
இரண்டாம் நாள் 18.05.2016 – புதன் கிழமை காலை 10:00 மணியளவில் வகுப்புகள் ஆரம்பமாகின.
”பெரியாரியலை முன்னெடுப்பதில் தி வி க வின் அணுகுமுறை” எனும் தலைப்பில் கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன் மிகவும் விரிவாகவும்,கொள்கை விளக்கங்களுடன் உரையாற்றினார். பங்கேற்ற தோழர்கள் மத்தியில் பொதுச்செயலாளர் அவர்களின் உரை மிகவும் வரவேற்பை பெற்றதுடன் ஏராளமான தகவல்களை அறிந்து கொள்ள மிகவும் உதவியாக இருந்தது.
அடுத்த நிகழ்வாக நண்பகல் 12:00 மணியளவில் ”வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” எனும் தலைப்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி அவர்கள் தகவல்களை பகிர்ந்து கொண்டார். சட்டங்கள் குறித்த தகவல்களையும் அவற்றை எப்படி பயன்படுத்திக்கொள்வது என்பது குறித்தும் தோழரின் உரை விளக்கியது.
வழக்கறிஞர் அவர்கள் உரைக்குப்பின் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.
மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர், பயிலரங்கில் கலந்துகொண்ட தோழர்கள் தன்னறிமுகம்
செய்துகொண்டனர்.
உணவு இடைவேளைக்குப்பின் ”பெரியார் இயக்கத்தின் மீதான விமர்சனங்கள்” எனும் தலைப்பில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வகுப்பை எடுத்தார்.பெரியார் இயக்கத்தின் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில்களை தன் உரையில் கழக தலைவர் அவர்கள் விரிவாக விளக்கி உரையாற்றினார்.
கழகத் தலைவர் அவர்களின் உரையுடன் இரண்டு நாள் பயிலரங்க வகுப்புகள் நிறைவடைந்தது.
இடையில் சென்னையில் இருந்து வந்து பயிலரங்கில் பங்கேற்ற மருத்துவர் முரளிகிருஷ்ண பாரதி அவர்கள் மருத்துவக்கல்லூரியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள நுழைவுத்தேர்வு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து விளக்கிக்கினார்.
சிறப்பாக நடைபெற்ற இந்த பயிலரங்கத்திற்கு இடமளித்து வசதிகளை செய்து கொடுத்த பாலமலையைச் சேர்ந்த போதகர் யுவராஜ் அய்யா அவர்களுக்கு நன்றி தெரிவித்து சால்வை அணிவிக்கப்பட்டு கழக வெளியீட்டு புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன.
பயிலரங்கம் குறித்த தங்கள் கருத்துகளையும், விமரிசனங்களையும் பயிலரங்கத்தில்
கலந்துகொண்ட தோழர்கள் பகிர்ந்துகொண்டனர்.
இறுதி நிகழ்வாக பயிலரங்கில் இரண்டு நாட்களும் பங்கேற்ற தோழர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பயிலரங்கிற்கான ஏற்பாடுகளை கழக அமைப்பு செயலாளர் இரத்தினசாமி, பரப்புரை செயலாளர் பால்.பிராபாகரன், பாலமலை குமார் ஆகியோர் மிகவும் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.
பயிலரங்கத்திற்கான ஏற்பாடுகளை காவை.இளவரசன், ஈசுவரன், பழனிசாமி, மாரி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்