ஜாதி மறுப்பு திருமண இணையருக்கு பாதுகாப்பு வழங்கிய கழக தோழர்கள் !
ஜாதி மறுப்பு திருமண இணையருக்கு பாதுகாப்பு வழங்கிய கழக தோழர்கள் !
திருப்பூரைச் சேர்ந்த ”சக்திகாமாட்சி – ஆனந்த் இணையர்” தங்கள் காதலுக்கு ஜாதியை காரணம் காட்டி பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் வீட்டை விட்டு வெளியேறி நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் சாமிநாதன் அவர்களிடம் பாதுகாப்பு கோரிவந்தனர்.ஆனந்த் ”இந்துமுண்ணனி”யின் தீவிர உறுப்பினர் என்பது இங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. கழக தோழர்கள் அவர்களுக்கு பாதுகாப்பளித்து சட்டப்படி 25.03.2016 அன்று திருமணம் செய்து வைத்தனர்.
இவர்களின் ஜாதி மறுப்பு திருமணத்திற்கு பெண் வீட்டார் மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இணையருக்கு மிரட்டல் விடுத்தும் இவர்களை பிரிக்காமல் விடமாட்டோம் எனவும் 70க்கும் மேற்பட்டோர் இவர்களை பல்வேறு ஊர்களில் தேடி அலைந்தனர்.
இந்நிலையில் சக்தி காமாட்சியின் பெற்றோர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் தங்கள் பெண்ணை கடத்தி சென்றுவிட்டதாக புகார் அளித்ததை அடுத்து இணையர்கள் காவல்நிலையத்திற்கு நேரில் ஆஜராகி தன் தரப்பை விளக்க விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.
விசாரணைக்கு வரும் இணையரை வரும் வழியிலோ அல்லது காவல்நிலைய வாயிலிலோ வைத்து கொடூர தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டு பெண்ணின் உறவினர்கள் சுமார் 80 பேர் காவல் நிலையத்தை சுற்றி காத்திருந்தனர்.
இணையருக்கு திருமணம் செய்துவைத்த கழக தோழர் சாமிநாதன் அவர்கள் 26.03.2016 அன்று திருப்பூருக்கு இணையரை அழைத்து வந்தார். ஜாதி மறுப்பு இணையரின் பாதுக்காப்பிற்கு கடும் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் திருப்பூர் மாவட்ட கழக செயலாளர் தோழர் முகில்ராசு அவர்கள் கழக தோழர்களுடன் இணைந்து இணையரை காவல் நிலைத்திற்கு பாதுகாப்பாய் அழைத்து செல்ல தயாராக இருந்தார்.திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்கு இணையரை அழைத்து செல்வது பாதுகாப்பாய் இருக்காது என்கிற நிலையில் மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இணையரை ஆஜர் படுத்தினர். அவர்களை காவலர் பாதுகாப்புடன் 15 வேலம்பாளையம் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்ல வேண்டும் என காவல்துறையிடம் கடுமையாக வலியுறுத்தி கழக தோழர்கள் ஆவன செய்தனர்.
கழக தோழர்களின் நெருக்கடியால் காவலர் இருவர் பாதுகாப்புடன் 15 வேலம்பாளையம் காவல்நிலையத்திற்கு இணையர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.அங்கு இருந்த ஆய்வாளர் இருவரிடமும் தனித்தனியே விசாரணை நடத்தினார்.அங்கு இவர்கள் இருப்பதை அறிந்த பெண்ணின் உறவினர்கள் சுமார் 50 பேர் காவல்நிலையத்தை சூழ்ந்துகொண்டு அவர்களை வெளியில் கொண்டு வரவும், பிரிக்கவும் கடும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்களின் மிரட்டல்களை காவல்துறையின் துணையோடு கழக தோழர்கள் முறியடித்தனர்.
இந்நிலையில் விசாரணை செய்த காவல்துறை ஆய்வாளர் பெண்ணின் உறவினர் வருகைக்கு பின் திடீரென மணமகனுக்கு திருமண வயது இல்லை,அவர் மைனர் என கூறி பெண்ணை உறவினர் வசம் ஒப்படைக்க முயன்றார்.இதனை கடுமையாக எதிர்த்த கழக தோழர்கள் தக்க நேரத்தில் தலையிட்டு மணமகனின் வயதிற்க்கான ஆவணங்களை சமர்பித்து ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தோழர்களின் நெருக்கடியால் ஆய்வாளர் வேறுவழியின்றி இணையர் இருவரையும் பிரிக்க இயலாது அவர்கள் மேஜர் என்பதால் அவர்கள் இணைந்து வாழ்வதை யாரும் தடுக்க இயலாது என பெண்ணின் உறவினர்களிடம் கூறினார்.
பெண்ணின் உறவினர்கள் அப்போதும் கலைந்து செல்லாமல் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் காத்திருந்த காரணத்தினால் கழக தோழர்கள் காவலர்கள் துணையோடு இணையர்களை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
ஒருநாள் முழுவதும் நடந்த இந்த பரபரப்பான நிகழ்சியில் கழக தோழர்கள் நாமக்கல் மாவட்ட கழக தலைவர் தோழர் சாமிநாதன்,திருப்பூர் மாவட்ட கழக செயலாளர் முகில்ராசு, தனபால்,முத்து,திருவள்ளுவர் பேரவையை சார்ந்த அருண், பரிமளராசன் வழக்கறிஞர் சிராஜ் மற்றும் 30க்கும் மேற்பட்ட நண்பர்கள் ஆகியோர் இறுதி வரை அனைத்து எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு இணையருக்கு பாதுகாப்பாய் இருந்தனர்