ஏழு தமிழர் விடுதலை : ஆளுநரின் தாமதம் சட்டப்படி சரியானதல்ல
ஏழு தமிழர்கள் விடுதலையில் அமைச்சரவை யின் முடிவை ஆளுநர் தாமதப்படுத்துவது சட்டப்படி சரியானது அல்ல என்பதை விளக்கி வழக்கறிஞர் மனுராஜு சண்முக சுந்தரம், ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் எழுதிய கட்டுரை:
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட எழுவரையும் விடுதலை செய்து உத்தரவிடுவதை மேலும் தாமதப்படுத்துவது ‘சட்டத்தின் முன்னால் சமமாக நடத்தப்படுவதோ அல்லது சட்டப் பாதுகாப்போ எந்தவொரு நபருக்கும் மறுக்கப்படக் கூடாது’ என்று வலியுறுத்தும் அரசியல் சட்டத்தின் 14-வது கூற்றை மீறுவதாகும்.
ஏழு தமிழர்களின் வழக்கு ஏராளமான திருப்பங்களைக் கொண்டது. அவர்களது கருணை மனுக்கள் 2000 தொடங்கி 2011 வரைக்கும் 11 ஆண்டுகள் எந்த முடிவுகளும் எடுக்கப்படாமலேயே உயர் அதிகார மையங்களில் கிடப்பில் போடப்பட்டிருந்தன. 2011 ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றமே அவர்களது மரண தண்டனையை இரத்துசெய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.
இந்திய ஒன்றியம் எதிர் வி.ஸ்ரீஹரன் (முருகன்) (2005) வழக்கில், உச்சநீதிமன்றம் மரண தண்டனை இரத்து செய்து எஞ்சிய காலத்துக்கு ஆயுள் காவல் தண்டனை விதித்தது. இது, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 435இன் கீழ் மேலும் தண்டனையைக் குறைப்பதற்கான ஒரு தெளிவற்ற நம்பிக்கையை அளித்தது. அதாவது இந்த சிறைவாசிகள் மத்திய அரசின் கீழ் உள்ள சட்டப் பிரிவுகளில் தண்டிக்கப்பட் டதாலும் விசாரணை நடத்தியது மத்திய அரசு நிறுவனமான சி.பி.அய். என்பதாலும் விடுதலை செய்யும் உரிமை மத்திய அரசுக்கே உண்டு என்று மத்திய அரசு வாதிட்டது.
ஆனால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் தண்டனைக் காலத்தை மேலும் குறைப்பதில் மாநில அரசுக்கு 161ஆவது பிரிவின்படி இருக்கும் அதிகாரத்தை யும் அதே வழக்கில் அரசியல் சாசன அமர்வு உறுதி செய்தது. இருந்தாலும், கூறு 161இன் அரசியல் சட்ட அதிகாரத்தின் வரம்பை இரண்டு தீர்ப்புகளுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளவில்லை என்பதும் உண்மை. மாநிலத்தின் நிர்வாக அதிகாரத்தைத் தன் கையில் வைத்திருக்கும் ஆளுநர், எழுவரையும் விடுவிக்கும்படி ஏற்கெனவே ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எடுக்கப்பட்ட அமைச்சரவையின் முடிவுக்கு இசைந்த வகையிலேயே முடிவெடுக்க வேண்டும்.
ஏழு பேரையும் விடுதலை செய்ய ஏற்கனவே ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை முடிவெடுத்தது. அதற்கு முன்பு தி.மு.க. ஆட்சியில் நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து, அமைச்சரவை எடுத்த முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருக்கிறார். அத்துடன் தண்டனைக் குறைப்பில் அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டே ஆகவேண்டும் என்பதற்கு அரசியல் சட்டம் 7ஆவது அட்டவணையில் மாநிலங்களுக்கான உரிமைகளைக் குறிப்பிடும் பிரிவில் முதலிடம் பெற்றிருப்பது ‘பொது அமைதி’ என்ற அம்சம். எனவே மாநில அரசுக்கு வழங்கப்பட்ட தனித்துவமான அதிகாரம்தான் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
அத்துடன் வி.ஸ்ரீஹரன் (முருகன்) எதிர் இந்திய ஒன்றியம் (2014) வழக்கில் ஏழு பேரும் தண்டனைக் குறைப்புக்குள்ளான பிறகு தமிழ்நாடு சிறைச் சாலைகள் விதிகளின் கீழ் இந்தப் பிரச்சினை தானாகவே வந்துவிடுகிறது. சிறைச்சாலையின் ஆலோசனைக் குழு, “ஆயுள் தண்டனையை இருபதாண்டு கால சிறைத் தண்டனையாகக் குறைத்து” முன்கூட்டியே விடுதலை செய்யவோ அல்லது பரோல் கொடுக்கவோ செய்யலாம் என்கிறது சிறைச்சாலை விதி 341. இது இந்த 7 சிறைவாசிகளின் விஷயத்திலும் பொருந்தும்.
இந்த ஏழு பேரும் அவர்கள் இழைத்த அனைத்துக் குற்றங்களுக்காகவும் சிறைவாசிகளின் சீர்திருத்தக் கொள்கையின்படியே நடத்தப்பட வேண்டும். 20 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்களை நமது சமூகத்தில் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டியவர் களாகவே நாம் கருத வேண்டும். அதில் ஏதேனும் தவறுகள் நேர்கிறது என்றால், அது தண்டனை அமைப்பின் பிரச்சினைகளை வெளிப் படுத்துகிறதேயொழிய, சிறைவாசிகளின் பிரச்சினைகளை அல்ல. “ஒவ்வொரு ஞானிக்கும் ஒரு இறந்த காலம் உண்டு. ஒவ்வொரு பாவிக்கும் ஒரு எதிர்காலம் உண்டு” என்று ஆஸ்கார் ஒயில்டு கூறியதைத் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டிய வி.ஆர்.கிருஷ்ணய்யர், “சட்டத்தின் ஆட்சி என்பது ஞானிகள், பாவிகள் இருவருக்குமானது” என்று வலியுறுத்தினார். நமது ஆட்சியாளர்களோ இந்த வழக்கை மேலும் சிக்கலாகவே சிந்திக்கிறார்கள். மாறாக தங்களை சீர்திருத்தம் செய்து கொள்வது பற்றி சிந்திப்பதாகவே தெரியவில்லை.
பெரியார் முழக்கம் 11102018 இதழ்