ராஜாதாலே நினைவுக் கூட்டத்தில் விடுதலை இராசேந்திரன் உரை சுதந்திர நாளை துக்க நாளாக அறிவித்து, இந்து “புனித” நூல்களுக்கு தீயிட்ட போராளி

 

அம்பேத்கர் பூலே கருத்துகளை அடிப்படையாகக் கெண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் ‘தலித் பேந்தர்’ (தலித் சிறுத்தைககள்) என்ற புரட்சிகர இளைஞர் இயக்கத்தைத்  தொடங்கியவர் களில் ஒருவரான ராஜாதாலே, கடந்த ஜூலை 16ஆம் தேதி தனது 78ஆவது வயதில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஒன்றை தமிழ்நாடு குடியரசு கட்சி, ஜூலை 30, 2019 அன்று சென்னை ‘இக்ஷா’ அரங்கில் நடத்தியது. தமிழ்நாடு குடியரசு கட்சித் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செ.கு. தமிழரசன், தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர். கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்றுப் பேசுகையில் குறிப்பிட்டதாவது:

“ராஜாதாலே, பெரியார் திடலில் நடந்த மாநாடு ஒன்றில் பங்கேற்றுப் பேசியது எனக்கு நினைவில் இருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை அவர்கள் ராஜாதாலே மறைந்த அன்று, என்னுடன் தொடர்பு கொண்டு அவரது புரட்சிகர செயல்பாடுகளைப் பகிர்ந்து கொண்டார். அமெரிக்காவில் வாழும் கறுப்பின இளைஞர்கள் வெள்ளை நிறவெறிக்கு எதிராக கருஞ்சிறுத்தைகள் கட்சி ஒன்றைத் தொடங்கி நிறவெறிக்கு எதிராகப் போராடினார்கள். அந்த உணர்வின் உந்துதலால் தான், ஜெ.வி. பாவார், நாம்தியோதாசல், அருண்காம்ப்ளே ஆகியோருடன் இணைந்து, தலித் சிறுத்தைகள் அமைப்பைத் தொடங்கினார் ராஜாதாலே. தீண்டாமை, ஜாதி ஒடுக்குமுறைக்கு எதிராக தீவிரமாக களமாடிய அந்த அமைப்பு, இந்து மதத்தையும் பார்ப்பனிய மேலாண்மையை உயர்த்திப் பிடித்த ‘இந்து’ புனித நூல்களை தீ வைத்து எரிக்கும் போராட்டங்களையும் நடத்தியது. இதனால் நாடு முழுதும் பேசப்படும் இயக்கமாக தனது அடையாளத்தைப் பதித்தது. 1972ஆம் ஆண்டு இந்தியாவின் 25ஆம் ஆண்டு சுதந்திர நாள் விழா கொண்டாட்டத்தை நாடு கொண்டாடியபோது, அது ‘துக்க நாள்’; தலித் மக்கள் சுதந்திர நாளைக் கொண்டாடக் கூடாது; ஜாதிய ஒடுக்குமுறைகளை யும் ஜாதியத்தையும் காப்பாற்றி வரும் இந்தியாவின் ‘சுதந்திர’ நாளையும் அதன் புனிதச் சின்னமாக போற்றப்படும் தேசியக் கொடியையும் தலித் மக்கள் மதிக்கத் தேவையில்லை என்று அறைகூவல் விடுத்து, ‘சாதனா’ பத்திரிகையில் (அக்.9, 1972) அதை கட்டுரையாகவும் எழுதினார். நாடு முழுதும் பலத்த சர்ச்சைகளை உருவாக்கியது அக்கட்டுரை. அதைத் தொடர்ந்து ‘இந்து’ ‘புனித நூலாக’ பேசப்பட்ட கீதை, வேதம், இராமாயணம் போன்றவற்றை தீ வைத்து எரிக்கும் போராட்டத்தை அவர் அறிவித்தார். மகாராஷ்டிர மாநிலத்தில் தலித் மக்களுக்கு எதிரான ஜாதிய ஒடுக்குமுறைகள் வன்முறைகள் தலைவிரித்தாடிய காலத்தில் துவக்கப்பட்டது தான். ‘தலித் சிறுத்தைகள்’. இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான ஜே.வி.பவார், தலித் சிறுத்தைகள் கட்சியின் வரலாற்றை நூலாக எழுதியுள்ளார். அக்கட்சியின் அதிகாரபூர்வ வரலாறாக அந்த நூல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதில் பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

ராஜாதாலே சுதந்திர நாளை துக்க நாளாக அறிவித்து எழுதிய கட்டுரை குறித்து பம்பாய்  கோரகான் பகுதியில் உள்ள பத்கார் கல்லூரியில் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் அமைப்பு சார்பில் பேராசிரியர் எஸ்.எஸ். யாதவ் ஏற்பாடு செய்த அக்கருத்தரங்கில் ஜனசங்கம் என்ற இந்துத்துவ கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜி.பி. கனிஸ்கர், சோஷலிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மிர்ணாள் கோரே, புத்தமத ஆய்வாளர் சரத்மகாத்கர், தலித் எழுத்தாளர் பேராசிரியர் கேசவ் மேஷமை உள்ளிட்ட பல்வேறு சிந்தனையாளர்கள் பங்கேற்றுப் பேசினர். ராஜாதாலேயும் பேசினார். ‘சுதந்திர நாளை துக்க நாள்’ என்ற தனது கருத்தை மறுத்துப் பேசியவர்களுக்கு ராஜாதாலே தந்த பதிலும் நெருப்பாக இருந்தது. எதிர்ப்பவர்கள் துணிவற்றவர்கள் என்று மேடையில் கூறியதோடு, ‘சாகும் வரை தூக்கிலிட வேண்டும்’ என்று எனக்கு நீதிமன்றம் ஆணையிட்டாலும் என்னுடைய கருத்திலிருந்து பின்வாங்க மாட்டேன் என்று முழக்கமிட்டார். வேதங்களையும் இராமாயணத்தையும் கடுமையாக சாடினார். ஆரியரல்லாத புத்த மார்க்க சிந்தனையாளர்களால் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்களைக் களவாடி, ‘பிராமணர்கள்’ தங்கள் மேலாதிக்க கருத்துகளை அதில் புகுத்தி சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டவையே இவர்கள் பேசும் ‘இந்து’  புனித இலக்கியங்கள் என்றார். ராஜாதாலேயின் இந்த ஆவேச ‘இந்து’ மத எதிர்ப்புப் பேச்சு, சிவசேனைத் தலைவர் பால்தாக்கரேவை கோபத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றது.

“இந்து புனித நூல்களை மதிக்காத இந்த புத்த மார்க்க இளைஞர்கள் மீது இரக்கமே காட்டக்கூடாது; அவர்களை மதிக்கவே கூடாது” என்று பால்தாக்கரே அலறினார். இதற்கு ராஜாதாலே பதிலடி தந்தார். “புத்த மார்க்கத்தை ஏற்றுள்ள எங்கள் இளைஞர்களோடு  சிவாஜி பூங்காவிலே சிவசேனை நடத்த இருக்கும் பேரணிக்கே சென்று இராமாயணத்தையும், வேதத்தையும், கீதையையும் எரிப்பேன்” என்று பதிலடி தந்தார். கோரிகான் கருத்தரங்கில் பேசிய பல சிந்தனையாளர்கள் தேசியக் கொடியை அவமதிக்கக் கூடாது என்று  ராஜாதாலேவிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதே கருத்தரங்கில் பேசிய புத்த மார்க்க சிந்தனையாளர் சரத்மகாத்கர் இதற்கு பதிலடி தந்தார். காந்தியைப் பற்றிய நூல் எழுதிய ஆனந்த்ஹரித்கர், “தேசியக் கொடியில் – அம்பேத்கர் அசோகச் சக்கரத்தைத் திணித்து விட்டார். இது புத்த மதக் குறியீடு. இதற்காகவே தேசியக் கொடியை கிழித்து எறிய வேண்டும்” என்று நூலில் எழுதியிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்துவிட்டு, பிறகு தாலே மீது நடவடிக்கை எடுங்கள் என்றார். தலித் மக்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளுக்கு கருத்தியல்களை வழங்குவது ‘இந்து’ புனித நூல்கள்தான். அவை தீயிட்டுப் பொசுக்கப்பட வேண்டும் என்ற கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்தியவர் ராஜாதாலே. அதற்காக அவர் பேசும் கூட்டங்களில் எல்லாம் இந்து சனாதனவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். குழப்பம் விளைவித்தனர். அவற்றைப் புறந்தள்ளினார் ராஜாதாலே. தலித் சிறுத்தைகள் அமைப்போடு கருத்து மாறுபாடு ஏற்பட்டு அம்பேத்கர் பெயரில் சமுதாய இயக்கம் ஒன்றைத் தொடங்கினார். சிவசேனைக்காரர்கள், பால்தாக்கரே உத்தரவுப்படி, தாலே பேசிய கூட்டங்களில் கலவரங்களை உருவாக்கினர்.

1972 ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி பம்பாய் கல்யாண் பகுதியில் ராஜாதாலே, தசால் ஆகியோர் பேசிய கூட்டத்தில் சிவசேனை கட்சியினர் கற்களையும், சோடாபட்டில்களையும் வீசி கூட்டத்தைக் கலைக்க முயற்சித்தனர். கூட்டத்திலிருந்த இளைஞர்கள் வெகுண்டு எழுந்து பதிலடி தந்தனர். அந்தப் பகுதியே போர்க் களமானது. தலித் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர் என்று ‘தலித் சிறுத்தைகள்’ வரலாற்று நூல் பதிவு செய்திருக்கிறது.

மற்றொரு முக்கியத் தகவலையும் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தலித் எழில்மலை அவர்கள் என்னிடம் கூறிய தகவல் இது. மகாராஷ்டிர முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த வசந்தராவ் பட்டீல் இருந்த போது அம்பேத்கர் ‘தலித் மக்கள் தண்ணீர் எடுக்கும்’ போராட்டத்தை நடத்திய மகர் குளத்துக்கு 50ஆம் ஆண்டு நினைவு நாளில் மரியாதை செலுத்த வந்தார். அப்போது ராஜாதாலேவும் அவரது அமைப்பினரும் மகாராஷ்டிரா முதல்வர் வீர வணக்கம் செலுத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து, மகர் குளம் அருகே நெருங்கவிடவில்லை. அப்போது ராஜாதாலே, மகாராஷ்டிரா முதல்வருக்கு ஒரு நிபந்தனை விதித்தார். அம்பேத்கர் எழுத்து பேச்சுகளை மகாராஷ்டிரா அரசு தொகுப்பாக வெளியிட சம்மதித்தால் அனுமதிக்கத் தயார் என்றார். மகாராஷ்டிரா முதல்வர் அதே இடத்தில் ஒப்புதல் வழங்கினார். அதற்குப் பிறகுதான் மாநில அரசு தாலேவுக்கு உறுதி அளித்தபடி அம்பேத்கர் கருத்துகளைத் தொகுப்பாக வசந்த் மூன் அவர்களை பதிப்பாசிரியராகக் கொண்டு தொகுத்தது.

ஜாதி தீண்டாமை ஒழிப்புக்கான போராட்டத்தில் இப்படி எதிர்நீச்சல் போட்ட களப் போராளிகளை கலகக் காரர்களை நாம் நினைவுகூர வேண்டும். ஊடகப் பொது வெளியில் இவர்கள் வெளிச்சத்துக்கு வராதவர்கள். மாபெரும் சென்னை மாநகரத்தின் இந்த சிறிய அரங்கில் நாம் கூடி அவர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறோம். உண்மையான போராளிகளுக்கான பெருமைக்குரிய அடையாளம் இப்படித்தான் இருக்கும்” என்றார் விடுதலை இராசேந்திரன்.

பெரியார் முழக்கம் 08082019 இதழ்

You may also like...