வெற்றியின் யோக்கியதை ஓட்டர்களுக்கு இனியாவது புத்தி வருமா?
இந்திய சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்து விட்டதைப் பற்றி இந்தியா பூராவிலும் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடந்தன. அது மாத்திரமல்லாமல் வெற்றி பெற்ற காங்கிரஸ் வீரர்கள் இந்திய சட்டசபையில் செய்த செய்கின்ற வேலைகளோ “”சர்க்காருக்குத் தோல்விக்குமேல் தோல்வியும் காங்கிரசுக்கு வெற்றிக்கு மேல் வெற்றியும்” என்பதாக பிலாக் கொட்டை போன்ற எழுத்தில் போட்டு பத்திரிகைகள் பக்கங்களை நிரப்புகின்றன. இதன் பயன் என்ன என்று பார்த்தால் அரிசிக்கு விலை ஏற்ற வேண்டும். அதற்காக அயல் நாட்டிலிருந்து வரும் நெல்லுக்கும் அரிசிக்கும் நொய்க் குருணைக்கும் வரி போட வேண்டும் என்று சாக்காரைக் கெஞ்சுவதும் தான் வெகு தடபுடலாக அடிபடுகின்றதே ஒழிய மற்றபடியான காரியம் என்ன என்று பார்த்தால் பெரியதொரு சைபர் தான். “”சர்க்கார் தோல்வியடைந்தார்கள்” என்பதனால் ஒரு காதொடிந்த ஊசியளவு பயனாவது மக்களுக்கு ஏற்படும் என்று யாராவது எதிர்பார்க்க முடியுமா? அல்லது வாயினாலாவது சொல்ல முடியுமா? என்று பார்த்தால் அதுவும் ஒன்றுமில்லை என்று தான்...
