வெள்ளத்தில் மூழ்கியது, மதவெறியும்தான்!
மனிதர்களின் வாழ்வை சூறையாடி விட்டது வெள்ளம்; இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு; இயற்கையின் இந்த சீற்றம், பல்வேறு உண்மைகளை உணர்த்தி விட்டுச் சென்றிருக்கிறது. இயற்கையின் உலகிலிருந்து பல்வேறு பரிணாமங்கள் பெற்று படிப்படியான உருமாற்றங்களுக்குப் பிறகு உருவாகி யவன் மனிதன். ஆனால் இந்த இயற்கை யின் நியதி மதம், ஜாதி, ஏழை, பணக்காரன் என்ற பேதங்களை உருவாக்கவில்லை. மக்களைப் பிளவுபடுத்தும் இந்த அடை யாளங்களை உருவாக்கியது மனிதன் தான். இயற்கையின் சீற்றம் அனைத்து மத, ஜாதியினரையும் பாதிக்கச் செய்துவிட்டது. எனவே தான் கூறுகிறோம், இயற்கையின் நியதியில் மதம், ஜாதி, கடவுளுக்கு கிஞ்சித்தும் இடம் கிடையாது. நான் யார்? நான் எப்படி வந்தேன்? என்ற கேள்விகளுக்கு விடை தேடத் தொடங்கிய மனிதன், தனக்கு மேலாக ஒரு உலகம், ஒரு சக்தி இருப்பதாகவும், அந்த உலகத்தை அடைவதற்காகவே இந்த பூமியில் நாம் வாழ வேண்டும் என்றும் நம்பினான். இயற்கையின் புதிர்களுக்கு அவனுக்கு விடை கிடைக்கவில்லை. கால...