சைவத்தையும் ஆரியத்தையும் எதிர்த்தவர் வள்ளலார்
திராவிடர் விடுதலைக் கழகம் கடந்த 24.12.2016, பெரியார் நினைவு நாளன்று “திரு மூலர், வள்ளலார், பெரியார் வழியில் – வேத மரபு மறுப்பு மாநாட்டை” நடத்தியது. “வேத மரபை மறுப்போம்! வெகு மக்கள் உரிமைகளை மீட்போம்!” என்ற முழக்கத்துடன் கூட்டப்பட்ட அம்மாநாட்டில் தமிழ்ச் சூழலில் வேத மரபு மறுப்பு என்பது எத்தனை ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை விளக்கும் பல்வேறு தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டன. திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நெறியாள்கை யில் காலையில் நடந்த கருத்தரங்கத்தில் “வள்ளலாரின் சன்மார்க்கத்தில் வேத மரபு மறுப்பு” என்ற தலைப்பில் பூங்குழலி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். வள்ளலார் கடவுள் மறுப்பாளர் அல்ல. ஆனால் கடவுள் மறுப்பாளரான பெரியாரே அங்கீகரித்து பதிப்பித்துப் பரப்பக் கூடிய அளவுக்கு வள்ளலாரின் ஆறாம் திருமுறையில் என்னதான் இருந்தது என்ற கேள்வி எழுந்தது. அதைப் புரிந்து கொள்வதற்கு முன் நாம் வள்ளலார் வாழ்ந்த காலத்தின் சமயச் சூழலைப்...