சைவத்தையும் ஆரியத்தையும் எதிர்த்தவர் வள்ளலார்

திராவிடர் விடுதலைக் கழகம் கடந்த 24.12.2016, பெரியார் நினைவு நாளன்று “திரு மூலர், வள்ளலார், பெரியார் வழியில் – வேத மரபு மறுப்பு மாநாட்டை” நடத்தியது. “வேத மரபை மறுப்போம்! வெகு மக்கள் உரிமைகளை மீட்போம்!” என்ற முழக்கத்துடன் கூட்டப்பட்ட அம்மாநாட்டில் தமிழ்ச் சூழலில் வேத மரபு மறுப்பு என்பது எத்தனை ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை விளக்கும் பல்வேறு தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டன.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நெறியாள்கை யில் காலையில் நடந்த கருத்தரங்கத்தில் “வள்ளலாரின் சன்மார்க்கத்தில் வேத மரபு மறுப்பு” என்ற தலைப்பில் பூங்குழலி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.

வள்ளலார் கடவுள் மறுப்பாளர் அல்ல. ஆனால் கடவுள் மறுப்பாளரான பெரியாரே அங்கீகரித்து பதிப்பித்துப் பரப்பக் கூடிய அளவுக்கு வள்ளலாரின் ஆறாம் திருமுறையில் என்னதான் இருந்தது என்ற கேள்வி எழுந்தது. அதைப் புரிந்து கொள்வதற்கு முன் நாம் வள்ளலார் வாழ்ந்த காலத்தின் சமயச் சூழலைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

வள்ளலார் 1874இல் மறைந்து போகிறார். அதாவது ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன்பே அவர் மறைந்து விட்டார் என்றால், அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த சமூக நிலை என்பது முற்றிலும் மதத்தின் பிடியில் சிக்கியிருந்தது.

ஏன் வள்ளலாரே தீவிர சைவ சமய பற்றாளராகவே இருந்தார். அவரது முதல் 5 திருமுறைகளும் சிவனைத் துதிப்பவையாகவே இருந்தன.

அவரது முதல் நான்கு திருமுறைகள் தொகுக்கப் பட்டு வெளியிடப்படடு 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அதுவும் வள்ளலார் மறைந்த பிறகுதான் அவரது அய்ந்தாம் திருமுறையே வெளியிடப்படுகிறது. அதற்கும் 5 ஆண்டுகளுக்குப் பின்தான் அவரது ஆறாம் திருமுறை வெளியிடப்படுகிறது. வள்ளலாரின் முதல் 5 திருமுறைகளை ஆர்வமுடன் வெளியிட்ட வர்கள் அவரது ஆறாம் திருமுறையை வெளியிட முன் வரவில்லை. அதிலும், முதல்முதலாக அவரது பாக்கள் தொகுக்கப்பட வேண்டும் என்று வள்ளலாரிடம் போராடி அனுமதி வாங்கிய இறுக்கம் இரத்தினம் முதலியார், தொழுவூரார் போன்றவர்கள். இறுக்கம் இரத்தினம் முதலியார் “ஒரு வேளை மட்டுமே உண்பேன்” என்ற அளவுக்கு போராடியே வள்ளலாரிடம் அனுமதி பெற்றார். அவரைப் போன்றவர்கள் வள்ளலாரின் மனப் போக்கு மாறியதை உணர்ந்தவுடன் அவரை விட்டு விலகி நிற்கிறார்கள்.

1860களுக்குப் பின் வள்ளலாரின் சிந்தனைப் போக்கில் பெரிதும் மாற்றம் ஏற்படுகிறது.

1866ஆம் ஆண்டு மிக மோசமான பஞ்சம் தாக்கு கிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் மடிந்து போகிறார்கள். இது வள்ளலாரின் மனதில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதன் பிறகு அவரது சிந்தனை அனைத்து உயிர் நேயத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே உள்ளது. அன்பே கடவுள் உடம்பே கோயில் என்ற திருமூலரின் வழி நிற்கிறார்.

அத்துடன் அவர் நிற்கவில்லை. சமயங்களை கடுமையாக கேள்விக்கு உட்படுத்துகிறார். குறிப்பாக வேதங்களையும் அவை வலியுறுத்தும் சடங்குகள், சாதி என அனைத்தையும் கேள்விக்கு உட்படுத்து கிறார்.

22.10.1873ஆம் ஆண்டில் சித்தி வளாகத்தில் சன்மார்க்கக் கொடியை ஏற்றி வைத்து வள்ளலார் பேசும்போது பின்வருமாறு குறிப்பிட்டார்.

“நான் முதலில் சைவ சமயத்தில் இலட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அந்த லட்சியம் எப்படிப் போய்விட்டது? பார்த்தீர்களா! அப்படி லட்சியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் பாடியிருக்கிற திருவருட்பாவில் அடங்கியிருந்த பாடலையும், மற்றவர்கள் பாடலையும் சபைக்குக் கொண்டு வந்தால் அவைகளே சாட்சி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது”

அதாவது தான் அற்ப அறிவுடன் இருந்த காலத்தில் சைவ சமயப் பற்றோடு இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார். அறிவுத் தெளிவு பெற்றப் பிறகு சமயம் கடந்த சன்மார்க்க நெறிக்கு மாறியதாக குறிப்பிடுகிறார்.

தனது சமயம் அருள் நெறி என்கிறார். உலகில் மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய துன்பங்கள் ஒழிய அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் சாதி சமய காழ்ப்புகளை துறந்து எல்லா உயிர்களையும் நேசிக்கக் கற்றுக் கொள்ளுதலே தலையாய அறம் என்று போதிக்கிறார்.

இரக்கம் செயலில் தோன்ற வேண்டுமென உபதேசித்தார்! இதனையே ‘சுத்த சமரச சன்மார்க்க நெறி’ யெனப் பெயரிட்டழைத்தார்.இதற்கென ஒரு நிறுவனமும் அமைத்தார். அதற்குச் சுத்த சமரச சன்மார்க்க சங்கம் என்று பெயரிட்டார்.

மொழிக்காக சங்கம் அமைத்தத் தமிழர் களிடையே சமயத்திற்காக முதன் முதலாக சங்கம் அமைத்தவர் வள்ளலாரே. புத்தரின் பவுத்த சங்கத்திற்கு பின் சமயத்திற்காக சங்கம் அமைத்தவர் வள்ளலார்தான்.

தமிழகத்தில் வள்ளலாருக்கு முன்பிருந்த சமய ஞானிகள் மடங்களையே நிறுவினார்கள். ஆனால் வள்ளலார் மடத்தினை நிறுவாமல் சங்கத்தை நிறுவினார். மடம் என்பது துறவிகளுக்கு உரியது. அதிலும் ஆண்களுக்கு மட்டுமே உரியது. சங்கம் அனைவருக்கும் உரியது. அந்த அடிப்படையிலேயே மடத்தை நிறுவாமல் சங்கத்தை நிறுவினார் வள்ளலார்.

சன்மார்க்கம் – அதாவது சத்திய மார்க்கம் அல்லது உண்மை மார்க்கம் – வள்ளலாரின் காலத்திற்கு முன் சன்மார்க்கம் என்பது சைவ சமய சன்மார்க்கமாகவே இருந்தது. அவரது வருகைக்கு பின்தான் சுத்த சன்மார்க்கமாக மாறியது. சமய தளத்தில் ஒரு புரட்சிக்காரராகவே இதை முன் மொழிந்தார் வள்ளலார். உருவ வழிபாட்டை விட்டு விலகினார். காவிக்கு மாறாக வெள்ளாடை அணிந்தார். கோவிலை சபை என்றார். ஒளியே வழிபாட்டிற் குரியது என்றார். அதுவும் தீபத்திற்கு அல்ல. ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒளிர வேண்டியது என்றார்.

எல்லோருக்கும் பொதுவான கோயிலாக சத்திய ஞான சபையை நிறுவிய வள்ளலார் அதில் உருவ வழிபாட்டிற்கு மாறாக சோதி வழிபாட்டை புகுத்தினார்.

சமரசம் என்பது நாடு, மொழி, சமயம், சாதி அனைத்தையும் கடந்து அனைவரும் ஒன்றுபட்டு நிற்பது என்று கூறிய வள்ளலார், இந்த சமரச உணர்வை இழப்பதை அறியாமை என்கிறார்.

இந்தக் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை அவர் நிறுவினார்.

அவரது இந்த கருத்துக்களும் செயல்முறைகளும் அக்காலக்கட்டத்தில் பெரும் புரட்சிகரமாக பார்க்கப்பட்டன. சமயப் பற்றாளர்களை, குறிப்பாக சைவ மடாதிபதிகளை இவரது கருத்துக்கள் பெரும் பதட்டத்திற்குள்ளாக்கின.

அவர்கள் ஆறுமுக நாவலர் போன்ற அறிஞர்களை அவருக்கு எதிராக ஏவி விட்டனர். வள்ளலாரின் கருத்துக்களுக்கு ஆறுமுக நாவலர் காட்டிய எதிர்ப்பு என்பது ஆழமாக நோக்க வேண்டிய ஒன்று.

ஆறுமுக நாவலர் வேதத்தையும் வர்ணாசிரமத்தை யும் ஏற்றுக் கொண்டவர். வள்ளலார் வர்ணாசிரம தருமத்திற்கு எதிரானவர். மிகக் கடுமையாக அதைச் சாடியவர்.

சாதிப் பிரிவினைகளை கடுமையாக எதிர்த்துப் போராடினார்.

“சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே

சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே

ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே”

– என்றும்

“நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா

நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே”

– எனப் பாடினார்.

“நான்கு வருணங்களும், நால்வகை ஆசிரமங் களும் (பிரமச்சரியம், கிருகத்தம், வானப் பிரகத்தம், சந்நியாசம்) ஆசாரங்களும் (சாதி, மத, குல, ஒழுக்கங்கள்) சொன்ன சாத்திர சரிதங்கள் எல்லாமே பிள்ளை விளையாட்டு என்றும், மேல் வருணம், தோல் வருணம் கண்டு அறிவார் இல்லை என்றும் 1870களின் தொடக்கத்தில் துணிந்து எழுதியவர் இராமலிங்கர். இதோடு அவர் விடவில்லை. இதுவரை வந்த நூல்களில் ‘இந்திரசாலம்’ என்று நூலை மட்டும் ஜாலம் என்று கூறுவார்கள். ஆனால், வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலான அனைத்து நூல்களுமே ஜாலம்தான் என்று மறுத்தார். இவை எல்லாம் பொய் என்றார்.”

வேதநெறி ஆகமத்தின் நெறிபவு ராணங்கள்

விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுவதும்

ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி

உள்ளதனை உள்ளபடி உணர உணர்த்தினையே

என்பது வள்ளலாரின் கூற்று. வேதம், ஆகமம், புராணங்கள், இதிகாசம் ஆகியவற்றில் சொல்லப் பட்டிருக்கும் விடயங்கள் சூது என்றும் அவர் கூறுகிறார்.

அது மட்டுமல்ல. அக்காலம் என்பது ஆங்கிலேய ஆட்சியில் சைவ மடாதிபதிகள் கோலோச்சிய காலம். பெரும் செல்வம் படைத்த அவர்கள் தங்கள் பிரச்சாரங்கள் மூலம் மதப் பிடிப்பை ஏற்படுத்தி தத்துவ ஆதிக்கத்தை நிலை நிறுத்த முற்பட்டனர். கம்ப இராமாயணத்தையே வைணவ இலக்கியம் என்பதால் படிக்கக் கூடாது என்று தடை விதிக்கும் அளவுக்கு சைவ வெறி கொண்டிருந்தனர். தமிழை வளர்ப்பதாகக் கூறிக் கொண்டு சமயச் சண்டைகளை ஊதி விட்டனர். அதன் மூலம் சைவ வைணவ மடங்கள் தங்கள் மேலாதிக்கத்தை சாதாரண மக்கள் மீது நிலை நிறுத்தினர். இந்த நிலையில் அவர்கள் சமரசத்தையும் ஒற்றுமையையும் விரும்பவில்லை.

இச்சமயத்தில்தான் வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க நெறியை போதிக்க முற்பட்டார். தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில்களுக்குள் அனுமதிக்கப்படாத காலத்தில் அவர்கள் மட்டுமல்ல சகல மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒன்றுகூடி வழிபடக்கூடிய சத்தியஞான சபையை அமைத்தார்.

அது மட்டுமல்லாது மக்களில் ஒருவர் விடாமல் கல்வியறிவு பெறும் போதுதான் சாதி, சமய, வருணப்பற்றுக்களிலிருந்து அவர்களை விடுவிக்க முடியுமென்று வள்ளலார் நம்பினார். அதனால், கல்வி கற்க உரிமையற்றவர்களாக ஆக்கப்பட்டிருந்த பெண்களுக்கும் சமூகக் கல்வியேயன்றி ஆன்மஞானக் கல்வி தருவதும் கட்டாயம் அவசியம் என்றார்.

அவரது இந்த சமரச நெறி சைவ மடாதிபதிகளின் கோபத்தை தூண்டிவிட்டது.

கடவுள் உண்டு என்று நம்பிய வள்ளலார் அதே வேளையில் கடவுள் பற்றி சனாதான-சைவ குருமார்கள் கூறியவற்றை கற்பனைக் கதைகள் என்று மறுத்தார். மதத்தினை அடிப்படையாகக் கொண்ட மூட நம்பிக்கைகளிலிருந்து மக்களை மீட்க பாடுபட்டார்.

கடவுள் என்பது அன்பே அன்றி வேறில்லை என்று வலியுறுத்தினார். புராணங்களெல்லாம் தத்துவங்களை விளக்கப் புகுந்த கற்பனைக் கதைகளே என்பதனை மக்களிடம் பரப்பினார். தெய்வத்தை வழிபடும் முறையிலும் காலத்திற்கேற்ற-பகுத்தறி வாளரும் ஏற்கத்தக்க மாறுதல்களைப் போதித்தார்.

சமற்கிருத மொழியில் உள்ள வேதங்களை அவர் நன்கு பயின்றவராயினும் கூட அவற்றை நம்ப வேண்டாம் என்று மக்களிடம் கூறினார்.

துறவுக்கு அடையாளமாக கருதப்பட்ட காவி உடையை ஒதுக்கி வெள்ளை ஆடையை அணிந்தார். கடவுளைப் பற்றி சொல்ல வந்த மகான்களையே கடவுளாக்கி வழிபடும் போக்கை வன்மையாக கண்டித்தார். உருவ வழிபாட்டை கடவுள் வழிபாட் டிற்காக மட்டுமின்றி தனி மனிதர்களை வழிபடும் முறைக்காகவும் எதிர்த்தார்.

பெண்களுக்கு ஏட்டுக்கல்வி தரக் கூடாதென்ற மூடத்தனத்தை எதிர்த்தார். வெறும் லௌகிகக் கல்வியே யன்றி, ஆன்மிகக் கல்வியும் அவர்களுக்குத் தரவேண்டும் என்றார்.

  1. ஆண்-பெண் வேறுபாடின்றி எல்லாப் படிப்பையும் பெண் களுக் குச் சமமாகக் கொடுக்க வேண்டும்.
  2. ஓகம் முதலிய கல்வி தாண்டிய பயிற்சிகளையும் கற்பிக்க வேண் டும்; சாதனம் – மன அமைதியையும் ஆன்மிக நிறைவையும் தருகின்ற வழி.
  3. இவற்றுடன் நின்றுவிடாமல் தத்துவங்கள் பற்றியும் தெளிவாகப் போதிக்கவேண்டும். அத்துடன் தெய்வம் தொழாஅள் என்னும் தேவர் குறளால் இதை அறிக என்று அந்தப் பகுதியை முடிக்கிறார்.

அடிமையாய், அறிவில்லாத சடப்பொருளாய் மனைவியானவள் இருந்து கணவனை வழிபடுவதைக் குறள் குறிக்கவில்லை, மாறாக எல்லாம் அறிந்தவனாய் அவனுக்கு ஒத்து நின்று ஒரு பேரறத்தில் சமபங்கு பெறுகிறாள் என்று குறளுக்கே புத்துரை வகுக்கிறார் வள்ளலார். சமவுரிமை பெற்ற பெண்ணாக, காதலன் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் பங்குபெறும் தோழியாக அறிவு வடிவமாகப் புதுமைப் பெண்ணைப் பாரதிக்கு முன்பே எண்ணிய பெருமை வள்ளலாருக்குண்டு.

ஆணும் பெண்ணும் ஒன்றே என்பதைப்பற்றி வள்ளலார் கூறும் உண்மைகள் மிகச் சிறந்தவை.

“பெண்ணினுள் ஆணும் ஆணினுள்

பெண்ணும்

அண்ணுற வகுத்த அருட்பெரும்

சோதி!”

இதன் பொருள் : பெண்ணுருவத் தில் ஆண் தன்மைகளும், ஆண் உருவத்துள் பெண் தன்மைகளும் ஒன்றுபட்டிருக்கும்படி செய்த அருட் பெரும் சோதியே! என்பதாகும்.

“பெண்ணியல் மனமும் ஆண்இயல்

அறிவும்

அண்ணுற வகுத்த அருட்பெரும்

சோதி!”

இதன் பொருள் : ஆண் பெண் இரு பாலாரிடமும், பெண் தன்மையான இளகிய மனமும், ஆண் தன்மையான தெளிந்த உறுதியான அறிவும் ஒன்று பட்டிருக்கும்படி செய்த அருட் பெரும் சோதியே! என்பதாகும்.

“தனித்தனி வடிவனும் தக்கஆண்

பெண்செயல்

அனைத்துற வகுத்த அருட்பெரும்

சோதி!”

இன் பொருள் : ஒவ்வொரு ஆண் பெண்களிடமும் சிறந்த ஆண் தன்மை கள், பெண் தன்மைகள் அனைத்தும் அமைந்திருக்கும்படி செய்த அருட் பெரும் சோதியே! என்று பாடுகிறார்.

பெண்களும், ஆண்களும் சன்மார்க்கத்தில் தொண்டாற்றிப் பயன்பெறத்தக்க தகுதியுடையவர்கள் என்று கூறியதோடு,

‘கணவன் இறந்தால் மனைவி தாலி அறுக்கவேண்டாம்’ என்று கூறினார்.

சங்கராச்சாரியுடன் வாதம்

வள்ளலார் எந்த சைவ மடாதிபதி யிடமும் சென்று தீட்சை பெற்றவர் அல்ல.

இரண்டாவதாக, சைவ இலக்கி யங்கள் தவிர பிறவற்றை கற்கவும் கற்பிக்கவும் கூடாது என்று சைவ மடாதிபதிகள் விதித்திருந்த தடையை மீறி மக்களுக்கு திருக்குறளை கற்பித்தார் வள்ளலார். வடமொழியின் துணையின்றி தமிழ் தனித்து இயங்க முடியாது என்ற கருத்தோட்டத்துடன் சைவ மடங்களில் வடமொழி கற்பிக் கப்பட்டது. ஆனால் வள்ளலார் தமிழ் என்றும் தனித்தியங்க வல்லது என்று உறுதியாக உரைத்தார். சைவத்தையும் தமிழையும் காப்பதாகக் கூறிக் கொண்டு திருக்குறள், கம்ப இராமா யணம் உள்ளிட்ட வைணவ, பவுத்த சமண இலக்கியங்கள் அனைத்தையும் ஒதுக்கிய சைவ மடங்களின் பிடியி லிருந்து தமிழை மீட்டெடுத்தார்.

வள்ளலார் வாழ்ந்த காலத்திலேயே தமிழே தொன்மையானது, சிறந்தது, அதிலிருந்துதான் உலக மொழிகள் யாவும் கிளைத்தன என்னும் கருத்தை வெளியிட்டார். அவரைச் சங்கராச் சாரியார் சந்தித்தபோது “”சமற்கிருதம் மாத்ரு பாஷா” எனக் குறிப்பிட்ட போது உடனடியாக வள்ளலார் “அவ்வாறாயின் தமிழ் பித்ரு பாஷா” அதாவது தந்தைமொழி என்று ஆணித் தரமாகப் பதிலளித்தார். சமற்கிருதம் என்னும் தாய்மொழியிலிருந்துதான் மற்ற மொழிகள் பிறந்தன என்ற கூற்றை மறுக்கும் வகையில், அப்படி யாயின், தமிழ் தந்தைமொழி என வள்ளலார்

தமிழ் மொழியிடனிடத்தே மனம் பற்றச் செய்ததற்கு இறைவனைப் பாராட்டும் அடிகள் ஆரிய முதலிய மொழிகளில் ஆசை செல்ல வொட் டாது தடுத்ததற்காகவும் பாராட்டு கின்றார். தமிழின் இனிமையைக் கூறுகின்றவர் ஆரிய முதலியவற்றின் இன்னாமையையும் இயம்புகின்றார்.

ஆரியம் முதலிய மொழிகள் இடம்பத்தை உண்டுபண்ணுவன.

தமிழில் இடம்பம் இல்லை.

ஆரியம் முதலிய மொழிகள் ஆரவாரத்தை உண்டுபண்ணுவன.

தமிழில் ஆரவாரம் இல்லை.

ஆரியம் முதலிய மொழிகள் பிரயாசத்தை உண்டுபண்ணுவன.

தமிழில் பிரயாசை இல்லை.

– என்று கூறுகிறார்.

ஆக சம கால மதத் தலைவர்களின் கடும் எதிர்ப்பை சம்பாதிக்கும் அளவுக்கு வள்ளலாரின் கருத்துக் களும் செயல்பாடுகளும் புரட்சி கரமாக இருந்துள்ளன. அந்த எதிர்ப்பே அவரது நேர்மையான வேத மறுப்புக்கு சான்றாக உள்ளது. இதை நன்கு புரிந்ததாலேயே பெரியார் வள்ளலாரின் ஆறாம் திருமுறையை பதிப்பித்து உள்ளார்.

ஆனால் வேத மரபுக்கு எதிரான அனைத்தையும் தின்று செறிக்க முயலும் பார்ப்பனியம் வள்ளலாரை யும் விட்டு வைக்கவில்லை. 1880-களிலேயே வள்ளலாரின் சங்கத்தையும் சபையையும் தன் வசப்படுத்த பார்ப் பனர்கள் முயன்றனர். ஆனால்  சட்டப் போராட்டத்தின் மூலம் அது தகர்க்கப்பட்டது.

அந்த முயற்சி இன்றளவிலும் தொடர்கிறது. பத்தாண்டுகளுக்கு முன் சத்திய ஞான சபையில் சிவலிங்கத்தை நிறுவி சிவ பூசை நடத்த பார்ப்பனர்கள் முயன்றனர். இது பல நிலைகளில் வழக்காக நடத்தப்பட்டு, இறுதியாக உயர் நீதிமன்றத்திற்கும் வந்தது. நல் வாய்ப்பாக அந்த வழக்கு சமூக நீதி பார்வையுள்ள நீதிநாயகம் சந்துரு அவர்கள் முன் வந்தது. அவர் மிகச் சிறப்பான நீண்டதொரு தீர்ப்பினை வழங்கினார். வள்ளலார் உருவ வழிபாட்டிற்கு எதிரானவர் என்பதால் சிவலிங்கத்தை சத்திய ஞான சபையில் நிறுவுவதும் சிவ பூசை நடத்துவதும் தவறு என்ற ஆணித்தரமான தீர்ப்பை வழங்கினார்.

இன்று ஆட்சி அதிகாரத்தைக் கையில் கொண்டு இந்துத்துவா வலு பெற முயன்று வருகிறது. வேத காலத்தை மீண்டும் நிலை நிறுத்து வோம் என்பதே இந்துத்துவவாதிகளின் முழக்கமாக உள்ளது. சாதிப் பிரிவினைகளை, காழ்ப்புணர்வை, பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத் தும் வேத காலத்திற்கு இந்நாட்டை திருப்பிக் கொண்டு போக அவர்கள் முயலும் இந்த நிலையில் வேத மரபை எதிர்ப்பவர்கள், அவர்கள் கடவுள் மறுப்பாளர்களாக இருந்தாலும் கடவுளை ஏற்றுக் கொண்டு ஆனால் வேத மரபை மறுக்கும் வள்ளலாரின் சன்மார்க்க சங்கத்தினராக இருந்தா லும், வேத மரபு மறுப்பு என்ற புள்ளி யில் தோழமை சக்திகளாக இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயமும் கடமையும் உள்ளது. இதனை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

1935ஆம் ஆண்டிலேயே ‘குடிஅரசு’ பதிப்பகம் வெளியிட்டது!

வள்ளலாரைப் பற்றிப் படிக்கத் தொடங்கிய போது முதலில் என்னை ஈர்த்த செய்தி, 1935ஆம் ஆண்டு, அருட்பா-ஆறாம் திருமுறையிலிருந்து நூறு பாடல்களைத் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவருகின்றன. அதைத் தொகுத்தவர் சாமி. சிதம்பரனார். வெளியிட்டது குடி அரசு பதிப்பகம். இராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு என்னும் பெயரில் தனது குடிஅரசுப் பதிப்பகத்தின் மூன்றாவது வெளியீடாகப் பெரியார் இதனை வெளியிடுகிறார். இக்கருத்துக்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்னும் நோக்கில் குடிஅரசு பத்திரிகையின் சந்தாதாரர்களுக்கு முக்கால் விலைக்கு வழங்கியிருக்கிறார் பெரியார். இது குறித்துக் குடிஅரசு பத்திரிகையில் அவ்வப்போது விளம்பரமும் செய்துள்ளார் பெரியார்.

– பூங்குழலி உரையிலிருந்து

பெரியார் முழக்கம் 05012017 இதழ்

You may also like...