யாருக்குக் கணக்குத் தெரியவில்லை?
தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் சர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்கள் மந்திரி பதவி ஒப்புக்கொண்டதால் நாயுடு அவர்களுக்குக் கணக்கே தெரியவில்லை என்றும், சுயமரியாதை இல்லை என்றும் டில்லியிலிருந்து பத்திரிக்கைகளுக்குச் சேதி விட்டிருக்கிறார். காரணம் என்ன சொல்லுகிறார் என்று பார்த்தால்,
215 மெம்பர்கள் உள்ள சட்ட சபையில் 16 மெம்பர்கள் மாத்திரம் கொண்ட ஜஸ்டிஸ் கட்சியார் மந்திரி பதவி ஏற்றிருக்கிறார்களே, 16ஐ விட மீதி 199 பெரிய எண் என்று தெரிந்திருந்தால் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறார்.
இது அயோக்கியத்தனத்தின் மீது எழுந்த ஆத்திரத்தால் புத்தி மழுங்கிப்போன ஒருவர் குடி வெறியால் பேசுவது போலவே இருக்கிறதே ஒழிய இதில் உண்மையோ யோக்கியமோ ஏதும் சிறிதும் இருப்பதாகக் காணவில்லை.
ஏனெனில் முதலாவது சர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்கள் ஜஸ்டிஸ் பார்ட்டி மெம்பராகவோ “16 பேர்” தெரிந்தெடுக்கப்பட்டிருக்கும் கட்சி சார்பாகவோ (அவர்) மந்திரி சபை அமைக்கவும் இல்லை. மந்திரி பதவி ஏற்றுக்கொள்ளவும் இல்லை. இதை ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் வியக்தமாய் எடுத்து வெளியிட்டிருக்கிறார். அப்படி வெளியிட்ட பிறகும் மந்திரி சபை அமைப்பை இப்போது ஜஸ்டிஸ் கட்சியுடன் சம்மந்தப்படுத்திப் பேசுவது பொது ஜனங்களுக்கு அக்கட்சி மீது வெறுப்பு ஏற்படட்டும் என்கின்ற எண்ணத்தின்மீது பேசப்படும் மிக, மிக, மிக அயோக்கியத்தனமும் விஷமத்தனமுமான செய்கையாகும்.
மற்றும் சர்.கே.வி. ரெட்டி நாயுடுவுக்கு கணக்குத் தெரியவில்லை என்று கூறுவதில் சர்.கே.வி.க்கு கணக்குத் தெரிகிறதோ இல்லையோ என்பது ஒருபுறமிருந்தாலும் தோழர் சத்தியமூர்த்தியார் அவர்களுக்குக் கணக்குத் தெரிந்ததா? அவர் அரிவரி கணக்காவது தெரிந்ததாகக் காட்டிக்கொண்டிருக்கிறாரா? என்று பார்ப்போம்.
அதென்னவென்றால் தோழர் சத்தியமூர்த்தியார் பார்லிமெண்டரி கமிட்டித் தலைவர் என்கின்ற முறையில் ஜனசங்கையில் 100க்கு 3 பேர்களாக இருந்து வரும் பார்ப்பன சமூகத்தில் பிறந்திருக்கிறோம் என்பதற்கு ஆக 100க்கு 97 பேர்களாக உள்ள பார்ப்பனரல்லாத சமூகத்தின் கணக்கை எண்ணிப் பார்க்காமல் 215 சட்டசபை ஸ்தானங்களில் 45 ஸ்தானங்கள நமது தோழர் சத்தியமூர்த்தியார் பார்ப்பனர்களுக்கு வழங்கினாரே அது எப்படி கணக்குத் தெரிந்தா, அல்லது கணக்குத் தெரியாமலா? என்பதை யோசித்தால் மூர்த்தியாரின் கணக்கு ஞானம் ஒரு முட்டாளுக்கும் புலனாகாமல் போகாது.
மூர்த்தியாருக்குத்தான் ஜாதி அபிமானத்தால் கணக்குத் தெரியாமல் போயிருக்கலாம் என்று கருதினாலும் பார்ப்பன சமூகம் ஒட்டுக்குமே கணக்குத் தெரியாமல் போயா 6 பேர் புகவேண்டிய ஸ்தானத்துக்கு 45 பேர் புகுந்து கொண்டார்கள் என்பதைப் பார்த்தால் அச்சமூகம் ஒட்டுக்குமே கணக்குத் தெரியாமல்போனது மாத்திரமல்லாமல் சுயமரியாதையும் கூட அடியோடு அச்சமூகத்துக்கு இல்லாமல் போய் விட்டது என்று தான் முடிவுகட்ட வேண்டி இருக்கிறது.
இதிலிருந்தே இந்நாட்டில் மானம் போனாலும் சரி, மரியாதை போனாலும் சரி, “கற்பு” போனாலும் சரி, தங்கள் சமூக காரியம் ஆனால் போதும் என்கின்ற இழிகுணம் படைத்த சமூகம் எது என்பதை நாம் யாருக்கும் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை என்று நினைக்கிறோம்.
குடி அரசு – கட்டுரை – 04.04.1937