அருப்புக்கோட்டை மகாநாடுகள்

 

ராமனாதபுரம் ஜில்லா அருப்புக்கோட்டையானது சுயமரியாதை இயக்கம் ஆரம்பிக்கப்படும் வரையில் தீவிர காங்கிரஸ் கோட்டையாய் இருந்து வந்தது என்பதோடு, தோழர் ஈ.வெ.ரா. தமிழ்நாடு மாகாணக் காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியாகவும், தலைவராகவும் இருந்த காலத்தில், அவருக்கு வலக்கை போல் இருந்து, அவரது நோக்கப்படி தொண்டாற்றி வந்திருப்பதை இன்றும் காங்கிரஸ் ரிகார்டுகளில் பார்க்கலாம். அப்படிப்பட்ட, அருப்புக்கோட்டை சு.ம. இயக்கம் ஆரம்பமானவுடன், ஒரே கூட்டமாக அதில் சேர்ந்து உழைத்து வருவது யாவரும் அறிந்ததே யாகும்.

இந்த நிலையில் ஜுன் மாதம் 29, 30, ˆ களில் அருப்புக்கோட்டையில் நான்கு மகாநாடுகள் நடந்திருக்கின்றன.

அதாவது தோழர்கள் கு.கு.பழனிச்சாமி அவர்கள் வரவேற்புத் தலைவராகவும், கே.முத்துச்சாமி வல்லத்தரசு, ஆ.அ., ஆ.ஃ., M.ஃ.இ., அவர்களை மகாநாட்டுத் தலைவராகவும் கொண்டு சுயமரியாதை மகாநாடும்,

தோழர்கள் சு.கு. குழந்தைவேல் முதலியார் வரவேற்பு அக்கிராசன ராகவும், விருதுநகர் முனிசிபல் சேர்மென் வி.வி.ராமசாமி அவர்களை மகாநாட்டுத் தலைவராகவும் கொண்டு ஜஸ்டிஸ் மகாநாடும்,

தோழர்கள் ராஜம்மாள் சாது கந்தசாமி அவர்கள் வரவேற்புத் தலைவராகவும், எஸ். நீலாவதி அம்மாளை மகாநாட்டுத் தலைவராகவும் கொண்டு பெண்கள் மகாநாடும்,

தோழர்கள் சு.வீ. சோமசுந்திரம் அவர்களை வரவேற்புத் தலைவராகவும், ப. ஜீவானந்தம் அவர்களை மகாநாட்டுத் தலைவராகவும் கொண்டு தொழிலாளர் மகாநாடும் வெகு சிறப்பாகவும், உற்சாகமாகவும் நடைபெற்றிருக்கின்றன.

“”சுயமரியாதை இயக்கம் அதி தீவிரக் கொள்கை கொண்டு விட்டதாலும், சர்க்காரை விரோதித்துக் கொண்டதாலும் ஒழிந்துபோய் விட்டது” என்று பேசிக் கொண்டிருக்கிறவர்களும் “”அது அரசியலில் நுழைந்ததால் மறைந்துவிட்டது” என்று பேசிக் கொண்டிருக்கிறவர்களும், “”சு.ம. இயக்கம் ஜஸ்டிஸ் கட்சியை தழுவி இருப்பதால் அது வெறும் பணக்காரர் இயக்கமாகி தேய்ந்து வருகிறது” என்று பேசிக் கொண்டிருக்கிற வர்களும் “”அதன் தலைவர் மந்திரிகளோடு அளவளாவிக் கொண்டு மந்திரிகளுக்குள் அய்க்கியமாகி பார்ப்பனரல்லாதார்களுக்கு உத்தியோகம் வாங்கிக் கொடுக்கும் வேலையில் இறங்கி உத்தியோக வேட்டை ஆடிக் கொண்டிருந்ததால் அதன் பெருமை குறைந்து போய்விட்டது” என்று பேசிக் கொண்டு இருக்கிறவர்களும், “”சு.ம. இயக்கம் தீவிரக் கொள்கைகளை விட்டுக் கொடுத்து, சர்க்காருக்கு அடி பணிந்து சர்க்கார் தாசத்துவம் பெற்றுவிட்டதால் 10 கஜ ஆழத்தில் புதைக்கப்பட்டுவிட்டது” என்று சொல்லிக் கொண்டு இருக்கிறவர்களும், சு.ம. இயக்கத்தின் பேரால் பிழைக்கக் கருதி இருந்த சிலரின் சுயநல புத்தியை அறிந்து வெளியாக்கப்பட்டவர் களில் பலர் “”சு.ம. இயக்கமாவது  வெங்காயமாவது, அதெல்லாம் ஒழிந்து வெகுகாலமாகி விட்டது” என்று பேசிக் கொண்டு இயக்கத்திற்கு எதிர்ப்பும், விஷமப் பிரசாரமும் செய்து கொண்டு இருக்கிறவர்களும், ரயில்வே ஸ்டேஷனுக்கு வெகுதூரத்திற்கப்பால் நடந்த அருப்புக் கோட்டை மகாநாடுகளில், ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் தேர் திருவிழாப் போல் ஜனங்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கிழவர்கள், கிறிஸ்தவர்கள், முகம்மதியர்கள் முதலிய கூட்டத்தார்கள் 1000க்கணக்காய் வந்து கூடினதும், இயக்கம் கொள்கை திட்டம் சம்பந்தமான விவாதங்களில் வெகு ஊக்கமாகவும், நுட்பமாகவும் கலந்து பங்கெடுத்துக் கொண்டதும், அவர்களது பாட்டுகளும், பேச்சுகளும், குதூகலங்களும் இயக்கத்தினிடத்தில் காட்டிய பகுத்தறிவோடு கூடியுள்ள பக்தியையும் கண்டிருப்பார்களேயானால், தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்ட முட்டாள்தனத்திற்கு வருந்தியே இருப்பார்கள். அன்றியும், இன்று இயக்கத்தைக் குறை சொல்லிப் பழித்துத் திரிகின்ற ஒவ்வொருவரும், இயக்கத்தின் பேரால் பெருமை பெற்றுப் பிழைத்துத் திரிந்த தங்கள் வாழ்வுதான் போய்விட்டதே தவிர இயக்கத்துக்கு எவ்வித குறையும் ஏற்படவில்லை என்பதையும் நன்றாய் உணருவார்கள். அதாவது, இம்மாதிரிக் கூட்டத்தாருக்கு உதாரணமாக ஒரு கதை சொல்லப்படுவதுண்டு.

அதாவது:

ஒரு காட்டில் திரிந்த நரி, ஒரு நதியில் தண்ணீர் குடிக்க வந்ததில் வெள்ளம் வந்து தண்ணீரில் அந்த நரியை அடித்துக் கொண்டு போனது.

தண்ணீரில் போய்க் கொண்டிருந்த நரி மேலுக்கு வர முடியாமல் வேகமாய்ப் போய்க் கொண்டிருந்ததால் கரையில் இருந்த ஜனங்களைப் பார்த்து, “”ஐயோ உலகம் போச்சுதே! உலகம் போச்சுதே!!” என்று கூப்பாடு போட்டது.

அதைக் கேட்ட வெளியில் கரையில் நின்று கொண்டிருந்த ஜனங்கள், இதன் பேச்சை நம்பி உலகத்துக்கு ஏதோ ஆபத்து வந்துவிட்டதாகக் கருதி வெகுபிரயாசைப்பட்டு நரியைக் காப்பாற்றி கரை சேர்த்து எல்லோரும் கூடி நரியைப் பார்த்து, “”உலகம் போச்சுது, உலகம் போச்சுது என்று கூப்பாடு போட்டாயே உலகத்துக்கு என்ன ஆபத்து வந்து விட்டது” என்று வெகு கவலையாய்க் கேட்டார்கள். அதற்கு அந்த நரியானது, தான் ஓட்டம் பிடிக்க சௌகரியமான வழியைப் பார்த்துக் கொண்டு ஜனங்களைப் பார்த்து, “”ஐயன்மீர்! நீங்கள் எல்லோரும் எவ்வளவோ பாடுபட்டு என்னைக் காப்பாற்றி இருக்கவில்லையானால் எனக்கு இந்த உலக வாழ்வு போய் விட்டிருக்குமல்லவா? நான் செத்துத் தானே இருப்பேன். பிறகு எனக்கு என்ன உண்டு? ஆகையால் எனக்கு உலகம் போச்சுது உலகம் போச்சுது என்று தானே  சொன்னேனே ஒழிய உங்களுக்கு ஒன்றுமில்லை. இந்தப் பெரு வெள்ளத்தால் ÷க்ஷமம் உண்டு” என்று சொல்லிவிட்டு ஓட்டமெடுத்ததாம்.

இந்தக் கதை போல் சிலர் தங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங் களுக்காகவும், சுயநலத்தில் ஏமாற்றமடைந்ததற்காகவும், இயக்கத்துக்கு ஆபத்து ஏற்பட்டு விட்டதாகப் பாசாங்கு செய்து போலி அழுகை அழுது, மக்களை ஏய்ப்பதன் மூலம் நலனடையப் பார்க்கிறார்கள் என்பதும்,  அம்மகாநாட்டைப் பார்த்தவர்களுக்கு நன்றாய் விளங்கி இருக்கும்.

சுயமரியாதை இயக்கம் (போய்விடாது, போகச் செய்ய எவராலும் முடியாது. தோழர் ராமசாமியே ஒழிந்து போனாலும் சரி, எப்படிப்பட்டவர் கரணம் போட்டு யாருடைய தாசனாய் விட்டாலும் சரி, இயக்கமானது ஒரு நாளும் அழியாது, மறையாது, களைத்தும் போகாது.) போய்விட்டது என்றே வைத்துக் கொள்ளுவோம். அதற்காக எவரும் தியாகம் செய்து விடவில்லை; பெருவாரியான நஷ்டமோ, கஷ்டமோ ஏற்பட்டுவிடவும் இல்லை; அதன் இயங்குதலில்  அதன் பரவுதலில், அது யாருடைய தயவையும் பெற்று இருக்கவுமில்லை.

அது யாருக்கும் எவ்வித வாக்குத் தத்தமும் செய்து எவரிடமும் எவ்வித அட்வான்சோ, சன்மானமோ, தயவோ, தியாகமோ, பெற்றோ எதிர் பார்த்தோ இருந்ததுமில்லை. ஆகையால் அதற்காக எவரும் கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லாத நிலையிலும் அது சில கொள்கையைக் கொண்டு, சில திட்டங்களை வகுத்துத் தன் இஷ்டப்படி சென்று கொண்டு இருக்கிறதாகவும், அதை ஏற்றுப் பின் வருபவர்களை உயிருக்குயிராய் மதிக்கிறதும், மற்றவர்களை உன்னால் முடிந்ததைப் பார் அதைப் பற்றி நமக்கு கவலை இல்லை என்கின்றதுமானதானாய் போய்க் கொண்டிருக்கிற நிலையில்தா னிருந்து வருகின்றதென்பதும் விளங்கும்.

ஆகவே அது ஒழிந்துவிடும் என்று கவலைப்படுவதும், ஒழிந்து விட்டதே என்று துக்கப்படுவதும் வடிகட்டின பயித்தியக்காரத்தனமேயாகும் என்பதையும் கூட்டம் நன்றாய் விளக்கிக் காட்டிற்று என்றும் சொல்லலாம்.

எனவே அருப்புக்கோட்டை மகாநாடுகள் ஒவ்வொரு முக்கிய பிரச்சினைக்கும் ஒவ்வொரு மகாநாடாகவும், பொதுப் பிரச்சினைக்காக சு.ம. மகாநாடாகவும் ஆக 4 மகாநாடுகள் நடந்தது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

வரவேற்புத் தலைவர்கள் உபன்யாசங்களும், மகாநாட்டுத் தலைவர்கள் உபன்யாசங்களும், தீர்மானங்களும், தீர்மானத்தின்மீது பேசிய பேச்சுகளும் கல்லும் விளங்கிக் கொள்ளும் மாதிரியில் மிகத் தெளிவாகவும், அரிய கருத்துகள் அடங்கியதாகவும் இருந்தன.

குறிப்பாக தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள் தொழிலாளர் மகாநாட்டுக்குத் தலைமை வகித்து நிகழ்த்திய சொற்பெருக்கானது பொது ஜனங்களுக்கு புதிய ஒரு எழுச்சியை உண்டாக்கிற்று என்று சொல்லலாம்.

முடிவாக  ஏதோ சில காரணங்களால், சரியாகவோ, தப்பாகவோ தோழர் ஈ.வெ.ராமசாமி சிறையில் இருக்கும்போது, நிர்வாக சபையார் பொது மகாநாடுகள் கூட்டக் கூடாது என்று உத்திரவு போட்டிருந்தாலும், மறுபடியும் அவர்களது ஆ÷க்ஷபனை இல்லாமலேயே இப்போது ஆங்காங்கு மகாநாடுகள் நடக்க ஏற்பாடாகி வருவதும், மக்கள் முன் போலவே உற்சாகமாய் மகாநாடுகளில் கலந்து கொள்வதும், அதன் மூலம்  பெரும் பிரசாரங்கள் நடப்பதும், இயக்கத்தில் பற்றுக் கொண்டவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியையே உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அன்றியும் தோழர்கள் சௌந்திரபாண்டியன், ங.ங. ராமசாமி முதலியவர்கள் இயக்க விஷயத்தில் முன்போலவே ஊக்கமெடுத்து, முன்னிலும் அதிகமாய்ப் பிரசாரம் முதலியவைகள் செய்ய வேண்டுமென்று முன் வந்து, மக்களுக்கு ஊக்கத்தை உண்டாக்கி வரும் விஷயமும் மிகுதியும் மகிழ்ச்சிக்கு உரியது என்பதும் நாம் விளக்க வேண்டியதில்லை.

குடி அரசு  தலையங்கம்  07.07.1935

You may also like...