காங்கிரஸின் பிரசார வெற்றி

 

“தினசரி’ அவசியம்

இன்றைய அரசியல் கொள்கைகளின் மேன்மையும், கீழ்மையும், கட்சிகளின் பெருமையும் சிறுமையும் அவற்றின் வெற்றியும் தோல்வியும் எல்லாம் பிரசாரத்தின் பலத்தைப் பொறுத்திருக்கிறதே அல்லாமல் அதனதன் உண்மைத் தன்மையைப் பொறுத்ததாக இல்லை. இதைப் பற்றி இதற்கு முன் பல தடவை எடுத்துக் காட்டி வந்திருக்கிறோம்.

இன்று நம் தென்னாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எனப்பட்ட காங்கிரஸ் கட்சியும், ஜஸ்டிஸ் கட்சியும் பெயரளவில்தான் அரசியல் கொள்கைகளை குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றன என்று சொல்லக் கூடியனவாயிருக்கின்றனவே தவிர காரியத்தில் அவை பெரிதும் சமூக முன்னேற்றமான கொள்கைகளையே குறிக்கோளாகக் கொண்டு இருந்து வருகின்றன. இதற்கு  ஆதாரம் வேண்டுமென்போர் அதிக தூரம் கஷ்டப்பட்டுத் தேடிப் பார்க்க வேண்டியதில்லை. சுலபத்திலேயே உணர்ந்து கொள்ளலாம். எப்படியெனில் இரண்டு கட்சிக்கும், அதாவது காங்கிரஸ்  ஜஸ்டிஸ் என்கின்ற இரண்டு கட்சிக்கும் அரசியல் கொள்கைகளில் உள்ள வித்தியாசம் என்ன என்பதைக் கவனித்தாலே தெரிய வரும்.

இன்று காங்கிரஸ்காரர்கள் கேட்கும் “”சுயராஜ்ய”த்திற்கும் ஜஸ்டிஸ்காரர் கேட்கும் “”சுயராஜ்ய”த்திற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கின்றது என்ற யாராலாவது சொல்ல முடியுமா?

அன்னிய ஆட்சியையோ வெள்ளையர் ஆட்சியையோ விரட்டி அடிப்பதுதான் தங்கள் கொள்கை என்று இன்று யாரும் சொல்லுவதே கிடையாது. அரசாங்கத்தோடு ஒத்துழைப்பதில்லை என்றோ, அரசியல் பதவிகளை ஏற்றுக் கொள்வதில்லை என்றோ, அரசாங்கத்தினிடமும் அரசரிடமும் பக்தியாயும் விஸ்வாசமாயும் இருப்பதில்லை என்றோ, சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதில்லை என்றோ இரு கட்சியாரும் இன்று சொல்லுவதில்லை.

காங்கிரஸ்  பொன்விழாவில்  பீஷ்மப்  பட்டம்  சூட்டப்பட்ட  சி. விஜயராகவாச்சாரியாரே அது சமயம் பிரிட்டிஷ் சம்மந்தமுள்ள சுயராஜ்யம் தான் வேண்டுமென்றும் சட்டமறுப்புக் கிளர்ச்சி அராஜகத்தில் கொண்டு வந்து விட்டுவிட்டது என்றும் சொல்லிவிட்டார்.

1936 ம் வருடக் கடைசி அல்லது 1937ம் வருட ஆரம்பத்தில் வரப்போகும் அரசியல் சீர்திருத்தங்களை ஏற்று அரசியலை நடத்துவதில்லை என்றோ அதன் பதவிகளை ஒப்புக் கொள்ளுவதில்லை என்றோ, சீர்திருத்தத்தை உடைத்துச் சின்னாபின்னப்படுத்துவதாகவோ யாரும் சொல்லுவதில்லை.

சட்டசபைக்குப் போவதும் ஸ்தல ஸ்தாபனங்களைக் கைப்பற்றுவதும் ராஜபக்தி பிரமாணம் செய்வதும் மந்திரி பதவி ஏற்பதுவுமான காரியங்களில் இரு கட்சிகளினுடைய ஆசையிலும் முயற்சிகளிலும் எதுவும் ஒரு சிறிதும் குறைந்ததாக இல்லவே இல்லை.

ஆனால் ஜஸ்டிஸ் கட்சி ஆதிக்கத்திற்கு வந்தால் உத்தியோகங் களிலும், பதவிகளிலும், பிரதிநிதித்துவத்திலும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கைப்படி வினியோகம் ஏற்பட முயற்சிக்கும் என்கின்றதான ஒன்றில் தான் காங்கிரஸ் கொள்கையிலிருந்து மாறுபட்டிருக்கிறது.

அதுபோலவே காங்கிரஸ் கட்சியும் ஆதிக்கத்துக்கு வந்தால் ஜாதிப் பிரிவும், வருணாச்சிரம முறையும் காக்கப்படும் என்கின்றதான ஒன்றில்தான் ஜஸ்டிஸ் கொள்கையில் இருந்து மாறுபட்டிருக்கிறது.

எனவே இவ்விரண்டு கட்சிகளும் மேற்படி இரண்டு கொள்கைகளான சமுதாய சம்மந்தமான கொள்கைகளில்தான் வேறுபட்டு வித்தியாசப் பட்டிருக்கின்றனவே ஒழிய மற்றபடி அரசியலில் எவ்வித சிறிய மாறுதலும் கொண்டிருக்கவில்லை.

ஆனால் பாமர மக்களின் உள்ளத்தில் ஜஸ்டிஸ் கட்சி பெரியதொரு பிற்போக்கான கட்சியென்றும், தேசாபிமானமற்ற கட்சி என்றும், அரசாங்கத்தோடு ஒத்துழைக்கும் கட்சி என்றும் பதியச் செய்யப்பட்டிருக்கிறது.

அதுபோலவே காங்கிரஸ் கட்சியானது முற்போக்கான கட்சியென்றும், தேசாபிமான கட்சியென்றும், அரசாங்கத்தை ஒழிப்பதற்கு ஏற்பட்ட கட்சி யென்றும் பதியச் செய்யப்பட்டிருக்கிறது.

நம் நாட்டுப் பாமர மக்களுக்கு முற்போக்கு எது பிற்போக்கு எது என்பதும், தேசாபிமானம் எது, தேசத் துரோகம் எது என்பதும், அரசாங்கத்தோடு ஒத்துழைப்பது என்பது எது, அரசாங்கத்தை ஒழிப்பது என்பது எது என்பதுமாகிய காரியங்கள் இன்னது என்றே தெரியாது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஏனெனில் அவர்களுக்கு கல்வி அறிவும் பகுத்தறிவும் எவ்வளவு தூரம் ஏற்படும்படி நாம் செய்து வந்திருக்கிறோம் என்பதை உணர்ந்தாலே உண்மை விளங்கிவிடும்.

மத சம்பந்தத்திலும், சமுதாய சம்பந்தமான பழக்க வழக்கங்களிலும் அவர்கள் எவ்வளவு மூட நம்பிக்கையில் ஆழ்த்தப்பட்டிருக்கிறார்களோ அவ்வளவே தான் அல்லது அந்த அறிவே தான் அவர்களுக்கு அரசியல் தத்துவங்களிலும் இருக்க முடிகிறதே தவிர அதிலிருந்து மாறுபடத் தகுந்த சுயேச்சை அறிவு ஏதும் அவர்களிடத்து இல்லை.

அன்றியும் இது விஷயமாக நடந்து வரும் பிரசாரமும், மற்ற பிரசார சவுகரியமும் காங்கிரசுக்காரர்களுக்கே அதிகமாய் இருப்பதால் காங்கிரசு காரர்களின் இஷ்டம் நிறைவேறுவதற்கு வசதி ஏற்பட்டு விடுகின்றது.

காங்கிரசுகாரருக்கு உள்ள சவுகரியங்களில் முக்கியமானது பத்திரிகை சவுகரியமாகும். இரண்டாவது பண சவுகரியமாகும். மூன்றாவது மக்களுக்குள் இருந்து வரும் வேலை இல்லாத் திண்டாட்டத்தை உபயோகித்துக் கொள்ளுவதற்கு ஏற்ற வசதிகளாகும்.

நான்காவது அவர்கள் (காங்கிரஸ்காரர்கள்) இந்த 15 வருஷ காலமாக எவ்வித பொறுப்புள்ள பதவியும் வகிக்க முடியாமல் போனதின் பயனால் பொது ஜனங்கள் இவர்களுடைய ஆட்சி முறை யோக்கியதையை உணர மார்க்கமில்லாமல் போனதும் ஜனங்களுக்கு இவர்கள் எவ்வித ஜவாப்புதாரித் தனத்துக்கும் அருகர்களாயில்லாமலிருந்தது முதலியவையாகும்.

ஆனால் ஜஸ்டிஸ் கட்சிக்கு பொறுப்பு இருக்கிறது. காங்கிரசைப் போல் பத்திரிகைகள் இல்லை. காங்கிரசுக்கு 100 பத்திரிகை இருந்தால் ஜஸ்டிஸ் கட்சிக்கு 5 பத்திரிகைகூட இல்லை.

காங்கிரசுக்கு ஆங்கிலத்தில் மெயில் உள்பட 3 தினசரி பத்திரிகைகளும் தமிழில் ஐந்து தினசரி பத்திரிகைகளும், தெலுங்கிலும், மலையாளத்திலும், கன்னடத்திலும் 10 தினசரிகளும் 5000, 10000, 15000 என்கின்ற கணக்கில் பிரதிகளையுடையனவாகவும் இருக்கின்றன.

வாரப் பத்திரிகைகள், மாதப் பத்திரிகைகள் முதலியனவும், அதுபோலவே ஆங்கிலத்திலும், தமிழிலும் 40, 50 என்கின்ற கணக்கில் 5000, 10000 கணக்கில் பிரதிகள் வெளியாகும்படியாக இருந்து வருகின்றன.

அதோடு மதங்களைக் காப்பாற்ற குறிகள், உற்சவங்கள், விரதங்கள், சடங்குகள், ஸ்மார்த்தங்கள் முதலியவை இருப்பது போன்று காங்கிரசின் விளம்பரத்துக்குக் காங்கிரசு கான்பரன்சு, தேசீய வாரம், தேசீய சுகாதார வாரம், தேசீய கண்காட்சி, கதர் காட்சி, சுதேசியம், தேசீயக் கொடி, பொன்விழா, தலைவர் வருகை, தலைவருக்குப் பண முடிப்பு, கொடியேற்றம், தேசீய பஜனை, ஊர்வலம் முதலியவையும், அவை போன்ற பல காரியங்களும் பாமர மக்களுக்கு சதா இடையறாத காங்கிரஸ் பக்தியும், அபிமானமும் ஏற்படும்படி செய்து வருகிறதுடன் பொருளாதாரமும் எப்படி எப்படியோ போதிய அளவுக்கும் காங்கிரசின் பேரால் 1000க்கணக்கான பேர் வாழ்வதற்கும் போதுமானபடி அவ்வப்போது எப்படி எப்படியோ சம்பாதிக்கப்பட்டு வருகிறது. பார்ப்பனரல்லாதாரில் போதிய பதவி இல்லாத காரணத்தால் பதவி இழந்தவர்களும், பதவி போட்டியில் தோற்றவர்களும், எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தவர்களும் இயற்கையாகவே பார்ப்பனர் களோடு ஒன்று சேருவதன் மூலம் ஆள் பலமும் எப்படி எப்படியோ சேர்ந்துவிடுகிறது.

இத்தியாதி காரணங்களால் காங்கிரஸ் உள்ளுக்குள்ளாக எவ்வளவு தான் வகுப்புவாதக் கொள்கையை உடையதாய் இருந்தாலும், எவ்வளவுதான் அரசியலில் பிற்போக்கானதாக இருந்தாலும் உண்மையிலும், ஒழுக்கத்திலும், நாணயத்திலும் சிறிதும் பற்றில்லாததாய் இருந்தாலும் எல்லாம் மறைபட்டுப் பாமர மக்களை ஏமாற்றி வெற்றி அடையத்தக்கதாக ஆகி வருகிறது.

உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டுமானால் காங்கிரசானது சமூக சம்பந்தமாக முற்போக்குள்ள ஒவ்வொரு பிரச்சினையிலும் முட்டுக் கட்டையாகவே இருந்து வந்திருக்கிறது.

உதாரணமாக சாரதா சட்டம், தீண்டாமை விலக்கு சட்டம், தேவஸ்தான சட்டம், பொட்டுக் கட்டுதல் ஒழிப்பு சட்டம், விபசாரிகள் ஒழிப்புச் சட்டம், இனாம்தார் ஒழிப்பு சட்டம் முதலாகிய சட்டங்கள் ஏற்படுத்துவதிலெல்லாம் காங்கிசுக்காரர்கள் முட்டுக்கட்டையாகவே இருந்து வந்திருக்கிறார்கள்.

அப்படியெல்லாம் இருந்தும் காங்கிரஸ்காரர்கள் தங்களது பத்திரிகைகளின் பிரசார பலத்தால் தேசாபிமானிகள், முற்போக்காளர்கள், தேசீயவாதிகள் என்கின்ற பெயரை பாமர மக்களிடமிருந்து அடைந்து வருகிறார்கள்.

ஆதலால் ஜஸ்டிஸ் கட்சி இனி காங்கிரஸ் பிரசாரத்திற்கு ஈடு கொடுக்கும்படியாக தங்களது பிரசாரத்தையும் தகுந்த அளவுக்கு தொடங்காவிட்டால் காங்கிரசுடன் போட்டி போட்டு சமாளிக்க முடியாமல் போய்விடும் என்பதில் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை.

காங்கிரஸ் பிரசாரத்தைக் கண்டு பயந்து நடுங்கி அனேக ஜஸ்டிஸ் காரர்கள் ஜஸ்டிஸ் கட்சிக்கு புற முதுகைக் காட்டிவிட்டு காங்கிரசிற்கு ஓடோடிப் போய் அதில் சேர்ந்து வருகிறார்கள்.

விளம்பரமில்லாத சரக்கு எவ்வளவு நல்லதாயிருந்தாலும் விற்பனை இல்லாமல் போவது அதிசயமல்ல.

இவ்விஷயங்களை நாம் பல தடவை எடுத்துக் காட்டியும் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் தகுந்தபடி செவி கொடுத்ததாகத் தெரியவில்லை. ஆகையால் பார்ப்பனரல்லாத சமூக நலத்தில் கவலையுள்ளவர்கள் சிலராவது சேர்ந்து இதற்கு ஏதாவது ஒரு வழி செய்து தீர வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டதென்றே கருதுகின்றோம்.

என்னவென்றால் காங்கிரஸ் பத்திரிகைகளின் விஷமப் பிரசாரங்களுக்கு பதில் சொல்ல நம்மிடம் இருக்கும் வாரப் பத்திரிகைகளுக்குப் போதிய சவுகரியமில்லை.

எப்படி எனில் 4, 5 காங்கிரஸ் தமிழ் தினசரிகளும் ஆளுக்கொரு குற்றத்தை தினமும் சுமத்தி வந்தால் நமது வாரப் பத்திரிகைகள் வாரத்திற்கொரு முறை ஏதோ ஒன்று இரண்டிற்குத்தான் பதில் சொல்ல முடிகின்றது. அதற்குள் மற்ற குற்றச்சாட்டும் விஷமப் பிரசாரமும் ஜீரணமாகிறதுடன் ரத்தத்தில் கலந்து விடுகின்றன.

5 பத்திரிகைகள் 6 நாள்களுக்கு 6 # 5 = 30 குற்றச்சாட்டுகளுக்கும் விஷமப் பிரசாரத்துக்கும் ஒரு நாளில் எவ்வளவு மறுப்பும் சமாதானமும் சொல்ல முடியும் என்பதை  யோசித்தால் அதனால் ஏற்படும் கெடுதி எவ்வளவு என்பது யாருக்கும் விளங்காமல் போகாது.

இவற்றிற்கெல்லாம் ஈடுகொடுக்கும்படியான முயற்சியும் பிரசாரமும் இல்லாமல் நம் கொள்கைகளின் மேன்மையையும், அதனால் ஏற்பட வேண்டிய நல்ல பயனையும் மாத்திரம் கருதிக் கொண்டு சும்மா இருந்தால் நாம் எப்படிவெற்றி பெறக் கூடும் என்பதை யாவரும்  யோசித்துப் பார்க்க வேண்டியது அவசியமாகும்.

காங்கிரசில் எவ்வளவுதான் புரட்டும், பித்தலாட்டமும், கூடாத காரியங்களும் இருந்து வந்த போதிலும் எவ்வளவுதான் அது வெறுக்கப்பட வேண்டியதும், அழிக்கப்பட வேண்டியதுமானாலும் முயற்சி பலனை அளிக்கும் என்பதற்கு காங்கிரசை ஒரு உதாரணமாகக் கொள்ளாமல் இருக்க முடியாது.

எவ்வளவு இருந்த போதிலும் இன்று நம் கொள்கையிலும் நமது வெகு சிறு முயற்சியிலும் நமக்குள்ள தைரியமெல்லாம் காங்கிரசு வெற்றி பெறாது என்பதேயல்ல. மற்றென்ன வென்றால் காங்கிரஸ் எவ்வளவுதான் வெற்றி பெற்றாலும் அதன் மூலம் பழயபடி பார்ப்பனர்கள் ஆதிக்கத்துக்கு வர முடியாது என்பதும்,

அவர்களது வெற்றியெல்லாம் நமக்கு பல வழிகளில் தொல்லை கொடுக்கக்கூடியதாகுமே தவிர அவர்களுக்கு (பார்ப்பனர்களுக்கு) யாதொரு பயனையும் கொடுக்க முடியாது என்கின்ற தைரியமுமேயாகும்.

இதுவரை இந்த 10 வருஷ காலமாய் பார்ப்பனர்கள் முயற்சி பாமர மக்களின் மனதில் விஷத்தை செலுத்தி இருக்கிறது என்பதொன்று மாத்திரமல்லாமல், பார்ப்பன ஆதிக்கத்துக்கு அது ஒரு சிறு நன்மையும் அளிக்கவில்லை என்பதை புள்ளி விவரங்களோடு எடுத்துக் காட்டுவோம்.

உதாரணம் வேண்டுமானால் திருநெல்வேலி ஜில்லா போர்டில் “”31 காங்கிரஸ்காரர்கள் ஜெயித்து” வந்தும் 32வதாக ஒரு ஜஸ்டிஸ்காரரைப் பிடித்துத் தலைவராக்கி, 32 ஐ 26 ஆகச் செய்து கொண்டதுடன், போர்டு நிர்வாகம் ஊழலாகி கட்சி சண்டை வலுத்து பழயபடி ஜஸ்டிஸ் போர்டாக ஆகப் போகின்றது என்பது ஒன்றே போதுமானதாகும்.

பழய உதாரணம் வேண்டுமானாலும் ஒன்று கூறுகிறோம். 1926ல் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றும், காங்கிரசினால் மந்திரிசபை அமைக்கக் கூடிய நிலைமை ஏற்பட்டும், அந்தப்படியே காங்கிரஸ் மந்திரி சபை அமைத்து ஆதரித்து வந்தும் ஒரே வருஷத்தில அது ஜஸ்டிஸ் மந்திரி சபையாகி “”10 வருஷ காலமாக அசல் ஜஸ்டிஸ் மந்திரிகள் செய்து முடிக்க முடியாத காரியத்தை இந்த மந்திரி சபை செய்துவிட்டது” என்று சுதேசமித்திரன் ஒப்பாரி வைத்து அழுகும்படியான காரியத்தை (வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையை) செய்து விட்டது.

ஆகையால் சுயமரியாதை இயக்கம் உள்ள வரை காங்கிரசுக்கு வெற்றி ஏற்படாது என்பதோடு பெயரளவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுவிட்டது என்கின்ற கூப்பாட்டைக் கண்டு யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும் தைரியமாய்க் கூறுவோம்.

ஆனாலும் நமக்கு வெற்றி ஏற்பட வேண்டுமானால் இன்னும் அதிகமான பத்திரிகைப் பிரசாரம் இருந்தே ஆக வேண்டும்.

எனவே பல தோழர்களின் அறிவுறுத்தலுக்கும் சில நிர்பந்தங் களுக்கும் ஆளாகி சமீபத்தில் ஒரு தினசரி காலணாப் பத்திரிகை ஒன்று ஏற்படுத்தித் தீர வேண்டியது அவசியமாகி விட்டது.

இதற்கு முன் பல தடவை இதைப் பற்றி ஆலோசித்து நடத்துவது என்கின்ற முடிவுக்கு வந்து வந்து அதிலுள்ள கஷ்டங்களை நினைத்து பயந்து பயந்து அம்முடிவைக் கைவிட வேண்டியதாயிற்று. கடைசியாக 4, 5 மாதங்களுக்கு முன் கூட தினசரிக்காக எல்லா ஏற்பாடுகளும் செய்த பிறகு விடுதலை என்கின்ற பத்திரிகையை வாரம் இருமுறையாக துவக்கப் போவதாகவும் சமீபத்தில் தினசரியாக ஆக்கப் போவதாகவும் தெரிய வந்ததால் அவ்வெண்ணம் கைவிடப்பட்டது.

இப்போது சமீபத்தில் விடுதலை தினசரி ஆகும் என்கின்ற நம்பிக்கைக்கு இடமில்லாமல் இருப்பதால், ஒரு காலணா தினசரியை ஆரம்பிக்க உத்தேசித்து அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் பயனாய் இன்னும் அதிகமான கஷ்டத்துக்கும் நஷ்டத்துக்கும் நாம் ஆள் ஆக வேண்டி வரும் என்பது தெரிந்திருந்தாலும் வேறு வழி இல்லாததால் அதில் ஈடுபட வேண்டி இருக்கிறது.

அதற்கு வேண்டிய ஆதரவு தமிழ் மக்களிடையே இருக்குமென்று நம்பியே அவ்வேலையில் ஈடுபடுகின்றோம்.

குடி அரசு  தலையங்கம்  29.12.1935

 

You may also like...