“விடுதலை’ ஏடு வெளிவரத் தொடங்கியது

 

“”வாழ்துக்களையும், புது வருடப் பிறப்புக் கொண்டாட்டங்களையும் பலவித மூடப் பழக்க வழக்கங்களில் ஒன்றாகத்தான் கருத வேண்டுமே யொழிய மற்றபடி இதில் எவ்வித பிரயோஜனமும் இல்லை. ஆதலால் இதை நாம் கொண்டாடவில்லை என்பதோடு புது வருடப் பிறப்புக்காக நாம் யாரையும் வாழ்த்தவும் போவதில்லை”

என்று புத்தாண்டு வாழ்த்து மறுப்புடன் இத்தொகுதி தொடங்குகிறது.  6.1.1935 “பகுத்தறிவு’ வார ஏட்டில் தான் முதன்முதலாக தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் அறிமுகமாகிறது. இடையில் ஓராண்டு காலம் நிறுத்தப்பட்டிருந்த “குடி அரசு’ மீண்டும், 13.1.1935 முதல் பயணத்தைத் தொடருகிறது. “குடி அரசு’க்கு இது 11 ஆவது வருடம். வார ஏடான “பகுத்தறிவு’ நிறுத்தப்பட்டு, அறிவியல் பரப்பிடும் மாத ஏடாக மே மாதம் முதல் தேதியிலிருந்து வெளிவரத் தொடங்கியது. இக்காலப் பகுதியில் “பகுத்தறிவு’ வெளியிட்ட இலக்கியச் செறிவுள்ள எட்டு “படைப்புகள்’ இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

சமதர்மத்தை வலியுறுத்தியும், பொருளாதாரம் பற்றியும் பெரியார் பல தலையங்கங்களைத் தீட்டியுள்ளார். விருதுநகரில் கூடிய நீதிக்கட்சியின் மாநாடு, பெரியார் முன் வைத்த சமதர்ம  பொருளாதாரத் திட்டங்களை தீர்மானங்களாக ஏற்றது. பகத்சிங் எழுதிய “”நான் ஏன் நாத்திகன் ஆனேன்?” நூலை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டதற்காக தோழர் ஜீவானந்தம் மற்றும் “உண்மை விளக்கம் பிரஸ்’ பதிப்பாசிரியர் தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி ஆகியோர் மீது “ராஜ துவேஷ’ வழக்கு  தொடர்ந்து, கைது செய்து, பிரிட்டிஷ் ஆட்சி சிறையில் அடைத்தது. பின்னர் அந்த வழக்கில் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். இருவரும் மன்னிப்புக் கோரியே விடுதலைப் பெற்றனர்; அது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு பெரியார் விளக்கமளித்தார்.

“”இந்தப்படி இரு தோழர்களும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடுதலையடைந்தார்கள் என்பதற்கு அவர்களே முழு ஜவாப்தாரிகள் அல்ல என்பதையும் பெரும்பான்மையான அளவுக்கு நானே ஜவாப்தாரி என்பதையும் முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன்” என்று எழுதிய பெரியார், இப்படி ஒரு முடிவு எடுத்தமைக்கு, “”இந்த வழக்கு மட்டுமே காரணமல்ல; சுயமரியாதை இயக்கத்தை அழித்துவிட தொடங்கப்பட்ட முயற்சிகளிலிருந்து இயக்கத்தைக் காப்பாற்றுவதற்கே” என்று விளக்கமளித்தார்.

“”சர்க்கார் எனக்கு ரஷ்யாவிலிருந்து பணம் வருவதாகவும், நான் ரஷ்ய ஒற்றனென்றும் சந்தேகப்பட்டு, அதிக கவலை எடுத்து, எனக்காக தனியாக ஒரு சுருக்கெழுத்து சி.அய்.டி. சப் இன்ஸ்பெக்டர் மாதம் 200 ரூபாய் செலவிலும், எனது தபால்களையெல்லாம், வருவதையும், போவதையும் இரகசியமாய் உடைத்துப் பார்ப்பதற்கென்று ஒரு சி.அய்.டி. சப் இன்ஸ்பெக்டரும், என் வீட்டு வாசலிலும், ஆபீசு வாசலிலும், போலீஸ் சேவகர்களும் நான் செல்லுமிடங்களிலெல்லாம் என் பின் தொடர்ந்து, எனது போக்குவரத்தை கவனிக்க சில போலீஸ் கான்ஸ்டபிள்கள் பின் தொடரவும் நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலம் சில அறிக்கை இடும் காரியங்கள் நடந்து கொண்டே இருந்தன  இன்னமும் இருந்து வருகின்றன” என்று அரசின் அடக்குமுறைகளை சுட்டிக்காட்டினார். அது மட்டுமல்ல; “”பாதிரிகளின் பிரமச்சரிய லக்ஷணம்” என்ற “குடி அரசு’ உண்மை விளக்கம் பிரசில் பதிப்பிக்கப்பட்ட 1550 நூல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட “குடி அரசுக் கலம்பகம்’ என்ற நூலையும், பிரிட்டிஷ் ஆட்சி பறி முதல் செய்தது. ஆட்சி பறிமுதல் செய்யும் நான்காவது நூல் இது என்று “குடி அரசு’ சுட்டிக் காட்டியது. பிரிட்டிஷ் ஆட்சியின் அடக்குமுறைகளை எதிர்கொண்டே சுயமரியாதை இயக்கம் இயங்கியதை இந்த உண்மைகள் உணர்த்தி நிற்கின்றன.

லண்டன் வட்டமேஜை மாநாட்டில்  “தீண்டப்படாதார் தனித்தொகுதி உரிமைகளை முறியடிக்க காந்தியும், காங்கிரசும் நடத்திய சூழ்ச்சிகளை வெளிப்படுத்தும் பெரியாரின் எழுத்துக்களும், பேச்சுக்களும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. “சேலம் ஜில்லா பள்ளர் சமூக மாநாட்டில்’ பேசிய பெரியார்

“”நான் அய்ரோப்பாவிலிருந்து தோழர் அம்பேத்காருக்கு 6, 7 கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிரானது காந்தியாரின் உயிரைவிடக் கேவலமானதல்ல; காட்டுமிராண்டித்தனமான பூச்சாண்டிகட்குப் பயந்து சமூகத்தைக் கொலை செய்து விடாதீர்கள் என்று தந்தி கொடுத்திருந்தேன். அதை வாங்கிப் பார்த்துக் கொண்டே மகாத்மாவின் “பொக்கவாய்ச் சிரிப்பில்’ மயங்கியும், மாளவியாஜி ராஜகோபாலாச்சாரியார்ஜி போன்ற பிரகஸ்பதிகளின் ஆசீர்வாதத்துக்கு ஏமாந்தும், கையெழுத்துப் போட்டதும் உங்கள் விடுதலையை பாழாக்கிவிட்டது. கைக்கெட்டியது வாய்க் கெட்டவில்லை” என்று குறிப்பிடுகிறார்.

வட்டமேஜை மாநாட்டில் என்ன நடந்தது? என்ற கேள்வியை எழுப்பி பெரியார் கோபி சமூக சீர்திருத்த கூட்டத்தில் இவ்வாறு பேசினார்@

“”முகமதியர்கள் இந்து ராஜ்யத்தைவிட பிரிட்டிஷார் ராஜ்ஜியம் மேல் என்றார்கள்.

இந்துக்கள், முகமதியர் ராஜ்ஜியத்தைவிட, பிரிட்டிஷார் ராஜ்ஜியமே மேல் என்றார்கள்.

பார்ப்பனரல்லாதார் (ஜஸ்டிஸ் கட்சியார்) பார்ப்பன ராஜ்ஜியத்தைவிட, பிரிட்டிஷ் ராஜ்ஜியமே மேல் என்றார்கள்.

பார்ப்பனர் (காங்கிரஸ்காரர்கள்), பார்ப்பனரல்லாதார் (ஜஸ்டிஸ்) ஆட்சியைவிட பிரிட்டிஷ் ஆட்சியே மேல் என்றார்கள்.

காந்தியார், தீண்டப்படாதார் ஆட்சியை விட பிரிட்டிஷ் ஆட்சியே மேல் என்பதாக சொல்லிவிட்டார்.

அதாவது, சுயராஜ்யம் இல்லாவிட்டாலும் சரி, சீர்திருத்தம் இல்லா விட்டாலும் சரி தீண்டப்படாதவர்களுக்கு வகுப்புரிமை வழங்க முடியாது என்று சொன்னது மாத்திரமல்லாமல் உயிரைக் கூட விட்டு விடுவேன் என்று சொன்னார்”

இப்படி ஆயிரக்கணக்கான வருடங்களாக “இந்து’ தேசாந்திரத்தில் வகுப்புக்கு வகுப்பு விரோதமும், கலகமும் நடந்து கொண்டு வந்திருக்கிறது என்று கூறிய பெரியார், வகுப்புவாரி உரிமைகள் வழங்கப்படுவதுதான் இதற்கு தீர்வு என்று தனது கருத்துக்கு அழுத்தமான நியாயங்களை முன் வைத்தார்.

கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து நீக்கி வைக்கப்பட்ட தோழர் நாட்டுக்கோட்டை முத்தையா செட்டியார், ராஜகோபாலாச்சாரி மற்றும் பார்ப்பனர்களின் ரகசிய ஆலோசனைகளோடு  பொப்பலிராஜா தலைமையில் அமைந்திருந்த ஜஸ்டிஸ் கட்சி அமைச்சரவைக்கு எதிராக ரூ.70,000 செலவு செய்து நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து தோல்வி அடைந்தார். முத்தையா செட்டியாரின் இந்த துரோகத்தைக் கடுமையாக சாடி, பெரியார் எழுதிய தலையங்கம், இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. அதே பெரியார் நீதிக்கட்சியை வலிமைப்படுத்த ஏற்பாடான விருதுநகர் மாநாடு பற்றி எழுதும் போது

“”டாக்டர் சுப்பராயன், குமாரராஜா, முத்தையா செட்டியார் போன்ற கட்சியிலிருந்து பிரிந்து நின்று கட்சிக்குத் தொல்லைக் கொடுத்துவரும் கனவான்களையும் உள்ளே இழுத்துப் போட்டுப் பார்ப்பனர் அல்லாதாரிடையில் மதிக்கத் தகுந்த பிரிவினையில்லை; கட்சி பேதம் இல்லை என்பதான ஒரு நிலையையும் மாநாட்டில் ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்”  என்று எழுதியிருப்பது  பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் அவசியம் குறித்த பெரியாரின் கவலையை உணர்த்துகிறது. அதே நேரத்தில், ஜஸ்டிஸ் கட்சியின் குறைபாடுகளை ஒளிவுமறைவின்றி எடுத்துரைக்கவும் பெரியார் தயங்கவில்லை என்பதை, இத் தொகுதியில் அடங்கியுள்ள அவரது எழுத்து, பேச்சுகளிலிருந்து புரிந்து கொள்ள முடியும். ஆதி திராவிடர்களுக்கான உரிமைகளை வழங்குவதில், நீதிக்கட்சி ஆட்சி கூட உரிய கவனம் செலுத்தி செயல்படவில்லை என்ற விமர்சனத்தையும் தயங்காமல் பெரியார் முன் வைத்துள்ளார்.

ஜாதி ஒழிய வேண்டும் என்று சொல்லுகிறவன், ஜாதி மாநாடுகளில் பங்கேற்கலாமா என்ற கேள்விக்கு சேலம் மாவட்டம் மோகனூரில் நடந்த தேவேந்திர குல மாநாட்டில் பேசிய பெரியார், “ஜாதி மதக்கொடுமைகளையும், அவற்றிற்கு ஆதாரமான கடவுள்களையும், புரட்டுகளையும் விளக்கிக் கூறுவதற்கே’ இந்த மாநாடுகளில் பங்கேற்பதாக  விளக்கமளித்திருக்கிறார்.

பழந் தமிழர் கொள்கைகளோடு பெருமளவு பொருத்தமாக இருப்பது இஸ்லாம் மதமே என்று எழுதும் பெரியார், “சுயமரியாதைக்காரர்கள் கோரும் மாற்றமும் திருத்தமும் அதில் பெரிதும் இல்லையானாலும், இன்று ஆரியர்களை வெறுக்கும் தமிழ் மக்களுக்கு தாராளமாய் இடமிருக்கிறது’ என்று குறிப்பிடுகிறார். 15ம் நூற்றாண்டோடு தனது ஆயுளை முடித்துக் கொள்ளாமல், அது தாராள நோக்கத்தோடு இருந்திருக்குமானால், உலகம் பூராவையும் இஸ்லாம் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் என்ற கருத்தையும் முன் வைக்கிறார். அவரது இஸ்லாமிய ஆதரவு விமர்சனத்துக்குட்பட்டதாகவே இருந்துள்ளதை அவரது பேச்சு எழுத்துகளில் புரிந்துணர முடியும். உ.வே. சாமிநாத அய்யரின், பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள் தொகுப்புப் பற்றி “குடி அரசு’ தனது கருத்துக்களை “பார்ப்பனர் சூழ்ச்சி  சாமிநாதய்யர் ஜெயந்தி’ என்ற தலையங்கத்தில் பதிவு செய்திருக்கிறது. இந்திய சட்டசபையில், “ஆலயப் பிரவேச உரிமை’ மசோதாவை வலியுறுத்த வேண்டாம் என்று, காந்தி காங்கிரசாருக்கு அறிவுரை கூறுகிறார். இந்தச் சட்டம் பொதுவுடமைக் கொள்கையைச் சார்ந்தது என்று காந்தியாரிடம் கூறப்பட்டதே, அதற்குக் காரணம் என்று பெரியார் அம்பலப்படுத்துகிறார்.

மூடப் பண்டிகைகளை பெண்கள் கைவிடச் செய்யவேண்டுமானால், அதற்கு மாற்று விழாக்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறும் பெரியார், மே தினத்தைக் கொண்டாடுமாறு பரிந்துரைக்கிறார். இந்தியாவின் வர்க்க வேறுபாடுகள் “வர்ண வேறுபாடுகள்’ உருவத்தில் இருப்பதை இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள அவரது மே தின சொற்பொழிவுகள் ஆழமாக விளக்குகின்றன.

இராஜகோபாலாச்சாரியார் அரசியல் வாழ்விலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, “ஆச்சாரியார் ஓய்வு’ என்ற தலைப்பில் பெரியார் எழுதிய துணைத் தலையங்கம், ஆச்சாரியார் நிறைகுறைகளை மதிப்பிடுகிறது. ஆச்சாரியாரைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி அய்யர் காங்கிரஸ் தலைவரா கிறார். ஆர்.கே. சண்முகம் கொச்சி  சமஸ்தானத்தின் திவான் ஆகிறார்.

திண்டிவனம் பகுத்தறிவுச் சங்க ஆண்டு விழாவில் ஆற்றிய சொற்பொழிவு, அவரது சுய சிந்தனைக்கு சான்றாகத் திகழும் சிந்தனைக் கருவூலமாகத் திகழ்கிறது. சுயமரியாதைக் கண்ணோட்டத்திலான வாழ்வியல் சிந்தனையை எட்டே பக்கங்களில் பெரியார் பசுமரத்தாணியாக உள்ளத்தில் பதிய செய்து விட்டார். மாவட்ட நிர்வாக சபையிலும் (ஈடிண்tணூடிஞிt ஞணிச்ணூஞீ) எஸ்.அய்.ஆர். என்ற தனியார் ரயில்வே நிறுவனத்திலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அமுலுக்கு வருகின்றன.

கருத்துப் பிழிவாக அமைந்துள்ள “வகுப்புவாதம்’ தலையங்கம், “”கடவுள் படைப்பை” கேள்விக்குள்ளாக்கும் சித்திரபுத்திரன் உரையாடல், வழக்கறிஞர்கள்  வட்டிக் கடைக்காரர்கள்; மடத்தலைவர்கள் மீதான பெரியாரின் கடும் கண்டனங்கள். தேவகோட்டை பொதுக்கூட்டத்தில் யாகத்தைப் பற்றிப் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பார்ப்பனர்களுக்கு பெரியார்  தந்த பதிலடி; 14 வயதில் கணவனை இழந்து “”விதவை”யாக்கப்பட்ட இளம் பெண்ணை திண்டிவனத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் மேடை ஏற்றிக் காட்டி, பெரியார் “விதவை மறுமணத்தை’ ஆதரித்துப் பேசிய உருக்கமான நிகழ்வு  என்று கருத்து மணம் பரப்பி மலர்ந்திருக்கிறது இத்தொகுப்பு.

நீதிக்கட்சி சார்பில் வாரம் இருமுறை ஏடாக “விடுதலை’ அறிமுகமாகும் காலமும் இதுவே!

பதிப்பாளர்

You may also like...