வகுப்புப் போர்

 

சுயமரியாதை இயக்கமும் ஜஸ்டிஸ் கட்சியும் வகுப்புப்போரை கிளப்புவதாக அரசியல் பிழைப்புக்காரர்கள் கூப்பாடு போடுகிறார்கள். அதனாலேயே ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள்.

“”அரசியல் காரணங்களுக்கு ஆக இன்று கவர்மெண்டாருடன் காங்கிரஸ்காரர்கள் போர் புரியப் போகிறார்கள். ஆதலால் ஜஸ்டிஸ்காரர்கள் தயவுசெய்து இதில் குறுக்கிடக் கூடாது” என்று காங்கிரஸ்காரர்கள் சொல்லி அசம்பிளி தேர்தலில் ஓட்டு கேட்டார்கள்.

தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் ஒவ்வொரு தனி நபரிடத்திலும் இதைச் சொல்லியே கெஞ்சி ஓட்டுப் பெற்றார்.

ஆனால் வெற்றி பெற்ற உடன் ஜஸ்டிஸ் கட்சியை வெட்டிப் புதைப்பதே இவ்வெற்றியின் பயனாய் செய்ய வேண்டிய வேலை என்றும்,

இவ்வெற்றியினாலேயே ஜஸ்டிஸ் கட்சி மாண்டுவிட்டது என்பது ருஜுவாகிறது. ஆதலால் ஜஸ்டிஸ் மந்திரிகளைத் தள்ளிவிட்டு எங்களுக்கு அந்த மந்திரி ஸ்தானங்கள் அளிக்க வேண்டும் என்றும்,

அதே ராஜகோபாலாச்சாரியார் கவர்னரிடம் போய் மண்டி போட்டு கெஞ்சினார். எச்சிலைப் பத்திரிக்கைகளும் அதுபோலவே எழுதின.

ஆகவே அசெம்பிளி தேர்தலில் காங்கிரஸ்காரர்கள் பிரவேசித்தது சர்க்காரோடு போர் புரிவதற்கு அல்லவென்றும்,

ஜஸ்டிஸ் மந்திரிசபையைக் கவிழ்த்துவிட்டு மந்திரி பதவியை அடைந்து பிரிட்டிஷ் ஆட்சி சர்க்காரை நடத்திக் கொடுத்து பெரும் பெரும் சம்பளம் வாங்கவும், உத்தியோகத்துறையைப் பார்ப்பன அக்கிரகார மாக்கவும்தான் என்றும் சுயமரியாதைக்காரர்களும், ஜஸ்டிஸ்காரர்களும் சொல்லி வந்ததை மெய்ப்படுத்திவிட்டார்கள்.

இப்போது காங்கிரஸ்காரர்கள் ஓடி ஓடி ஜஸ்டிஸ் கட்சியார் வகுப்புத் துவேஷங்களை கிளப்பிவிடுகிறார்கள் என்று அழுகிறார்கள்.

வகுப்புத் துவேஷத்தை ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களும் சுயமரியாதைக் காரர்களும், புதிதாக உண்டாக்குகிறார்களா ஏற்கனவே நீடித்த காலமாய் இருந்து வருவதைக் காட்டி அதை அடியோடு ஒழிக்கப் பார்க்கிறார்களா என்று யோசித்துப் பார்க்கும்படி பொது மக்களை கேட்கின்றோம்.

வகுப்பு என்பது யாரால் ஏற்பட்டது? வகுப்புக்கு வகுப்பு பேதமும் மேல் கீழ் தன்மையும் யாரால் ஏற்பட்டது?

கீழ் வகுப்பார் என்பவர்களைக் கொடுமை செய்து வருகிறவர்கள் யார்?

பெருங்குடி மக்களை சூத்திரன் என்றும், 4வது வகுப்பான் என்றும் சொல்லுகிறவர்கள் யார்?

பிராமணனுக்கு வேறு இடம் சூத்திரனுக்கு வேறு இடம் என்று  சொல்லி எழுதிக் காட்டி யிருப்பவர்கள் யார்?

பஞ்சமருக்கு இடமில்லை என்று எழுதி வைத்திருப்பவர்கள் யார்?

பார்ப்பனர்களுக்கு மாத்திரம் என்று விளம்பரம் செய்தவர்கள் யார்?

மக்களைப் “”பிறப்பித்த கடவுளை” ஆராதிக்க வேண்டுமானால் எங்கள் மூலம் தான் ஆராதிக்க முடியும் என்றும், ஐந்தாவது வகுப்பானுக்கு அந்த உரிமையும் இல்லை என்றும், அவன் கோவிலுக்குள், குளத்துக்குள் வரக்கூடாது என்றும் தடுக்கிறவர்கள் யார்? அதுவும் சட்டபூர்வமாகவும் சாஸ்திர மூலமாகவும் தடுத்து விடுகிறவர்கள் யார்?

இவர்கள் எல்லாம் வகுப்புவாதிகள் அல்லாதவர்களா? வகுப்புத் துவேஷக்காரர்கள் அல்லாதவர்களா?

வகுப்பு அபிமானிகளா? வகுப்பு அன்பர்களா? என்று கேட்கின்றோம்.

பார்ப்பனரல்லாத மக்கள் ஜஸ்டிஸ் கட்சியாராகட்டும் சுயமரியாதைக் காரர்கள் ஆகட்டும் மனித உரிமைக்கு போராடுகிறார்களே அல்லாமல், மனித ஜீவ அபிமானத்துக்கு போராடுகிறார்களே அல்லாமல், மற்றபடி பணத்துக்கு போராடுகிறார்களா? அரசியல் ஏகபோக உரிமைக்கு போராடுகிறார்களா? ஜாதி அகம்பாவத்துக்கோ ஜாதி ஆணவத்துக்கோ ஜாதி ஆதிக்கத்துக்கோ போராடுகிறார்களா?

இவைகளையெல்லாம் விட்டுவிட்டு “”ஜஸ்டிஸ் கட்சியார் வரி குறைக்கவில்லை, மழை தருவிக்கவில்லை, லட்டு பாயாசம் பரிமாரவில்லை” என்றெல்லாம் விஷமத்தனமாயும், போக்கிரித்தனமாயும் பேசுவதில் என்ன லாபம்? என்று கேட்கின்றோம்.

இன்று ஜஸ்டிஸ் கட்சியார் பணக்காரர்களுக்கும், சொத்து உள்ளவனுக்கும் வரி குறைக்கப்படவில்லை என்று காங்கிரஸ்காரர் சொல்லுவது உண்மையாய் இருக்குமானால், சொத்து இல்லாத ஏழைகளாய் கூலிகளாய் இருக்கும் பாமர மக்களுக்கு அவர்கள் வாங்கிச் சாப்பிடும் தவிட்டுக் குருணைக்கு காங்கிரஸ்காரர்கள் அசம்பளியில் வரி போட்டார்களே அது மிகவும் ஏழை அபிமானமான காரியமா என்று கேட்கின்றோம்.

பூமிக்கு வரி போடுவதோ குறைப்பதோ ஆன வேலை ஜஸ்டிஸ் கட்சியார் ஆதிக்கத்தில் இல்லை, மந்திரிகள் ஆதிக்கத்தில் இல்லை.

ஜஸ்டிஸ் கட்சியார் அரசாங்கத்தை வரி குறைக்க வேண்டாம் என்று சொல்லவும் இல்லை என்பது எந்த ஜீவனுக்கும் தெரிந்த விஷயம்.

ஆனால், காங்கிரஸ்காரர்கள் அசம்பளி சட்டசபையில் குருணைக்கு வரிபோடுங்கள் என்று சொன்னார்களே, அதற்கு அனுகூலமாக ஓட்டும் கொடுத்தார்களே இந்த யோக்கியர்களுக்கு ஜஸ்டிஸ் கட்சியார் வரி குறைக்கவில்லை என்று சொல்ல வாய் இருக்கிறதா என்று கேட்கின்றோம்.

காங்கிரஸ்காரர்கள் வீரத்துடன் ஆண்மையுடன் மானத்துடன் சண்டை செய்வதாய் இருந்தால் அவர்களுடன் சரிசமமாய் சண்டைக்கு நின்று போர் புரியலாம், அப்போரில் உயிரையும் விட்டு பிணத்தை ஊர்கோலம் செய்து புதைக்கும்படியும் செய்து கொள்ளலாம்.

அப்படிக்கில்லாமல் பேதிப்பு, வஞ்சம், பொய், களவு, சூது ஆகிய காரியங்களையே ஆயுதமாக வைத்துக் கொண்டு அனுமானைப் போல் தன் இனத்தைக் காட்டிக் கொடுத்து எதிரியின் காலைக் கழுவி சாப்பிட்டு உயிர் வாழ்ந்த ஜீவனைப் போல் உள்ள சில ஆட்களைக் கைவசப்படுத்தி அவரவர்களை தங்கள் கொடி சின்னமாக வைத்துக் கொண்டு போர் புரிவது என்றால் இந்தப் போரை எப்படி வளர விட்டுக் கொண்டிருக்க முடியும்?

மானம் சுயமரியாதை என்பது சோத்துக்கு முந்தினதா சோத்துக்கு பிந்தினதா என்று கேட்கின்றோம்? சோத்துக்கு பிந்தினதுதான் மானம் என்றால் அந்த சோற்றைவிட மலம் மேலானது என்றுதான் மக்களுக்கு விளங்க வைக்க கற்×ணடித்து நிலை நிறுத்துவோம்.

ஆகவே இன்று பார்ப்பனப் போரானது சண்டிப் போராகப் போய்விட்டது  மனிதத் தன்மைப் போராக இல்லை.

ஆதலால் பார்ப்பனக் கூச்சலுக்கும், அவர்களது காலிகள் கூலிகள், கூச்சலுக்கும், எச்சிலை பத்திரிகைகளின் விஷமங்களுக்கும் பயந்து போகாமல் நமது போரை எதிரிகள் வகுப்புப்போர் என்றாலும், உத்தியோகப் போர் என்றாலும், பணக்காரப் போர் என்றாலும், மந்திரி பதவிப்போர் என்றாலும் ஒன்றையும் லக்ஷியம் செய்யாமல் இப்படிச் சொல்லுகின்றவர்களையெல்லாம் பார்ப்பனர்களின்  பணக்காரர்களின் வகுப்பு ஆதிக்கக்காரர்களின் லைசன்சு பெற்ற கூலிகள் என்று சந்தேகமற தீர்மானித்து விட்டு இன்றையப் போரை தைரியத்துடன் எதிரியின் யோக்கியதைக்குத் தகுந்தபடி தொடர்ந்து நடத்த வேண்டும் என்றே ஆசைப்படுகின்றோம்.

குடி அரசு  கட்டுரை  08.12.1935

You may also like...