காங்கிரஸ் பிளவு
மூன்று இடங்களில் அலங்கோலம்
வீரவாகு பிள்ளையும் பிரிந்தாராம்
எங்கும் காங்கிரசுக்கே வெற்றியென்று கூறப்பட்டாலும் காங்கிரஸ் வெற்றியின் யோக்கியதை இப்பொழுதுதான் வெளிவரத் தொடங்குகிறது. திருநெல்வேலியில் தோழர்கள் கன்னியப்ப நாடார், ஷண்முக திரவிய நாடார், என். சங்கரலிங்க ரெட்டியார், என். சின்னக்கண்ணுப் பிள்ளை முதலியோர் காங்கிரசிலிருந்து விலகி விட்டதைப்பற்றி ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேறொரு காங்கிரஸ் மெம்பரான தோழர் ஸ்ரீநிவாச ரெட்டியார் ராஜிநாமாச் செய்யாமலே ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்து விட்டதாகத் தெரிகிறது.
ஜில்லா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தூத்துக்குடித் தோழர் எம்.ஸி.வீரவாகு பிள்ளையும் தமது பதவியை ராஜிநாமாச் செய்து விட்டாராம்.
மதுரை நகரசபை காங்கிரஸ் கட்சிக் காரியதரிசி தோழர் எஸ். ஜெகன்னாத ஐயங்காரும் தமது பதவியை உதறித் தள்ளிவிட்டாராம்.
ஒழுங்கும், கட்டுப்பாடும், தேசபக்தியும் தாண்டவமாடும் காங்கிரஸ் ஸ்தாபனங்களின் அலங்கோலத்தைப் பாருங்கள்! ஜில்லாபோர்டு நகரசபைகள் வேலை ஆரம்பமாகும் முன்னமேயே. இந்தக் குழப்பத்தினால் காங்கிரஸ்காரரின் ஸ்தல ஸ்தாபன நிருவாகம் எவ்வளவு அழகாக இருக்குமென்று கூறவும் வேண்டுமா?
குடி அரசு கட்டுரை 29.12.1935