சத்தியமூர்த்தியும் கோவைப் பிரசங்கமும்

 

இன்று தமிழ்நாட்டில் அரசியல் துறையில் தோழர் சத்தியமூர்த்தி சாஸ்திரிகளுடைய பெயர் அமிர்தாஞ்ஜனம் டப்பி போல் விளம்பரம் செய்யப்படுகின்றது. விளம்பரத்தின் பயனாய் அவரது பெயரும் ஒரு அளவுக்கு தினமும் தவறாமல் பத்திரிகைகளில் அடிபடுகிறது. அதோடு மாத்திரமல்லாமல் அவரும் தமிழ்நாட்டில் பல இடங்களில் அடிக்கடி உண்மையிலேயே அடிபடுகிறார். அவ்வளவோடு நிற்பதில்லை. “”ஊரார் வீட்டு நெய்யே  என் பெண்டாட்டி கையே” என்று ஆனந்தமடைந்த ஒரு நெய் வெறியர் போல் “”ஊரார் வீட்டுப் பணமே எனது சுற்றுப் பிரயாணமே” என்கின்ற மாதிரி இப்போது தினம் ஒரு ஊராகவும், ஏன்? தினம் 2, 3 ஊர்களாகவும், தான் மாத்திரமல்லாமல் தமது தர்ம பத்தினி சமேதராய் சஞ்சாரம் செய்த வண்ணமாய் இருக்கிறார்.

காங்கிரஸ் பணம் இருக்கிறது, எலும்பில்லாத கை இருக்கிறது, சரியாய் எழுதிக்கொள்ள வேண்டிய அவசியமில்லாத கணக்கு இருக்கிறது, யாராவது எந்த ஆடிட்டராவது கணக்கு தப்புக் கணக்காகவோ ஒழுங்கீனமான கணக்காகவோ இருக்கிறது என்று ஆதாரத்தோடு எடுத்துக் காட்டினால் அதை எடுத்துச் சொல்லுகிறவர்களை “”நீ தான் திருடன், அயோக்கியன், நாயே, கழுதையே” என்று கேட்க எச்சில் இலை  காலிப் பத்திரிகைகள் இருக்கின்றன. இவ்வளவும் போதாமல் ரகசியத்தில் குமாரராஜா சாஹேப் அவர்கள் வாங்கிக் கொடுத்த மோட்டார் காரும் அவரது பண ஆதரவும் இருக்கிறது.

ஆகவே இனி நமது சத்தியமூர்த்தி சாஸ்திரியாருக்கு வேண்டியது என்ன? ஆகாயத்தில் மனைவி மக்களுடன் பறப்பதற்கு ஒரு ஏரோபிளானும், அங்கு ஆகாய சஞ்சாரம் செய்ய சில மண்டலங்களும் அங்கு வசவு கேட்பதற்குச் சில மானங்கெட்ட ஆட்களும், அதை விளம்பரம் செய்யவும் காட்டிக் கொடுப்பதற்கும் சில எச்சில் நக்கிப் பத்திரிக்கைகளும் சில கூலிகளும் தேவை.

கிடைத்தற்கு அரிய பொக்கிஷம்

எப்படி இருந்தாலும் உண்மையிலேயே சத்தியமூர்த்தியாரைப் பார்த்து நாம் பொறாமைப்படவில்லை. பாராட்டுகிறோம். ஒரு விஷயத்தில் அவருடைய சில குணங்கள் நம்மவருக்கும் வரவேண்டுமென்றும், அவரைப் போல் வகுப்பு அபிமானத்தில் மாறாத, சலியாத குணம் நம்மவர்களுக்கும் இருக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறோம்.

அவர், அதாவது தோழர் சத்தியமூர்த்தி, சாஸ்திரியார் நமது நண்பர் சக்கிரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரைவிட மேலானவர் என்று கூடச் சொல்லுவோம்.

அதென்னவென்றால் இன்று தோழர் ஆச்சாரியாரவர்களுக்கு உள்ள பார்ப்பன அபிமானம், பார்ப்பனீய ஆதிக்கத்தில் சிறிதும் விட்டுக் கொடுக் காமல் காப்பாற்றப்பட வேண்டும் என்கின்ற பிடிவாதமான காரியங்களில் அவரைவிட பல மடங்கு மேலான ஆசை தோழர் சாஸ்திரியாருக்கு உண்டு.

எந்த சமயத்திலும் எந்த விலைக்கும் பார்ப்பன அபிமானத்தையும், பார்ப்பன ஆதிக்கத்தையும், பார்ப்பனக் கலை, பாஷை, தொழில், பழக்க வழக்கம், வருணாச்சிரமம் ஆகியவைகளையும் சிறிதுகூட விட்டுக் கொடுக்காதவர்.

சத்தியமூர்த்தியாருக்குப் பயந்துதான் காந்தியார் வர்ணாச்சிரம தர்மத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறார் என்றுகூட சொல்லலாம். மற்றும் சத்தியமூர்த்தியாரால் தான் கராச்சி காங்கிரசில் மதம், ஜாதி, வருணாச்சிரமம், பழக்கம், வழக்கம், தொழில், சாஸ்திரம், புராணம் ஆகியவை காப்பாற்றப்படுவதாகப் பார்ப்பனருக்கு உறுதி கொடுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் சொல்லலாம்.

அவ்வளவுதானா இன்னமும் பொது ரோட்டு, பொது பள்ளிக்கூடம் எல்லா ஜாதியாருக்கும் உரிமை உண்டு என்ற தீர்மானத்தில் வெகு ஜாக்கிரதையாக, வெகு பிடிவாதமாக கோவில்கள் விலக்கப்பட்டது என்றும் சொல்லலாம். இவ்விஷயங்களில் இவ்வளவு தைரியமாய்ப் பேச ஆச்சாரியாருக்கு சக்தி போதாது; தந்திரமாய் ஏதாவது செய்யக்கூடும். ஆனாலும் இப்படிப்பட்ட காரியங்களுக்கு இவருக்கு நிகரான தலைவர் நம் பார்ப்பனர்களுக்கு வேறு யாரும் கிடைக்க மாட்டார்கள். ஆதலால் இவர் பார்ப்பனர்களுக்குக் கிடைத்தற்கரிய பொக்கிஷம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அழகான உச்சிக்குடுமி

இவர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக ஆவதற்கு முன் தலையில் கிராப்பு வைத்திருந்தார். இப்போது தலைவராக ஆன உடன் கிராப்பை எடுத்து விட்டு அழகான உச்சிக்குடுமி வைத்துக் கொண்டார்  உத்தம பிராமணனாக  பச்சைப் பிராமணனாக ஆக்கிக் கொண்டார். இன்று சாஸ்திரியாரை எல்லாப் பார்ப்பனர்களும் அபிப்பிராய பேதமில்லாமல் எப்படி மத விஷயத்தில் சங்கராச்சாரிய “”சுவாமிகளை” மதித்து மரியாதை செய்கிறார்களோ அது போல சத்தியமூர்த்தி சாஸ்திரிகளை அரசியல் விஷயத்தில் சங்கராச்சாரி போல் மரியாதை செய்கிறார்கள். எந்தப் பார்ப்பானாவது சத்தியமூர்த்தியாரை அலட்சியமாகப் பேசினால் அவர் நபியை குற்றம் சொன்ன மகம்மதியனை விட அதிக கேவலமாகக் கண்டிக்கப்படத்தக்கவனாகிக் கண்டிக்கப்படுகிறான்.

இந்தச் சமயத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த லெனின்கிராடில் நடித்துக் காட்டப்பட்ட ஒரு நாடகம் ஞாபகத்துக்கு வருகிறது.

ஒரு ரஷியக் கதை

அதாவது, ஒரு கொள்ளையும் கொலையும் கலந்த குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஒருவனின் தண்டனை நிறைவேற்றப் படும் நாளில், அதிகாலையில் ஒரு பாதிரியார் சென்று அவனுக்கு இறுதிக்கால உபதேசம் செய்து, அவனது பாவங்களுக்கு மன்னிப்பு கொடுப்பதற்காக சூரிய உதயத்துக்கு முன் நல்ல குமரி இருட்டுச் சமயத்தில் சிறைச்சாலையில் உள்ள அவனது அறைக்குச் சென்று குற்றவாளிக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது அக்குற்றவாளி பாதிரியாரின் கழுத்தை நெறித்துக் கொன்று தள்ளி விட்டு தன் உடுப்பை பாதிரியாருக்குப் போட்டு விட்டு அவரது உடுப்பைக் கழற்றி தான் அணிந்து கொண்டு பாதிரி போல் வெளியில் வந்து விட்டான்.

ஜெயில் அதிகாரிகள் குற்றவாளியை கொலைக்களத்துக்கு கூட்டிக் கொண்டு போக வந்ததில் இருட்டு ஆனதினால் கைதி மூர்ச்சையாய் கிடக்கிறான் என்று கருதி, தூக்கும்போது சந்தேகப்பட்டுப் பார்த்துத் தாங்கள் தப்பித்துக் கொள்ள அவசரமாய்க் கொண்டு போய் கொலை செய்ததாக பாசாங்கு செய்து புதைத்து விட்டார்கள்.

வெளியில் வந்த குற்றவாளி அந்த உடுப்புடனேயே ஒரு தனிப் பாதிரியாகி, பல பெண்களைச் சேர்த்துக் கொண்டு ஒரு மடத்தை உண்டாக்கி அம்மடத்துக்கு அப் பெண்கள் மூலமாக பணம் சம்பாதித்து, பிரபல பாதிரியாகி போப் எலக்ஷனுக்கு நின்று பெண்கள் உதவியாலும், பல தந்திரங்களாலும் எலக்ஷனில் வெற்றி பெற்று விட்டான்.

போப் எலக்ஷனில் வெற்றி பெற்ற உடனே அரசனும் நியாயாதிபதியும் வந்து போப்புக்கு மரியாதை செய்து கை கால்களுக்கு முத்தமிட்டு வணங்க வேண்டியது அப்போதைய முறை. அந்தப்படி அரசன் மரியாதை முடிந்த உடன் நியாயாதிபதி மரியாதை செய்ய வந்தபோது இந்த போப்புதான் முன் கொலை, கொள்ளை ஆகிய குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டவன் என்பதாக கண்டு கொண்டு பொது ஜனங்களைப் பார்த்து நியாயாதிபதி ஏதோ பேசத் தொடங்கினார்.

போப்பின் உள் ஆட்களும், அங்கிருந்தவர்களும், அந்த நியாயாதிபதி மீது கோபித்தார்கள். அதற்கு அந்த நியாயாதிபதி இந்த போப்பைப் பற்றி சில வார்த்தை பேச வேண்டுமென்றார். உடனே மற்றவர்கள் கோபம் கொண்டு நியாயாதிபதியை தாக்க ஆரம்பித்து நியாயாதிபதியை கைது செய்ய முயன்றார்கள். இதற்கு அரசர் முதல் மற்ற பாதிரிகள் எல்லோரும் போப்புக்கு அனுகூலமாகவே இருந்தார்கள். இந்தப் போப்புடன் கூடவே கூட்டுக் கொள்ளையில் பங்காளிகளாய் இருந்து கண்டுபிடிக்க முடியாமல் மறைவாய்த் திரிந்தவர்களும், மற்றும் பலரும் குட்டிப் பாதிரிகளாகி இந்த போப்பு எலக்ஷனுக்கு வேலை செய்து அவரது பட்டாபிஷேகத்துக்கும் உதவியாய் இருந்தார்கள்.இவர்களே முன்னணியில் இருந்தார்கள். இதை பார்த்து நியாயாதிபதி பயந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தானாகவே காலைத் தொட்டு முத்தமிட்டு விட்டுப் போனார்.

இது ஒரு டிராமா. அதுபோல் நமது சத்தியமூர்த்தியார் அவரைப் பற்றி இப்போது எந்த நியாயாதிபதியும் ஏதும் பேசாமல் காலைத் தொட்டு முத்தமிட வேண்டிய நிலைமையை அடைந்திருக்கிறார்.

மூர்த்தியின் இரண்டு ஆசை

இப்படிப்பட்ட இவருக்கு இன்று இரண்டு கொள்கைகள் (ஆசை) தான் உண்டு.

அதாவது, ஒன்று  ஜஸ்டிஸ் கட்சியை (பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை) குழி தோண்டி  500 கஜ ஆழத்தில் புதைக்க வேண்டும் என்பது.

மற்றொன்று  ஒரு நாளைக்கு ஆவது தான் சென்னை அரசாங்க முதல் மந்திரியாகி சலூன் வண்டியில் மனைவி மக்களுடன் பிரயாணம் செய்ய வேண்டும் என்பது.

இந்த இரண்டு காரியத்தில் முன்னையது ஜாதி அபிமானம், பின்னையது அந்த ஜாதி அபிமானத்துக்கு கூலியும் சாதனமும் ஆகும். ஆகவே இந்த இரண்டு காரியங்களுக்கும் இன்று தென்னாட்டுப் பார்ப்பனர், ஆந்திர நாட்டுப் பார்ப்பனர், கேரள நாட்டுப் பார்ப்பனர், கர்நாடக நாட்டுப் பார்ப்பனர் ஆகியவர்களும் இவர்கள் சட்டப்படிக்கான மனைவிகள் குழந்தைகள் ஆகியவர்களும், சட்டத்திற்குள் வரக்கூடாதவர்களான மனைவிகளும் மக்களும் உதவியாய் பாடுபடுகிறார்கள்.

இந்த தைரியத்தில் தான் தோழர் சத்தியமூர்த்தியும், அவர்கள் கூட்ட பத்திரிகைகளும் காரியம் கைகூடிவிட்டதாகவே கருதிக்கொண்டும் சில விஷயங்களில் கனவு கண்டு கொண்டும் “”ஜெயினக் கடவுள்” மாதிரி ஆகி தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கின்றன.

ஒரு நாளும் ஆசை நிறைவேறாது

என்றாலும் இப்பவும் ஒன்று கூறுகிறோம். ஜஸ்டிஸ் கட்சியை 500 கஜம் அல்லது 5000 கஜம் ஆழத்தில் புதைக்க (முடியாது) முடிந்ததாகவே வைத்துக் கொள்ளுவோம். காங்கிரஸ் கொள்கைகள் இருந்த இடங்களில் புல்லு முளைத்ததுபோல் ஜஸ்டிஸ் கட்சி இருந்த இடத்தில் புல்லு முளைத்து, பொப்பிலிக்கும் மந்திரி வேலை போய் ராஜா ஆய்விட்டதாகவே வைத்துக் கொள்ளுவோம். அப்போதும் சத்தியமூர்த்தியோ அவர்கள் சிஷ்ய கோடிகளோ முதல் மந்திரியாகவோ ஜில்லா போர்டு தலைவராகவோ ஆகிவிட முடியும் என்பது மாத்திரம் கனவிற்கூடப் பார்க்க முடியாது என்பதை உறுதியாய்ச் சொல்லுவோம். ஜஸ்டிஸ் கட்சியை 500 கஜ ஆழத்துக்கு கீழ் புதைத்துவிட வேண்டுமென்று சத்தியமூர்த்தியார் ஆசைப்பட்டாலும் காரியத்தில் அவர் ஜஸ்டிஸ் கட்சியானது என்றும் நிலைக்கும்படியான அசோக ஸ்தம்பம் போல் விளங்கும்படி உபகாரம் செய்துதான் வருகிறார்.

எப்படி என்றால், முதலாவதாக ஜஸ்டிஸ் கட்சியைப் பரிசுத்தம் செய்து வருகிறார். வெறும் பட்டம் பதவிக்கு ஆக மாத்திரம் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து வந்த “”பெரியார்களை” எல்லாம் தான் அழைத்துக் கொள்ளுவதன் மூலம் அக்கட்சிக்குப் பல விதத்திலும் தொல்லையைக் குறைத்துக் கொண்டும், பதவிப் போட்டியைக் குறைத்துக் கொண்டும் வருகிறார். அன்றியும் அந்தப்படி அழைத்துக் கொள்ளும் ஆட்கள் அத்தனை பேரும் சத்தியமூர்த்தியாருக்கு உலை வைக்கவும், அவருடன் போட்டி போடவும், அவரது காலைவாரி விட்டு மேலே உட்காரவும் ஆசையும், ஆற்றலும் கொண்டவர்கள்  என்பதோடு சத்தியமூர்த்தியாரை தலைவர் என்று வாயில் கூட சொல்லுவதைவிட பிராணனை விட்டு விடுவது மேல் என்றே கருதத்தக்க சுயமரியாதை உள்ளவர்கள்.

வெற்றியின் யோக்கியதை திருநெல்வேலி

உதாரணமாக, திருநெல்வேலி ஜில்லா போர்டு பார்ப்பன மயமாக ஆய்விட்டது என்றும், காங்கிரசுக்கே வெற்றி மேல் வெற்றி என்றும், 52 ஸ்தானங்களில் 31 ஸ்தானங்களுக்கு காங்கிரஸ் ஆட்கள் வந்துவிட்டார்கள் என்றும் சொல்லி, சத்தியமூர்த்தியார் பறையடித்தார். பார்ப்பன எச்சிலைப் பத்திரிக்கைகள், பார்ப்பனர்கள் எச்சிலையை நக்கும் பத்திரிக்கைகள் ஜஸ்டிஸ் கட்சிக்கு சாவோலை படித்தன.

முடிவு என்ன ஆயிற்று? அன்றைக்கு என்று ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து ஒருவரை அழைத்துப் போய் அதுவும் கொஞ்சம்கூட சந்தேகப்படுவதற்கு இடமில்லாத அசல் பார்ப்பனரல்லாதாரை, அதுவும் எந்த சமயத்தில் பார்ப்பனக் கும்பலுக்கு பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைக்கலாம் என்று சதா கிளிச்ச குச்சியை கையில் வைத்திருக்கும் பார்ப்பனரல்லாதாரைத் தான் அழைத்துப் போய் ஜில்லா போர்டு தலைவர் ஸ்தானம் கொடுப்பதாக காங்கிரஸ் தலைவரே தீர்மானித்துவிட்டார்.

திருச்சி

திருச்சியிலும் ஜில்லா போர்டில் காங்கிரசுக்கு வெற்றி மேல் வெற்றி என்று எச்சிலைப் பத்திரிக்கைகளும் எச்சை நக்கிப் பத்திரிக்கைகளும் தப்பட்டை அடித்தன. கடசியாக அந்த தலைமை ஸ்தானமும் பச்சைப் பார்ப்பனரல்லாதாருக்கு அதுவும் நேற்று வரை பார்ப்பனர்களை மாத்திரமல்லாமல் அவர்கள் பழந்தலைமுறை முதல் உள்ள மக்களை பெண்டு பிள்ளைகளுடன் அமிர்தக் கடையிலும் “”விஷ்ணுவின் முதல் அவதார”க் கடையிலும் நடக்கும் சம்பாஷணை போல் வைது கொண்டிருந்த “”பெரியாரே”  தோழர் தேவரே இன்று திருச்சி ஜில்லா போர்டுக்கு காங்கிரசினால் சத்தியமூர்த்தியார் வாயினால் “”வசிஷ்டன் ராமனுக்கு” பட்டங்கட்டிய மாதிரி பட்டங்கட்டி விட்டார். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், வெகுநாளாக காங்கிரசில் இருந்து கொண்டு பெண்டு பிள்ளைகளுடன் ஜெயிலுக்குப் போய், தமிழ்நாடு காங்கிரசுக்கு சர்வாதிகாரியாய் இருந்த டாக்டர் டி.வி.எஸ். சாஸ்திரியாருடைய பெயரை தோழர் சத்தியமூர்த்தியார் ஜில்லா போர்டு தலைவர் பதவிக்கு வாயில் கூட உச்சரிக்கவில்லை என்று சொல்லி பத்திரிக்கைகளை விட்டு எழுதச் சொல்லுவதோடு, டாக்டர் சுப்பராயனிடமிருந்து அத்தாட்சி வாங்கி விளம்பரம்படுத்த வேண்டிய அளவு பயம் ஏற்பட்டுவிட்டது. டாக்டர் சுப்பராயன் அவர்களும் வெகு ஜாக்கிரதையாகவே அத்தாட்சி கொடுத்திருக்கிறார். அதாவது “அந்தப்படி பட்டுக்கோட்டையில் பேசவில்லை’ என்பதாகும். மற்ற ஊரில் பேசி இருக்கலாமோ என்னமோ அது வேறு விஷயம்.

அப்படியாவது சத்தியமூர்த்தியார் பட்டாபிஷேகம் செய்த ஆட்களுக்காவது தலைவர் ஸ்தானம் கிடைக்கிறதோ அல்லது காங்கிரஸ் மெம்பர்களே நாமம் சாத்தப் போகிறார்களோ பின்னால் பார்க்கலாம்.

இனி தென்னாற்காடு இருக்கிறது. அதில் பார்ப்பனப் பூண்டு உள்ள வரை ஞாபகம் இருக்கும்படியாக தோழர் ஜம்புலிங்க முதலியார் காங்கிரஸ்காரர்களுக்கு புத்தி கற்பித்துவிடப் போகிறார்.

ஜெயிலுக்கு போனால்தான் தலைவராகலாமாம்

இந்த நிலையில் தோழர் சத்தியமூர்த்தியார் “”ஜெயிலுக்குப் போகாதவர்களுக்குத் தலைவர் ஸ்தானம் கிடையாது” என்று கோவையில் உத்திரவு போட்டிருக்கிறார்.

அவருடைய வாக்கு எவ்வளவு சத்தியமானது என்பதற்கு தளவாய் முதலியார், திருச்சி தேவர் இவர்கள் எந்த ஜெயிலுக்குப் போய் வந்தார்கள் என்பதைப் பார்த்தாலே விளங்கி விடும்.

மற்றும் ஜெயிலுக்குப் போய் வருவது என்பதற்கு மூர்த்தியார் அகராதியில் என்ன வியாக்கியானம் இருக்கிறது என்பதும் நமக்கு விளங்கவில்லை.

மோட்டாரில் துண்டு நோட்டீஸ் வினியோகிக்க வேண்டியது, போலீசார் மோட்டாரில் அழைத்துப் போகவேண்டியது, மேஜிஸ்ட்ரேட் தண்டிக்க வேண்டியது அ கிளாஸ் வகுப்பில் போடும்படி கெஞ்ச வேண்டியது, ஜெயில் சூப்ரண்டு சிபார்சு பிடித்து ஆஸ்பத்திரி ஸ்பெஷல் வார்டுக்கு போய் விட வேண்டியது, அங்கிருந்து ஜஸ்டிஸ் கட்சியாரைக் கெஞ்சி விடுதலை ஆகி விட வேண்டியது, ஜெயில் ரூலுக்கு விரோதமாய் நடந்த குற்றங்களையெல்லாம் மன்னித்து விட வேண்டியது. இன்னும் சில ரகம் உண்டு. அவற்றைச் சொன்னால் ஜெயில் அதிகாரிகள் பாடு திண்டாட்டமாகிவிடும்.

ஆகவே இந்தப்படி போவதைத் தான் நமது மூர்த்தியார் ஜெயில் பிரவேசம் என்று கருதினாரோ என்னமோ?

ஜெயிலுக்கு போகாத தலைவர்கள்

இதுகூட இல்லாத தோழர் கே.பாஷ்யம் தலைவரானாரே அது எந்த ஸ்பெஷல் கிளாஸ்படி என்பது நமக்கு விளங்கவில்லை. மற்றும் சுதேசமித்திரன் பத்திராபதிபர் எந்த ஜெயிலுக்குப் போனார்?

தோழர் எஸ். சீனிவாசயங்காரை எல்லா இந்திய காங்கிரஸ் தலைவரே வீட்டுக்கு போய் தமிழ்நாடு காங்கிரசை தலைமை வகித்து நடத்தக் கூப்பிட்டாரே அவர் எந்த ஜெயிலுக்கு போனார் தோழர் சி.ஆர். ரெட்டி அவர்கள் பல மகாநாட்டுக்கு தலைமை வகித்தாய்விட்டதே அவர் எந்த ஜெயிலுக்கு போனார்? சாமி வெங்கிடாசலம் செட்டியார் அவர்கள் எந்த ஜெயிலுக்கு போனார். இவ்வளவு சங்கதி இருக்க, கோயமுத்தூருக்கு போன உடன் மாத்திரம் மூர்த்தியாருக்கு ஏன், எதற்கு ஆக இந்த ஞானம் உதயமாய் விட்டது என்பது நமக்கு விளங்கவில்லை. ஒரு சமயம் கோயமுத்தூரில் தலைவர் போட்டி வரலாமென்று பயந்து இப்போதே பழைய ஆட்களுக்கு உறுதி கூறினாரோ என்று கருத வேண்டி இருக்கிறது.

அசம்பளி எலக்ஷன்

நிற்க அசெம்பளி எலக்ஷனில் ஜஸ்டிஸ் கட்சிக்கு “”தோல்வி” ஏற்பட்டது முதல் ஜஸ்டிஸ் கட்சியை புதைத்து விட்டோம்; அது செத்தது; உயிருக்குத் திண்டாடுகிறது; ஒழியப் போகிறது என்று இருக்க இருக்க சுரம் கம்மியாகவே பேசிக் கொண்டு வருவது யாரும் அறிந்ததாகும். எச்சிலை பத்திரிக்கைகளும் எச்சை நக்கும் பத்திரிக்கைகளும் அதுபோலவே மானமற்று ஈனத்தை லக்ஷியம் செய்யாமல் பின் மேளமடிப்பதும் யாவரும் அறிந்ததாகும்.

எது செத்தது?

அன்று முதல் இன்று வரை இந்த ஒரு வருஷ காலமாக ஜஸ்டிஸ் கட்சி எதில் செத்து வருகிறது? எ. ராமசாமி முதலியார் தோற்றார், சத்தியமூர்த்தி வெற்றி பெற்றார். இதில் ராமசாமி முதலியார் புதைக்கப்பட்டுவிட்டாரா? அவர் பெருமை மங்கிவிட்டதா? அல்லது சத்தியமூர்த்திக்கு இறக்கை முளைத்ததா?

இந்த ஒரு காரணமே காங்கிரசு அடங்கிற்று என்பதற்கு அத்தாக்ஷி ஆகிவிட்டது. ராமசாமி முதலியார் தோற்றார். சத்தியமூர்த்தி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரானார். அன்று முதலே காங்கிரஸ் பெருமையில் இடி விழுந்தது, காங்கிரஸ் பார்ப்பன ஸ்தாபனம் என்பதை வெட்ட வெளிச்ச மாக்கிற்று, பார்ப்பனரல்லாதாரில் செல்லாக் காசுக்கும் ஈய ரூபாய்களுக்கும் தான் காங்கிரஸ் இருப்பிடமாயிற்று.

சர். ஆர்.கே. ஷண்முகம் தோற்றார்;  சாமி வெங்கிடாசலம் ஜெயித்தார்; என்ன ஆயிற்று? ஷண்முகம் புதைக்கப்பட்டு விட்டாரா? சாமி வெங்கிடாசலத்துக்கு இறக்கை முளைத்ததா? ஷண்முகம் இன்று இந்தியாவில் குன்றின் மேலிட்ட 5000 கேண்டல் பவர் மின்சார விளக்கு மாதிரி விளங்குகிறார். சாமி வெங்கிடாசலம் முக்காடிட்டு மூலையில் உட்கார்ந்தார்.

ஜஸ்டிஸ் கட்சிக்கு லட்ச ரூபாய் பண்டு ஏற்பட்டது. அருமையான திட்டங்கள் அதுவும் காங்கிரசுக்காரர்களும், அவர்களது எச்சிலைப் பத்திரிகைகளும் எச்சை நக்கும் பத்திரிகைகளும் பொறாமைப்பட்டு வயிற்றெரிச்சல்பட்டு இடித்துக் கொள்ளும்படியான திட்டங்களும் ஏற்பட்டது. ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள தொல்லைகள் எல்லாம் விலகி பரிசுத்தத்தன்மை அடையும்படியான தெளிவுகளும் ஏற்பட்டன.

எலக்ஷன் தான் சோதனையா?

ஒரு கட்சியின் தன்மைக்கு அதனின் முக்கிய யோக்கியதைக்கு எலக்ஷனில் வெற்றி பெறுவதையே முக்கியமாய்க் கருதுவதாய் இருந்தால், இந்த 15 வருஷ காலமாய் காங்கிரசுக்காரர்களாகட்டும் பார்ப்பனர் களாகட்டும் பஞ்சாய்ப் பறக்கும்படி ஜஸ்டிஸ் கட்சி அடித்து துரத்தி வந்ததே அப்போது அது உயர்ந்த யோக்கியதை உடையதாகிவிடவில்லையா? காங்கிரசாகட்டும், அல்லது பார்ப்பனர்களாகட்டும் தங்கள் கொள்கையிலாவது தங்களுடைய நாணயத்தாலாவது இந்த நாட்டில் இன்று வாழ்கிறார்கள் என்று யாராவது சொல்லிவிட முடியுமா? என்று சபதம் கூறிக் கேட்கின்றோம்.

இந்த 15 வருஷத்தில் 2 கோடி ரூபாய் பொது மக்களிடம் இருந்து வசூல் செய்து கண்டபடி ஒழுங்கும் நாணயமும் தவறுதலாகச் செலவு செய்து மானத்தோடு பிழைக்க வகை அற்ற கூலிகளைப் பிடித்தும், வயிற்றுப் பிழைப்புக்கே நடத்தும் பத்திரிக்கைகளைப் பிடித்தும் கூலி கொடுத்து பிரசாரம் செய்த பயனாய் அது மக்களுக்கு விளம்பரப்படுத்தப்பட்டிருக்கிறதே ஒழிய, காங்கிரசினுடையவோ பார்ப்பனர்களுடைய யோக்கியதையாலோ பரோபகார தர்மத்தினாலா என்று பாருங்கள்.

இன்றைய தினமும் இந்த நாட்டில் இன்றும் வேறு யாராவது இவ்வளவு பணம் செலவு செய்து ஏன் இதில் பகுதிப் பணம் செலவு செய்து பிரசாரம் செய்தால் நம் நாட்டில் கொஞ்ச காலத்துக்கு கழுதை மூத்திரமும் நாய் விட்டையும் ரூபாய் எடை ரூபாய் விலைக்கு விற்கும்படி செய்து விடலாம். பணத்துக்கு இருக்கிற சக்தி, பெரும்பான்மையான மக்களுக்கு இருக்கிற தரித்திர புத்தி, பார்ப்பனர்களுக்கு இருக்கிற சூட்சி எல்லாம் சேர்ந்தால் கல்லுக் கடவுளானது மாத்திரமல்லாமல் இன்னமும் எது வேண்டுமானாலும் எதுவாகவும் ஆகிவிடும்.

மூர்த்தியாரின் கோவை பிரசங்கம்

தோழர் சத்தியமூர்த்தி கோவையில் 2.12.35ல் பேசும்போது,  ஈ.வெ.ரா. திட்டம்  கராச்சி திட்டத்தை தழுவிய திட்டம் என்றும்,

ஆனால் ஜஸ்டிஸ் கட்சி இப்போது ஒப்புக் கொண்டிருப்பது வேறு என்றும், ஜாதி மத பேதங்களையும் ஏழை, பணக்காரத் தன்மைகளையும் கிளப்பிவிட்டு ஜஸ்டிஸ் கட்சி ஓட்டு கேட்கிறது என்றும்,

காங்கிரஸ் ஜாதி மதப் பூசல்களையும் கிளப்பி விட்டு ஓட்டு சம்பாதிக்கவில்லை என்றும்,

ஜஸ்டிஸ் கட்சி 15 வருஷமாய் ஒன்றும் செய்யவில்லை என்றும்,

மந்திரிகள் ஏன் தங்கள் சம்பளங்களை குறைத்துக் கொள்ளவில்லை என்றும்,

இந்திய வருமானத்தில்  பாகம் ராணுவச் செலவுக்குப் போய் விடுகிறதென்றும்,

விவசாயிகளுக்கு ஒன்றும் செய்யவில்லை என்றும்,

வரியை குறைக்கவில்லை என்றும், இனிமேல் ஏதோ செய்வதாகச் சொல்லுவது நம்ப முடியாது என்றும் பேசி இருக்கிறார்.

திட்டத்தின் இரகசியம்

ஈ.வெ.ரா. திட்டத்தின் இரகசியத்தைப் பற்றி நாம் இதுவரை வெளியிட விரும்பவில்லை. இப்போதும் வெளியிட காலம் வரவில்லை. ஆனால் ஒன்று மாத்திரம் சொல்லுவோம்,  அத்திட்டங்கள் காங்கிரசுக்கு ஜீரணமாகாது என்று தக்க காங்கிரஸ் தலைவர்களால் தெரிந்த பிறகு தான் ஜஸ்டிஸ் கட்சிக்குக் கொடுத்து கட்டாயப்படுத்தப்பட்டது.

அதாவது, ஜாதி மதப் பாதுகாப்பையும், பழக்க வழக்க பாதுகாப்பையும் பற்றிய கராய்ச்சி தீர்மானத்தை எடுத்துவிடவும், சகல வகுப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் விகிதாச்சாரம் வழங்கவும், காங்கிரஸ் தலைவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இன்றாவது ஒப்புக் கொள்கிறார்களா என்று கேட்கின்றோம்.

ஆனால் ஜஸ்டிஸ் கட்சியார் ஜாதி மத பழக்க வழக்க பாதுகாப்புக்கு வாதாடவில்லை. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஜனசங்கையின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி இருக்க வேண்டுமென்பதை ஒப்புக் கொண்டார்கள்.

1934 M நவம்பர் மாதம் வரையில் அத்திட்டங்கள் காங்கிரசையும் ஜஸ்டிசையும் ஆகிய இரண்டு கட்சியையும் ஏலம் கூறிற்று. கோவை மாகாண காங்கிரஸ் கான்பரன்சில் விஷயாலோசனைக் கமிட்டியில் அத்திட்டங்கள் தள்ளப்பட்டுவிட்டன.

சென்னை மாகாண ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டில் அத்திட்டங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டன. ஆகவே இனியும் சத்தியமூர்த்தியாரோ காங்கிரஸ்காரரோ ஈ.வெ.ரா. திட்டம் கராச்சி திட்டம் என்றும் திருடப்பட்ட திட்டம் என்றும் மறுபடியும் சொல்லுவார்களா என்று கேட்கின்றோம்.

ஈ.வெ.ரா. திட்டத்தை மூர்த்தி ஒப்புக் கொள்ளுகிறாரா?

இன்றானாலும் சரி சத்தியமூர்த்தியார் ஜஸ்டிஸ் கட்சியார் ஒப்புக் கொண்டபடி தங்களது கராச்சி திட்டத்தில் உள்ள ஜாதி, மதம், பழக்கம், வழக்கம், பரம்பரைத் தொழில் ஆகியவைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கப் படும் என்று வாக்குறுதி கூறி இருக்கும் ஒப்பந்த தீர்மானத்தை எடுத்து விடவும், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஜனத்தொகைக்குத் தகுந்தபடி அரசியலிலும் பிரதிநிதித்துவத்திலும் கொடுப்பதாகவும் உள்ள திட்டத்தை ஒப்புக் கொள்ளவும் சம்மதிக்கிறார்களா? என்று கேட்கின்றோம்.

அந்தப்படிக்கு இல்லாத “”தலைவர்” ஒரு கூட்டம் முட்டாள்களையும், கூலிகளையும், காலிகளையும் பேராசைப் பிணங்களையும் தங்கள் கூட சேர்த்துக் கொண்டு சதா சர்வகாலம் நாட்டில் கலவரம் செய்து கொண்டு வருவதில் லாபம் என்ன? என்றும், இந்த முறையை அனுசரித்து வந்ததின் பயனாய் இதுவரை காங்கிரசாகட்டும், பார்ப்பனர்களாகட்டும் அடைந்த பயன் என்ன வென்றும் கேட்கின்றோம்.

காந்தி  ஆச்சாரியார் அஞ்ஞாதவாசம்

இன்றைய காங்கிரசின் நிலைமைக்கும், காங்கிரஸ்காரர்கள் நிலைமைக்கும், அதன் கொள்கையின் நிலைமைக்கும் தோழர்கள் காந்தியாரும், ராஜகோபாலாச்சாரியாரும் அஞ்ஞாத வாசம் செய்ய நேரிட்டதே உண்மையாய் நேரிடவில்லை என்று சொல்லுவதானாலும் அந்தப்படி விலகிக் கொண்டதாக வேஷம் போட்டாக வேண்டிய நிலைமையாவது ஏற்பட்டு விட்டதே அது ஒன்றே போதாதா? என்று கேட்கிறோம்.

தோழர் காந்தியார் காங்கிரசிலிருந்து விலகிவிட்டேன் என்று சொல்லியும், காங்கிரசில் தான் 4 அணா மெம்பராகக் கூட இருக்கவில்லை என்று சொல்லியும், விட்டு விலகிக்கொண்ட பின்பும் காந்தியார் பெயரைச் சொல்லி ஓட்டுக் கேட்கவும், அவர் “பெருமையை’ கால÷க்ஷமம் செய்து ஆள் சேர்க்கவுமான காரியம் செய்து காங்கிரஸ் பிழைக்க வேண்டியிருக்கும் நிலைமையே அதனுடைய சாவு குறித்த அறிகுறி போதாதா என்றும் கேட்கின்றோம்.

ஜஸ்டிஸ் கட்சியார் ஜாதி மத பேதத்தையும், ஏழை பணக்காரத் தன்மையையும், எடுத்துக் காட்டி ஓட்டுப் பெறுவதில் என்ன தப்பு? என்று கேட்கின்றோம்.

இல்லாத ஜாதி மத பேதத்தையும், இல்லாத ஏழை பணக்கார பேதத்தையும் அவர்கள் சொல்லிக் காட்டுகிறார்களா?

அல்லது இன்றுள்ள ஜாதி மத பேதமும், ஏழை பணக்காரத் தன்மையும் இப்படியே எஞ்ஞான்றும் இருக்க வேண்டுமா? இவை ஒழிக்கப்பட வேண்டாமா? என்று கேட்கின்றோம்.

காங்கிரசுக்காரர்கள் அவைகளைப் பற்றி பேசக்கூடாது என்பதி னாலேயே அவைகளை திருட்டுத்தனமாய் நிலைநிறுத்தப் பார்க்கிறார்கள் என்பது தானே அருத்தம்.

செருப்பு ஆண்டால் என்ன? பூட்ஸ் ஆண்டால் என்ன?

இந்த தேசத்தை யார் ஆண்டால் என்ன? ஒரு காலத்தில் ஒரு ஜோடி செருப்பு சிம்மாசனத்தில் இருந்து கொண்டு ஆண்ட ராஜ்ஜியம் என்றுதானே இந்நாட்டுக்குப் பெயர் இருந்து கொண்டு வருகிறது. அதற்கு ஆதாரமும் காட்டப்படுகிறதே.

செருப்பு ஆட்சியின் கீழ் குடிகளாய் இருந்தவர்களின் பரம்பரையர்கள் தானே இந்தியர்களாகிய நாம்? அப்படி இருக்கும்போது யார் ஆண்டால் என்ன? எந்த பூட்ஸ் ஆண்டால் என்ன?

ஜாதி பேதமும் ஏழை பணக்கார பேதமும் ஒழிந்துவிட்டால் தர்ம ராஜ்ஜியம் என்பதற்கு அப்புறம் வேறு என்ன வேண்டும் என்று தோழர் சத்தியமூர்த்தியாரைக் கேட்கின்றோம்.

அவை ஒழிந்தால் தங்கள் ஜாதிக்கு மதிப்புப் போய்விடும் என்பதோடு தங்கள் ஜாதிக்குப் பணம் கொடுக்கும் முட்டாள் பணக்காரன் போய்விடுவான் என்கின்ற பயமா? என்று கேட்கின்றோம்.

வரியும் சம்பளமும் குறைய வேண்டுமானால் ஜாதி பேதமும் ஏழை பணக்காரத் தன்மையும் ஒழிந்தால் ஒழிய கண்டிப்பாய் முடியவே முடியாது என்பது நமது அபிப்பிராயம். ஆதலால் தான் சுயமரியாதைக்காரர் திட்டத்திலும், ஜஸ்டிஸ்காரர் திட்டத்திலும் ஜாதி பேதமும் ஏழை பணக்காரத் தன்மையும் ஒழிய வேண்டும் என்பது தலை சிறந்து விளங்குகிறது.

ஜஸ்டிஸ் கட்சி இதுவரை என்ன செய்தது? என்று கேட்கின்றார்.

மனித சமூகத்தில் ஜாதி முறையில் ஒரு பெரிய புரட்சியை உண்டாக்கி விடவில்லையா?

இந்தியா தோன்றிய இவ்வளவு காலத்துக்கு காங்கிரஸ் தோன்றிய இவ்வளவு காலத்திற்கு வேறு யார் இந்த மாதிரியாக ஒரு புரட்சியைச் செய்தார்கள் என்று கேட்கின்றோம்.

காந்தியாரும் பறையன் தப்புக் கொட்டி ஆக வேண்டும் சக்கிலி செருப்பு தைத்துத்தான் ஆக வேண்டும், அதற்காகத்தான் நான் சுயராஜ்ஜியம் கேட்கின்றேன் என்று தானே சொன்னார்.

ஜஸ்டிஸார் செய்த வேலை

ஆனால் ஜஸ்டிஸ் கட்சிக்காரர் பறையனும் சக்கிலியும் குரு (உபாத்தியாயர்) ஆகலாம், கலக்டர் (க்ஷத்திரியன்) ஆகலாம், பணக்காரன் (வைசியன்) ஆகலாம், மந்திரி ஆகலாம் எதுவும் ஆகலாம் என்றும்,

பிராமணன் மாடு மேய்க்கலாம், பிணம் அறுக்கலாம், தாசி, வேசி, மாமா ஆகலாம் என்றும் செய்தார்களே.

இவைகள் எல்லாம் பார்ப்பனர்களுக்கும் அவர்கள் மக்களுக்கும் வெறுப்பாய் அலட்சியமாய் காணலாம். ஆனால் சூத்திரன் என்ற தலைப்பின் கீழும் பறையன் என்ற தலைப்பின் கீழும் சட்டப்படி மதப்படி வருபவர் களுக்கு இதைவிட வேறு என்ன நன்மை ஜஸ்டிஸ் கட்சி செய்ய வேண்டும்?

இதைவிட அசாத்தியமான காரியம் இதுவரை இந்திய நாட்டில் யார் செய்து அனுபவத்தில் கொண்டு வந்தார்கள் என்று கேட்கின்றோம்.

அதிக சம்பளம் ஏற்படுத்தினது யார்?

ஜஸ்டிஸ் கட்சியார் இல்லாதிருந்தால் இன்று காங்கிரசில் இத்தனை பார்ப்பனரல்லாதாராவது இருக்க முடியுமா என்கின்ற கேள்வி கேட்பதோடு, பார்ப்பனரல்லாதார்களில் 3ம் தரம், 4ம் தரம் ஆட்களும் கழிக்கப்பட்ட ஆட்களும் காங்கிரசில் முதல் தர ஆளுக்கு சரி சமமாகவும் முடியுமா? என்றும் கேட்கின்றோம்.

ஜஸ்டிஸ் கக்ஷி சம்பளம் அதிகம் வாங்குகிறார்கள் என்று பொறாமைப் படுகிறார் நமது சத்தியமூர்த்தியார்.

இது காங்கிரசுக்காரர்கள் செய்த அக்கிரமமே ஒழிய ஜஸ்டிஸ் செய்த அக்கிரமமல்ல.

காங்கிரஸ்காரர்கள் சமர்ப்பித்த 19 (னைன்டீன் மிமோராண்டம்) பேர் கோரிக்கைப்படி மிண்டோ மார்லி சீர்திருத்தத் திட்டப்படி வாங்கப்படும் சம்பளமே ஒழிய காங்கிரஸ்காரர்களின் தீர்மானப்படி வாங்குகிற சம்பளமே ஒழிய, இதுவரை காங்கிரஸ் தலைவரும், காரியதரிசிகளும் வாங்கி வந்த சம்பளம் தானே ஒழிய ஜஸ்டிஸ் கட்சியார் ஏற்படுத்திக் கொண்டதல்ல என்பதை ஒவ்வொருவரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

காங்கிரசுக்காரர்கள் ஒரு கதர் காரியதரிசிக்கு N 200300 ரூ. வீதம் சம்பளம் கொடுக்கவில்லையா? ஏழைகளுக்கு நாள் ஒன்றுக்கு 8 காசு வரும்படி உள்ள காரியத்துக்கு N 200, 300 ரூ. மேற்பார்வை ஆட்கள் வாங்கினால் மந்திரிகள் 3000, 4000 வாங்குவது அதிகமா? என்று கேட்கின்றோம்.

ராணுவச் செலவுக்கு யார் பொறுப்பு?

பாகம் ராணுவச் செலவுக்கு போகிறது என்று பிரலாபிக்கிறார். இந்த நிலைமை காங்கிரஸ் ஏற்பட்டு அது பொருப்பில்லாமல் பாமர மக்களையும் கூலிகளையும் தூண்டிவிட்டு தொல்லை விளைவித்ததின் பயனாய் பாதுகாப்புக்காக ஏற்படுத்த வேண்டியதாய் விட்டது என்று சர்க்கார் சொல்லுகிறார்களே இதை சத்தியமூர்த்தியார் ஆ÷க்ஷபிக்கிறாரா என்று கேட்கின்றோம்.

இவர் ஆட்சேபித்தால் மற்றொரு காங்கிரஸ் தலைவர் தோழர் அவனாசிலிங்கம் செட்டியார் அவர்கள் “”எங்களுக்கு பயந்து தான் அரசாங்கம் பாதுகாப்பு ஏற்படுத்திக் கொண்டது. காங்கிரசானது அரசாங்கத்தை நடுங்கச் செய்துவிட்டது” என்று சொல்லுகிறாரே இவர்கள் இருவரில் யார் புத்திசாலி என்று கண்டுபிடிக்க முடிகிறதா? என்று கேட்கின்றோம்.

ஆகவே எப்படியாவது ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதும், 500 கெஜ ஆழத்தில் புதைப்பதும் தங்கள் கொள்கையாய் கொண்ட சத்தியமூர்த்தி கூட்டத்தாரிடத்திலும், அவர்களது கூலிகளிடத்திலும் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.

குடி அரசு  தலையங்கம்  08.12.1935

 

You may also like...