வேண்டுகோள்
காங்கிரசுக்கு பல பத்திரிகைகள் இருக்கின்றன. அவைகள் பெரிதும் பார்ப்பனர்களாலும் அவர்களது நிபந்தனை அற்ற அடிமைகளாலும் நடத்தப்படுகின்றன. பார்ப்பனர்கள் பணமும் காங்கிரஸ் பணமும் அவைகளுக்கு தாராளமாய் உதவப்பட்டு வருகிறது.
ஆதலால் பார்ப்பனரின் வஞ்சம், சூழ்ச்சி, பொய் விஷமம் ஆகியவைகளை மனதார மறைத்து அவர்கள் திருப்திக்கும், கூலிக்கும் பார்ப்பனரல்லாதார் கட்சியையும், சமூகத்தையும், அவர்களுக்காக வேலை செய்யும் பத்திரிக்கைகளையும் வைதும், பழி கூறியும் விஷமப் பிரசாரம் செய்து வருகின்றன.
ஜஸ்டிஸ் கட்சித் திட்டத்தைப் பற்றிப் பழி கூறுவதும், அவர்களால் ஏற்பட்ட நன்மைகளை திரித்துக்கூறுவதும், அவர்களுக்கு சம்மந்தமில்லாத காரியத்தைப் பற்றி பழி கூறுவதுமே தொழிலாய்க் கொண்டிருக்கின்றன. பாமர மக்கள் இதையெல்லாம் சுலபமாக நம்பி ஏமாந்து போகிறார்கள்.
ஜஸ்டிஸ் கட்சிக்கும், பார்ப்பனரல்லாதார் சமூக நலனுக்கும் இன்று தினசரிப் பத்திரிகை இல்லை. வாரப் பத்திரிக்கைகளும் வெகு சிலவே.
ஆதலால் ஆங்காங்குள்ள பார்ப்பனரல்லாதார் “”குடி அரசு” “”விடுதலை” “”நகர தூதன்” முதலிய பத்திரிக்கைகளை ஜில்லாக்கள் தோறும் தாராளமாய்ப் பரவும்படி செய்ய ஏற்பாடு செய்யுங்கள்.
எலக்ஷன் போது பணம் செலவு செய்து வெற்றி பெற்றுவிடலாம் என்று தைரியம் கொள்ளுவது 100க்கு 90 ஏமாற்றமாகவே முடியும்.
பிரசாரத்தின் மூலம் நகத்தில் கிள்ளி எறிய வேண்டிய அற்ப விஷயம் பணத்தின் மூலம் கோடாலி போட்டு வெட்ட வேண்டிய அளவு கஷ்டத்தை உண்டாக்கி விடும். ஆங்காங்குள்ள ஜஸ்டிஸ் கட்சி தலைவர்களுக்கு பத்திரிக்கை விஷயங்கள் கொயினா மருந்து போல் தோன்றும். எலக்ஷனுக்கு 10 ஆயிரம் 20 ஆயிரம் செலவு செய்வது என்பது 110 டிகிரி உஷ்ண காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல் இருக்கும், தலைவர்களுக்கு இது பிறவிக் குணம்.
ஆதலால் மற்ற பார்ப்பனரல்லாத அபிமானிகளாகிய ஆங்காங் குள்ளவர்கள் தான் இவ்விஷயத்தில் கவலை எடுத்து உழைக்க வேண்டும்.
சந்தா சேர்க்கும் விஷயத்தில் வெட்கமோ தாக்ஷண்யமோ பாராமல் அறிமுகமுள்ள ஒவ்வொருவரையும் சந்தா சேர்க்க முயற்சிக்க வேண்டும்.
பார்ப்பனர்கள் பண முடிப்பு என்று பெயர் வைத்துக் கொண்டு 10 ஆயிரம் 20ஆயிரம் ஒரு லக்ஷம் ரூ. கூட சேர்த்து விடுகிறார்கள்.
நாம் அவர்களை பரிகாசம் செய்வதிலும், பழி கூறுவதிலும், கொடுத்தவனை முட்டாள் என்பதிலும் திருப்தி அடைகிறோம்.
நாமும் அதுபோல் பணம் வசூலிக்க இன்று முடியாவிட்டாலும், நமது பத்திரிக்கைகளை படிக்கும்படி கூட செய்யவில்லையானால் நமது சமூகம் விடுதலைக்கும் சுயமரியாதைக்கும் எப்படி தகுதி உடையதாகும்.
ஆதலால் இந்த டிசம்பர் மாதத்தில் ஒரு 1000 சந்தாதாரர்களாவது உயரும்படி செய்ய வேண்டியது அபிமானிகளின் கடமையாகும்.
குடி அரசு வேண்டுகோள் 15.12.1935
செட்டிநாடும் ஜஸ்டிஸ் கட்சியும்
பார்ப்பனப் பத்திரிகைகளின் விஷமமும் ஆத்திரமும்
செட்டிநாடு குமாரராஜா அவர்கள் மறுபடியும் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டதைப்பற்றி பார்ப்பனப் பத்திரிகைகள் விஷமப் பிரசாரம் செய்து மறுபடியும் ஜஸ்டிஸ் கட்சிக்குள் கலகம் ஏற்படாதா என்று ஆசைப்படுகின்றன. சில பத்திரிகைகள் பொப்பிலியின் சரணாகதி என்று எழுதின. சில பத்திரிகைகள் பொப்பிலி மன்னிப்பு கேட்டுக் கொண்டார் என்று எழுதின.
கடைசியாக சேர்த்துக் கெள்ளப்பட்ட சம்பவத்தை ஒரு பத்திரிகை பொப்பிலியின் தோல்வி என்றும் எழுதியிருக்கிறது. ஏதாவது ஒரு பொதுநலத்தை உத்தேசித்து ஒற்றுமை ஏற்படுங்காலையில் யார் தோற்றார் யார் ஜெயித்தார் என்கின்ற பிரச்சினையைப் பற்றிய விஷமங்கள் அவ்வொற்றுமையின் விரோதிகளாலேயே தான் அதிகமாய் ஏற்படும்.
இந்த ஒற்றுமைப் பிரச்சினையானது மாஜி கவர்னர் சர். மகம்மது உஸ்மான் அவர்கள் முயற்சியால் ஏற்பட்டதாகும். அவரது முயற்சிக்கு உள்ள முக்கிய காரணம் இப்போது வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
சர். உஸ்மான் அவர்கள், குமாரராஜாவை சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றும், பழமை விஷயங்கள் சரியோ, தப்போ என்பதைப் பற்றி யாரும் கவனிக்காமல் மறந்துவிடவேண்டும் என்றும் சொல்லி ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களையெல்லாம் கேட்டுக் கொண்டார்.
அந்தப்படியே அதற்காக ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. குமாரராஜா அவர்களும் அக்கூட்டத்துக்கு வந்தார்.
சர். உஸ்மான் அவர்கள் “”தேசத்தின் நன்மைக்கு ஆக ஒற்றுமையுடன் சேர்ந்து வேலை செய்யுங்கள்” என்றும் சொன்னார்.
அதுபோலவே பொப்பிலி ராஜா அவர்கள் சர். உஸ்மான் அவர்கள் வேண்டுகோளை மதித்து, பழைய சங்கதிகளை மறந்து செட்டிநாடு குமாரராஜா அவர்களை வரவேற்பதோடு அவரது கூட்டுறவை பாராட்டுகிறேன் என்றும் சொன்னார்.
குமாரராஜா அவர்களும் பழைய சங்கதிகளை மறந்து பொப்பிலி ராஜாவின் சினேக உணர்ச்சியை பாராட்டி ஒத்துழைக்க விரும்புகிறேன் என்று சொன்னார். இதுதான் ராஜி சடங்கில் காணப்படுகிறது. இதில் யாருக்கு தோல்வி? யாருக்கு வெற்றி? என்று கேட்கின்றோம்.
குமாரராஜா ஜஸ்டிஸ் கட்சி கூட்டத்துக்கு வந்த பெருந்தன்மையை உத்தேசித்து அவரைப் பற்றிய ஜஸ்டிஸ் சட்டசபை கக்ஷி 11.12.34ந் தேதி நடவடிக்கைகளை புஸ்தகத்தில் அடித்து விடுவது என்று பெருந்தன்மையாய் தீர்மானித்துக் கொண்டார்கள்.
அதுபோலவே ஜஸ்டிஸ் ஆசிரியரும் ஜஸ்டிஸ் பத்திரிகையில் ஏதாவது எழுதி இருந்தால் பின் வாங்கிக் கொள்வதாகவும் வருத்தப்படுவ தாகவும் தெரிவித்திருக்கிறார்.
இவை எல்லாம் செட்டிநாட்டு குமாரராஜா அவர்கள் துணிந்து வந்துவிட்டதால் பிறகு அவரிடம் மனிதத் தன்மையை காட்டிக் கொள்ளவும், அவரை கௌரவப்படுத்தவும் ஏற்பட்டவைகளாகும். எப்படி இருந்தாலும் குமாரராஜா அவர்கள் சேர்த்துக் கெள்ளப்பட்டதும் கௌரவிக்கப்பட்டதும் எல்லாம் ஒரு பொதுநலத்தை உத்தேசித்தே ஒழிய மற்றபடி யாருடைய சுயநலத்தையும் உத்தேசித்தல்ல என்பது மாத்திரம் உறுதி என்பதை நாம் அழுத்தமாகக் கூறுவோம். இதற்கு ஆக பார்ப்பனப் பத்திரிகைகள் இம்மாதிரி விஷமத்தனமும், ஆத்திரமும் காட்டுவது அவைகளின் அற்ப புத்தியை தெள்ளென விளக்குகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
குடி அரசு துணைத் தலையங்கம 15.12.1935